ஜெய்ஸ்வால், ராகுல், சச்சின் pt web
கிரிக்கெட்

சிக்ஸ் அடித்து சதம்.. சச்சின் சாதனை சமன்.. காட்டாற்று வெள்ளமான ஜெய்ஸ்வால்.. திணறும் ஆஸ்திரேலியா!

ஆஸ்திரேலியா உடனான பார்டர் கவாஸ்கர் தொடரில் முதல் டெஸ்ட்டின் இரண்டாவது இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால் சிக்ஸ் அடித்து சதத்தினை பூர்த்தி செய்துள்ளார்.

Angeshwar G

ராகுல் - ஜெய்ஸ்வால் அதிரடி

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடுகிறது.

முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நேற்று தொடங்கிய நிலையில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 150 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல்அவுட்டானது. அதனைத்தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா அணியும் இந்தியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 104 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது. பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

கேஎல் ராகுல் - ஜெய்ஸ்வால்

ஆஸ்திரேலியாவை தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணி விக்கெட்டையே விட்டுக்கொடுக்காமல் அதிரடியாக ஆடியது. இரண்டாம் நாள் முடிவில் இந்திய அணி 172 ரன்களைச் சேர்த்திருந்தது. ஜெய்ஸ்வால் 90 ரன்களுடனும், கேஎல் ராகுல் 62 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

23 வயதிற்குள் அதிக சதம்

முதல் நாள் ஆட்டத்தில் இரு அணிகளும் சேர்த்து 217 ரன்களை எடுத்திருந்த நிலையில் 17 விக்கெட்கள் வீழ்ந்து இருந்தது. ஆனால், நேற்று இரு அணிகளும் சேர்த்து 209 ரன்களை எடுத்த நிலையில், 3 விக்கெட்கள் மட்டுமே வீழ்ந்து இருந்தது. மைதானம் அப்படியே பேட்டிங்கிற்கு ஏதுவாக மாறி இருந்தது.

இந்நிலையில் இன்று மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கியது. நேற்று விட்ட இடத்தில் இருந்தே இன்று ஆட்டத்தைத் தொடங்கினர் ஜெஸ்வாலும், ராகுலும். ஸ்டார்க் வீசிய 59 ஆவது ஓவரில் மட்டும் 2 பவுண்டரிகள் உட்பட 11 ரன்கள் கிடைத்தது. 95 ரன்களில் ஆடிக்கொண்டிருந்த ஜெஸ்வால் சிக்ஸ் அடித்து தனது சதத்தினை பூர்த்தி செய்தார். ஆஸ்திரேலியாவில் தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்து அசத்தியுள்ளார்.

இந்திய வீரர் ஜெய்ஸ்வால் சதம்!

23 வயதினை எட்டுவதற்குள் அதிக சதங்களை அடித்த வீரர்களின் பட்டியலில் ஜெஸ்வாலும் இணைந்துள்ளார். 23 வயதினை எட்டுவதற்குள் சச்சின் 8 சதங்களையும், ரவி சாஸ்திரி 5 சதங்களையும் அடித்திருந்தனர். கவாஸ்கர், வினோத் காம்ப்ளி, ஜெய்ஸ்வால் முறையே 4 சதங்களை அடித்துள்ளனர்.

சாதனை நாயகன்

ஜெய்ஸ்வாலுக்கு ஈடுகொடுத்து சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ராகுல் 77 ரன்களில் வெளியேறினார். இருவரும் இணைந்து 201 ரன்களை சேர்த்திருந்தனர். சேனா (SENA) நாடுகளில், அதாவது தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் அதிகபட்ச ஓப்பனிங் பார்டன்ர்ஷிப் அமைத்த இந்திய ஜோடிகளில் ஜெய்ஸ்வால் - ராகுல் இணை மூன்றாவது இடத்தினை பிடித்துள்ளது. முன்னதாக 1979 ஆம் ஆண்டு ஓவல் மைதானத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் சுனில் கவாஸ்கர் - சேத்தன் சௌஹான் இணைந்து 213 ரன்களை எடுத்திருந்ததே அதிகபட்சமாகும்.

சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ஜெய்ஸ்வால் - படிக்கல் இணையில், உணவு இடைவெளிக்குப் பின் படிக்கல் 25 ரன்களில் நடையைக் கட்டினார். விக்கெட்கள் விழுந்தாலும் தனது ஆட்டத்தைத் தொடர்ந்த ஜெய்ஸ்வால் 150 ரன்களைக் கடந்தார். 23 வயதினை எட்டுவதற்குள் டெஸ்டில் அதிகமுறை 150 ரன்களைக் கடந்த இந்திய வீரர்களின் பட்டியலில் சச்சின் சாதனையை சமன் செய்தார் ஜெய்ஸ்வால். இருவரும் இதுவரை 4 முறை 150 ரன்களை டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்துள்ளனர்.

தற்போது இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்களை இழந்து 320 ரன்களை எடுத்துள்ளது. ஜெய்ஸ்வால் 3 சிக்ஸர், 15 பவுண்டரிகளுடன் 161 ரன்கள் எடுத்து மிட்செல் மார்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். விராட் 16 ரன்களுடன் களத்தில் உள்ளார். ரிஷப் 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். இந்திய அணி தற்போது 366 ரன்கள் முன்னிலையில் உள்ளது.