யஷஸ்வி ஜெய்ஸ்வால் ICC
கிரிக்கெட்

’கிரிக்கெட் Brand ஆகணும்னு 11 வயசுல மும்பைக்கு வந்துட்டான்’ - பானிபூரி விற்ற ஜெய்ஸ்வால் கடந்த பாதை!

சச்சின் டெண்டுல்கர் போல மாற வேண்டும் என்ற பெருங்கனவோடு மும்பை வந்த 11 வயது சிறுவனை, தங்குவதற்கு இடமில்லாமல், சாப்பிடுவதற்கு பணம் கூட இல்லாமல் விரட்டிய வாழ்க்கையை இன்று வென்று காட்டியுள்ளார் யஷஸ்வி ஜெய்ஸ்வால்.

Rishan Vengai

16 வயதில் கிரிக்கெட்டில் அறிமுகமாகி ”இந்திய கிரிக்கெட்டின் கடவுள்” என்று போற்றப்படும் சச்சின் டெண்டுல்கரும், கிரிக்கெட் விளையாட்டும் தான் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு உணவு, உணர்வு என இரண்டுமாகவும் இருந்துள்ளது. வறுமை நிறைந்த குடும்பம், உடன்பிறந்தவர்கள் 6 பேருடன் கடினப்படகூடிய வாழ்க்கை சூழல் என பல தடைகள் இருந்தபோதும் கிரிக்கெட்டை விளையாடுவதற்கு மட்டும் விடுமுறை விட்டதேயில்லையாம் ஜெய்ஸ்வால்.

சிறுவனாக வளரும் போதே ”கிரிக்கெட் இல்லை என்றால் வாழ்க்கையே இல்லை” என்று முடிவு செய்த ஜெய்ஸ்வால், தன்னுடைய 11 வயதில் குடும்பத்தையும், நண்பர்களையும் விட்டு உத்திரபிரதேசத்திலிருந்து மும்பைக்கு கிளம்பி வந்துள்ளார்.

11 வயதில் மும்பை வந்து பல்வேறு இன்னல்களை சந்தித்த ஜெய்ஸ்வால்!

ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கையில் வந்திருந்தாலும், தான் கொண்ட லட்சியத்திற்காக 11 வயதியிலேயே எவ்வளவு வேண்டுமானாலும் உழைப்பதற்கு ஜெய்ஸ்வால் தயாராக இருந்தார். படுப்பதற்கு இடமில்லாமல், உண்ணுவதற்கு உணவில்லாமல் பட்டினியோடு மும்பையில் அலைந்து திரிந்த யஷஸ்வி, “சச்சின் டெண்டுல்கர்” போன்ற கிரிக்கெட் Brand-ஆக வேண்டும் என்ற கனவை மட்டும் விட்டுவிடவில்லை.

மும்பை ஆசாத் மைதானத்தில் கிரிக்கெட் பயிற்சி செய்வதற்கு கடைகளில் கிடைத்த அனைத்து வேலைகளையும் செய்து பணம் சேர்த்த ஜெய்ஸ்வால், போதிய பணம் பத்தவில்லை என்பதற்காக பால் பண்ணை ஒன்றில் வேலை பார்த்துள்ளார். அங்கிருந்து அடிக்கடி கிரிக்கெட் விளையாடுவதற்கு சென்றுவிடுவதால் அவரை அங்கிருந்தும் துரத்தியுள்ளார்கள்.

அடுத்து என்ன செய்வதென தெரியாமல் தவித்துவந்த அவர், எப்படியோ அடித்துபிடித்து அனுமதி வாங்கி ஆசாத் மைதானத்தில் உள்ள டெண்ட் கூடாரத்தில் தங்கியுள்ளார். மழைக்காலங்களில் வெள்ளத்தின் அடைக்கலமாக டெண்ட் மாறினாலும், அதுவே கோடைக்காலத்தில் வெந்து தணிக்கும் இடமாக இருக்கும் எனவும் கூறுகிறார் ஜெய்ஸ்வால். இங்கு தங்கியிருந்த போது தான் ஒருவேளை உணவிற்கு கூட பணமில்லாமல் பானிபூரி விற்பனை செய்யும் வேலையை ஜெய்ஸ்வால் பார்த்துள்ளார். பானிபூரி விற்கும் போது, தன்னுடன் கிரிக்கெட் பயிற்சி மேற்கொள்ளும் சக மாணவர்களும் பானிபூரி சாப்பிட வரும் போது தான், வறுமையின் கொடுமையை அதிகமாக உணர்ந்துள்ளார் ஜெய்ஸ்வால்.

யஷஸ்வி ஜெய்ஸ்வால்

அந்த கொடுமை மாத்திரமில்லாம், டெண்ட்டில் தங்கிருந்த போது கடையில் வேலை செய்வதுமட்டுமில்லாமல் உடன் தங்கியிருந்த தோட்டக்காரர்களாலும் ”மோசமாக நடத்தப்படுவது, உணவு சமைக்கும்படி கட்டாயப்படுத்தப்படுவது, கழிப்பறை வசதியில்லாத நிலைமை, பொருளாதார ரீதியிலோ மனரீதியிலோ உதவியில்லாமல் அவதி” என பல்வேறு கடினங்களையும், மன வேதனைகளையும் எதிர்கொண்டுள்ளார் ஜெய்ஸ்வால்.

ஜெய்ஸ்வால்-க்கு திறைமையால் கிடைத்த உதவி!

எல்லா இன்னல்களையும், அவமானங்களையும் சந்தித்த போதும் கிரிக்கெட்டில் மட்டும் முழு உழப்பையும் அயராது செலுத்திவந்துள்ளார் யஷஸ்வி. ஜெய்ஸ்வாலின் கிரிக்கெட் திறமையையும் ஆர்வத்தையும் உற்றுக்கவனித்த உள்ளூர் கிரிக்கெட் பயிற்சியாளர் ஜ்வாலா சிங், ஒருகட்டத்தில் அவரின் கிரிக்கெட் வழிகாட்டியாக மாறினார். ஜெய்ஸ்வாலுக்கு தங்குமிடம் ஏற்பாடு செய்து தன்னுடனே வைத்துக்கொண்ட அவர், பயிற்சியாளராகவும் மாறி அனைத்து உதவியையும் செய்துள்ளார். அன்று முதல் இன்று வரை ஜெய்ஸ்வாலின் கிரிக்கெட் கேரியருக்கு பக்கபலமாக இருந்து வருகிறார்.

ஜ்வாலா சிங்கின் உதவியால் கிரிக்கெட்டில் மிளிர்ந்த ஜெய்ஸ்வால் 17 வயதிலேயே லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் இரட்டை சதம் விளாச, இளம் வயதில் இந்த சாதனையை படைத்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார். அப்படியே முதல்தர கிரிக்கெட், ரஞ்சி கோப்பை என எங்கும் நிற்காத அவருடைய பயணம் நேராக 2020 யு19 உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு சென்றது. அங்கு பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதிப்போட்டியில் சதமடித்த அவர் இந்திய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களை திரும்பி பார்க்கவைத்தார்.

ஐபிஎல்லில் சோபிக்காத போது கதறி அழுத ஜெய்ஸ்வால்!

அங்கிருந்து அவருடைய வளர்ச்சி ஐபிஎல்லை நோக்கி சென்றது, ஆனால் முதல் ஐபிஎல் தொடரில் உடல்நிலை சரியில்லாததால் ஜெய்ஸ்வாலால் சரியாக விளையாடமுடியாமல் போனது. “அப்போது கிடைத்த வாய்ப்பும் போய்விட்டதே என உடல்நிலை சரியில்லாத போதும் கதறி அழுததாக” பின்னர் அவருடைய பயிற்சியாளர் தெரிவித்தார். ஆனால் அவரின் திறமை மீது நம்பிக்கை வைத்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அவரை 2021 ஐபிஎல் தொடரில் விளையாட அனுமதித்தது.

Yashasvi Jaiswal

அப்போது உலகத்தரம் வாய்ந்த பவுலர்களுக்கு எதிராக அதிரடியில் மிரட்டிய ஜெய்ஸ்வால், உலகம் முழுக்க உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் பார்வையையும் தன்மீது படவைத்தார். அதற்கு பிறகு டி20 போட்டியில் ஒரு சிதறடிக்கும் தொடக்க வீரராக தன்னை ஐபிஎல்லில் நிலைநிறுத்துக்கொண்டார் யஷஸ்வி. அவருடைய ஹிட்டிங் திறமைக்கும் தன்னுடைய பயிற்சியாளர் தான் காரணம் என சொல்லும் ஜெய்ஸ்வால், “லாங் ஆனில் ஃபீல்டரை நிறுத்திவிட்டு அந்த திசையில் தான் சிக்சர் அடிக்க வேண்டும் என தொடர்ந்து ஆடவைப்பார்” என தெரிவித்தார்.

அப்படி உருமாறிய ஜெய்ஸ்வால் தான், பாஸ்பால் ஆட்ட முறையால் பல நாடுகளை வீழ்த்திய இங்கிலாந்து அணிக்கே, அதிரடி ஆட்டம்னா இதுதான் என்று 12 சிக்ஸர், 14 பவுண்டரியுடன் 214 ரன்கள் குவித்து பாடம் எடுத்துள்ளார். இரண்டாவது இன்னிங்சில் இரட்டை சதமா.. என்னப்பா ஜெய்ஸ்வால்.. என்று இங்கிலாந்து அணி வீரர்களே மூக்கில் விரல் வைத்திருப்பார்கள்.

அதுவும், ஜாம்பவான் பவுலர் ஆண்டர்சன் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர் விளாசியதெல்லாம் தனி ரகம். ஒரே தொடரில் இரண்டு இரட்டை சதங்களை விளாசி இந்திய ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்ட ஜெய்ஸ்வால், 147 வருட கிரிக்கெட் வரலாற்றில் முதல் வீரராக தன்னுடைய குருவான ரோகித் சர்மாவை சிக்ஸ் ஹிட்டிங்கில் பின்னுக்கு தள்ளியுள்ளார்.

147 வருட கிரிக்கெட்டில் முதல் வீரராக உலக சாதனை!

இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் ”7 டெஸ்ட் போட்டிகளில் 3 சதம், 2 இரட்டை சதம், 3 அரைசதங்களை” அடித்து தவிர்க்கவே முடியாத வீரராக மாறியுள்ளார் ஜெய்ஸ்வால். இந்திய அணியின் அதிரடி ஓப்பனராக இருந்த விரேந்திர சேவாக்கின் மறு வடிவமாக பார்க்கப்படும் யஷஸ்வி, ஒரு டெஸ்ட் தொடரில் 22 சிக்சர்களை அடித்து 147 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் வீரராக உலக சாதனை படைத்து அசத்தியுள்ளார்.

அதுமட்டுமல்லால் ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் அதிக சிக்சர்கள் (12) அடித்து பாகிஸ்தான் வீரர் இம்ரான் கானின் 28 வருட சாதனையை சமன் செய்துள்ளார். அத்துடன் ஒரு டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இரட்டை சதமடித்த 6வது இந்திய வீரராக மாறி சாதனைக்கு மேல் சாதனை படைத்து அசத்தியுள்ளார்.

jaiswal

தன்னுடைய அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே சதமடித்த பிறகு ஊரிலிருக்கும் தன்னுடைய தந்தைக்கு போன் செய்த ஜெய்ஸ்வால், அதிகாலை 4 மணிக்கு பேசிக்கொண்டிருக்கும் போதே அழ ஆரம்பித்துவிட்டாராம். ”சிறுவயதிலிருந்து கஷ்டபட்டத்தை நினைத்தானா இல்லை வேறெதுவுமா என்பது தெரியவில்லை, அவன் முதல் சதமடித்த பிறகு போன் செய்து அழ ஆரம்பித்துவிட்டான். அவனுடன் சேர்ந்து நானும் அழ ஆரம்பித்துவிட்டேன்” என்று அவருடைய தந்தை கூறியிருந்தார்.

jaiswal

"முயற்சி செய்தால் சமயத்தில் முதுகு தாங்கும் இமயத்தை” என்ற வரிகளுக்கு ஏற்ப கடுமையான உழைப்பையும், முயற்சியையும் போட்ட ஜெய்ஸ்வால், “அவன மும்பைல நிமிர்ந்தா அடிச்சாங்க, கேள்வி கேட்டா அடிச்சாங்க, பார்க்குற இடத்துலலாம் அடிச்சாங்க.. ஆனா ஒருநாள் அவன் திரும்பி அடிக்க ஆரம்பிச்சான் யாராலையும் தடுத்து நிறுத்த முடியல” என்ற வசனத்திற்கேற்ப தன்னை கிரிக்கெட் உலகில் தவிர்க்கவே முடியாத வீரராக நிலைநிறுத்தியுள்ளார். கிரிக்கெட்டில் “சச்சின் டெண்டுல்கர்” போன்ற Brand ஆகணும் என்ற ஜெய்ஸ்வாலின் கனவு மெய்யாக வாழ்த்துக்கள்!