ஜெய்ஸ்வால் - ரவிசாஸ்திரி - சச்சின் web
கிரிக்கெட்

3 இந்தியர்களால் மட்டுமே படைக்கப்பட்ட சாதனை! ரவிசாஸ்திரி, சச்சினை தொடர்ந்து 4வது வீரரான ஜெய்ஸ்வால்!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சதமடித்த பிறகு, ரவிசாஸ்திரி, சச்சின் முதலிய ஜாம்பவான் வீரர்கள் மட்டுமே படைத்திருந்த சாதனையை தன்வசமாக்கினார் இளம்வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால்.

Rishan Vengai

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் போட்டியில் வெற்றிபெற வேண்டிய இடத்திலிருந்து இந்தியா தோல்வியை தழுவியது. இதன்மூலம் இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது இங்கிலாந்து அணி. சொந்த மண்ணில் தொடரை சமன்செய்யவேண்டிய கட்டாயத்தில், விசாகப்பட்டினத்தில் நடைபெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடிவருகிறது.

முதல் டெஸ்ட் போட்டியில் 80 ரன்கள் அடித்தபோதும் சதத்தை தவறவிட்ட ஜெய்ஸ்வால், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். 249 பந்துகளில் 179* ரன்களுடன் ஆடிவரும் ஜெய்ஸ்வால் ஒரு பிரத்யேக சாதனையில் இந்திய அணியின் ஜாம்பவான்களான ரவிசாஸ்திரி மற்றும் சச்சின் டெண்டுல்கருடன் இணைந்துள்ளார்.

6 டெஸ்ட் போட்டிகளில் 2 சதங்கள், 2 அரைசதங்கள்!

முதல் போட்டியில் கையில் இருந்த ஆட்டத்தை தவறவிட்டாலும், இரண்டாவது போட்டியில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா, கில், ஸ்ரேயாஸ் முதலிய வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினாலும் மறுமுனையில் ஆட்டத்தை தன் தோள்களில் சுமந்து எடுத்துச்சென்றார்.

150 பந்துகளை சந்தித்த ஜெய்ஸ்வால் 11 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 94 ரன்களில் பேட்டிங் செய்துகொண்டிருந்தார். அப்போது ஹார்ட்லி வீசிய 49வது ஓவரின் 3வது பந்தை சிக்சருக்கு பறக்கவிட்ட ஜெய்ஸ்வால், தன்னுடைய முதல் ஹோம் சதத்தை அசத்தலாக எடுத்துவந்தார். வெறும் 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கும் ஜெய்ஸ்வாலுக்கு இது 2வது டெஸ்ட் சதமாகும்.

கடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான பயணத்தில் அறிமுக போட்டியிலேயே சதமடித்த யஷஸ்வி 171 ரன்கள் அடித்து அசத்தினார். இந்நிலையில் தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக இரண்டாவது டெஸ்ட் சதத்தை எடுத்துவந்து அசத்தியுள்ளார். 6 போட்டிகளில் விளையாடியிருக்கும் ஜெய்ஸ்வால் 63 சராசரியுடன் 2 சதங்கள், 2 அரைசதங்களையும் அடித்துள்ளார். தொடர்ந்து களத்தில் ஆடிவரும் அவர் 253 பந்துகளில் 17 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 177* ரன்கள் எடுத்து ஆடிவருகிறார். இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 323 ரன்களுடன் ஆடிவருகிறது.

ரவிசாஸ்திரி, சச்சின் உடன் 4வது வீரராக இணைந்த ஜெய்ஸ்வால்!

22 வயது வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் சொந்த மண்ணில் மட்டுமல்லாமல் வெளிநாட்டு மண்ணிலும் டெஸ்ட் சதத்தை பதிவுசெய்து அசத்தியுள்ளார். இதன்மூலம் 23 வயது எட்டுவதற்குள் இத்தகைய சாதனையை படைத்த 4வது வீரராக மாறியுள்ளார் ஜெய்ஸ்வால். இதுவரை 23 வயது நிறைவதற்குள் ஹோம் மற்றும் வெளிநாட்டு மண்களில் டெஸ்ட் சதமடித்த இந்திய வீரர்கள் பட்டியலில், ரவி சாஸ்திரி, சச்சின் டெண்டுல்கர், வினோத் காம்ப்ளி முதலிய மூன்று வீரர்கள் மட்டுமே இருந்துவந்தனர்.

ravi shastri

இந்நிலையில்தான் 4வது வீரராக ஜாம்பவான்களின் பிரத்யேக சாதனை பட்டியலில் இணைந்துள்ளார் ஜெய்ஸ்வால். அதுமட்டுமல்லாமல் இன்றைய போட்டியில் ஜெய்ஸ்வால் இரட்டை சதமடித்தால் குறைவான வயதில் இரட்டை சதமடித்த 3வது இந்திய வீரர் என்ற சாதனையை படைப்பார். முதலில் 21 வயதில் வினோத் காம்ப்ளி, சுனில் கவாஸ்கர் இருக்கும் நிலையில், 22 வயதில் அடிக்கும் மூன்றாவது இந்திய வீரராக ஜெய்ஸ்வால் இருப்பார்.!