இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய யஷஸ்வி ஜெய்ஸ்வால், “80, 15, 209, 17, 10, 214, 73, 37, 57” என இரண்டு இரட்டைசதங்கள், 3 அரைசதங்கள் என குவித்து 712 ரன்கள் குவித்து அசத்தினார்.
கிட்டத்தட்ட அரைநூற்றாண்டுக்கு பிறகு ஒரு இந்திய வீரர் ஒரு டெஸ்ட் தொடரில் 700 ரன்களை குவிப்பது இதுவே முதல்முறை. 1970, 1978ம் ஆண்டுகளில் இரண்டுமுறை 700 ரன்கள் அடித்திருந்த சுனில் கவாஸ்கருக்கு பிறகு, யஷஸ்வி ஜெய்ஸ்வால் மட்டுமே இரண்டாவது இந்திய வீரராக 700 ரன்களுக்கு மேல் பதிவுசெய்து அசத்தியுள்ளார். இதன்மூலம் ஒரு டெஸ்ட் தொடரில் 692 ரன்கள் அடித்திருந்த விராட் கோலியின் சாதனையை ஜெய்ஸ்வால் முறியடித்தார்.
இந்நிலையில் தான் ஐசிசியின் பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த ஆண் கிரிக்கெட்டர் விருது பட்டியலில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் பெயரும் இடம்பெற்றது. இந்தப்பட்டியலின் இறுதியில் கேன் வில்லியம்சன், ஜெய்ஸ்வால் மற்றும் பதும் நிசாங்கா மூன்று பேருக்கும் இடையே போட்டி நிலவியது.
கடந்த பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில், முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் இரண்டு சதங்களை பதிவுசெய்த வில்லியம்சன், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 3 சதங்களை பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் கடைசி 7 டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக 7 சதங்களை பதிவுசெய்த வீரர் என்ற இமாலய சாதனையை வில்லியம்சன் படைத்தார்.
இந்நிலையில் பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருது கேன் வில்லியம்சன் மற்றும் ஜெய்ஸ்வால் இருவருக்கும் கடினமான போட்டியாகவே இருந்தது. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் 3 சதங்களை அடித்திருக்கும் ஜெய்ஸ்வால், அந்த மூன்று சதங்களையும் 171, 209, 214 என கன்வெர்ட் செய்து அசத்தியுள்ளார். ஒரு கடினமான போட்டியின் முடிவில் கேன் வில்லியம்சனை வீழ்த்தி, யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த ஆண் கிரிக்கெட் விருது வழங்கப்பட்டுள்ளது.
சிறந்த வீரருக்கான ஐசிசி விருதை வாங்கிய பிறகு பேசிய ஜெய்ஸ்வால், “ஐசிசி விருதை பெறுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். எதிர்காலத்தில் நான் இன்னும் அதிக ஐசிசி விருதுகளை பெறுவேன் என்ற நம்புகிறேன்” என்று தன்னம்பிக்கையுடன் கூறியுள்ளார். பிப்ரவரி மாதத்திற்கான ஐசிசி பெண் கிரிக்கெட்டருக்கான விருது ஆஸ்திரேலியாவின் ஆல்-ரவுண்டர் அனாபெல் சதர்லேண்ட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது.