இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரண்டு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டி ஹைதராபாத்தில் நடைபெற்ற நிலையில், தோல்விபெறக்கூடிய நிலையிலிருந்து தங்களுடைய “பாஸ்பால் அட்டாக்” மூலம் ஒரு வரலாற்று வெற்றியை பதிவுசெய்தது இங்கிலாந்து அணி.
முதல் இன்னிங்ஸில் 190 ரன்கள் முன்னிலை பெற்றபோதும் கூட இந்திய அணியால் வெற்றிபெற முடியவில்லை. முதல் இன்னிங்ஸில் 80 ரன்கள் அடித்தபோது ஆட்டமிழந்த இந்தியாவின் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஒரு பெரிய ஆட்டத்தை தவறவிட்டார்.
பின்னர் இரண்டாவது இன்னிங்ஸில் நல்ல தொடக்கம் கிடைத்தபோதும் எதிர்பாராத விதமாக கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஒருவேளை முதல் போட்டியில் ஜெய்ஸ்வால் நிலைத்து நின்று ஆடியிருந்தால் இந்திய அணி நிச்சயம் வெற்றியின் பாதையில் சென்றிருக்கும்.
இந்நிலையில் முதல் டெஸ்ட்டில் 80 ரன்களில் சதத்தை தவறவிட்ட யஷஸ்வி ஜெய்ஸ்வால், அதற்கும் சேர்த்து பதிலடி கொடுக்கும் வகையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் சதமடித்து அசத்தியுள்ளார்.
5 போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி 1-0 என முன்னிலை பெற்ற நிலையில், சொந்த மண்ணில் தொடரை காப்பாற்ற வேண்டிய இக்கட்டான நிலையில் இந்திய அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் களமிறங்கியது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார்.
முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியில், கேப்டன் ரோகித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் நிதானமான ஆட்டத்தை விளையாடினர். எப்போதும் ஒரு டெஸ்ட் போட்டியின் முதல் செஸன் நிதானமாக ஆடவேண்டிய செஸன் என்பதால் அதற்கான பொறுப்புடன் இந்தியாசெயல்பட்டது. 16 ஓவர்களில் 40 ரன்கள் அடித்த ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் கூட்டணி, நீண்டதூரம் பயணிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அறிமுக போட்டியில் பந்துவீசிய இங்கிலாந்து ஸ்பின்னர் சோயப் பஷீர் ரோகித்தை 14 ரன்னில் வெளியேற்றி முதல் விக்கெட்டை எடுத்துவந்தார்.
பின்னர் களமிறங்கிய சுப்மன் கில், ஜெய்ஸ்வாலுடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கில் கடந்த 10 டெஸ்ட் போட்டிகளில் ஒன்றில்கூட அரைசதம் அடிக்காத நிலையில், ஒரு பெரிய எதிர்ப்பார்ப்பு அவர் மீது எழுந்தது. ஆனால் இந்த போட்டியிலும் 34 ரன்களில் வெளியேறிய அவர் சொதப்பினார். அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழ பொறுப்பு யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் மீது அதிகமானது. உடன் ஸ்ரேயாஸ் ஐயரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த, இந்த கூட்டணி 90 ரன்கள் பார்ட்னர்ஷிப்புக்கு சென்றது.
150 பந்துகளை சந்தித்த ஜெய்ஸ்வால் 11 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 94 ரன்களில் பேட்டிங் செய்துகொண்டிருந்தார். அப்போது ஹார்ட்லி வீசிய 49வது ஓவரின் 3வது பந்தை சிக்சருக்கு பறக்கவிட்ட ஜெய்ஸ்வால், தன்னுடைய முதல் ஹோம் சதத்தை அசத்தலாக எடுத்துவந்தார். வெறும் 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கும் ஜெய்ஸ்வாலுக்கு இது 2வது டெஸ்ட் சதமாகும்.
கடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான பயணத்தில் அறிமுக போட்டியிலேயே சதமடித்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் 171 ரன்கள் அடித்து அசத்தினார். இந்நிலையில் தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக தன்னுடைய முதல் ஹோம் சதத்தை எடுத்துவந்து அசத்தியுள்ளார் ஜெய்ஸ்வால். தொடர்ந்து களத்தில் ஆடிவரும் அவர் 235 பந்துகளில் 17 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 165* ரன்கள் எடுத்து ஆடிவருகிறார். இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 300 ரன்களுடன் ஆடிவருகிறது.