இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. மேற்கிந்தியத் தீவுகளுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்தியா விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஜூலை 12ஆம் தேதி தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் 150 ரன்களில் சுருண்டது. அஸ்வின் 5 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இதன்பின், முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா களமிறங்கினர். இருவரும் நிதானமாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இருவரும் அடுத்தடுத்து அரை சதம் கடந்த நிலையில் 215 பந்துகளைச் சந்தித்த ஜெய்ஸ்வால் 11 பவுண்டரிகளுடன் சதம் விளாசினார். இதன் மூலம் அறிமுக போட்டியில் சதம் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார்.
ஜெய்ஸ்வால் சதம் அடித்த சிறிது நேரத்தில், இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவும் சதம் அடித்தார். 220 பந்துகளைச் சந்தித்த ரோகித் 10 பவுண்டரி 2 சிக்ஸர்களுடன் தனது 10-வது சதத்தை பதிவு செய்தார். சதம் அடித்த அடுத்த பந்திலேயே ரோகித் கேட்ச் ஆனார்.
இரண்டாம் நாள் முடிவில் ஜெய்ஸ்வால் 143 (350), விராட் கோலி 36 (96) ரன்கள் எடுத்து களத்தில் உள்ளனர். மொத்தமாக 312/2 ரன்கள் எடுத்து இந்திய அணி மிக வலுவான நிலையில் உள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணியை விட இந்திய அணி 162 ரன்கள் முன்னிலையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் விளாசிய 17 ஆவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார் ஜெய்ஸ்வால்.
இதற்கு முன்பாக ஸ்ரேயாஸ் ஐயர் 2021 ஆம் ஆண்டு கான்பூரில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான தன்னுடைய அறிமுக போட்டியில் சதம் அடித்து இருந்தார்.
கேப்டன் ரோகித் சர்மாவும் இதே வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற தன்னுடைய அறிமுகப் போட்டியில் சதம் விளாசி இருந்தார்
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அதிக பார்ட்னர்ஷிப் (229 ரன்கள்) அமைத்த தொடக்க வீரர்கள் என்ற பெருமையை ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால் ஜோடி பெற்றுள்ளது. இதற்கு முன்பு 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற கிராஸ் ஐஸ்லெட் டெஸ்ட் போட்டியில் சேவாக் - வஸிம் ஜாபர் ஜோடி 159 ரன்கள் குவித்ததே அதிகபட்சமாக இருந்து வந்தது.
அப்பாஸ் அலி பாய்க் 112, Vs ENG, 1959
சுரேந்தர் அமர்நாத் 124, Vs NZ, 1976
பிரவின் அம்ரே 103, Vs SA, 1992
சவுரவ் கங்குலி 131, Vs ENG, 1996
வீரேந்தர் சேவாக் 105, Vs SA, 2001
சுரேஷ் ரெய்னா 120, Vs SL, 2010
ஜெய்ஸ்வால் 143*, Vs WI, 2023
ஷிகர் தவான் 187, Vs AUS, 2013
பிரித்வி ஷா 134, Vs WI, 2018
ஜெய்ஸ்வால் 143* Vs WI, 2023
டெஸ்ட் போட்டியில் அறிமுக ஆவதற்கு முன்பாக 15 முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ளார் ஜெய்ஸ்வால். இருப்பினும் அவர் 9 சதங்கள் விளாசி 80 பேட்டிங் சராசரியுடன் அவர் உள்ளார். குறிப்பாக கடந்த ஆண்டு நடைபெற்ற துலிப் டிராபியின் இறுதிப் போட்டியில் 265 ரன்கள் குவித்து அசத்தி இருந்தார்.