rohit, virat, sachin pt web
கிரிக்கெட்

“பேட்டிங் ஆலோசகராக சச்சின் டெண்டுல்கரை நியமித்தால் பயனடையலாம்” - முன்னாள் வீரர் சொன்ன யோசனை..!

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான W.V. ராமன், ஆஸி செல்லும் இந்திய அணிக்கு சச்சின் டெண்டுல்கரை ஆலோசகராக நியமிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Angeshwar G

பார்டர் கவாஸ்கர் டெஸ்ட்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரானது 5 போட்டிகளாக நடத்தப்பட உள்ள நிலையில், அதன்மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியாவை எதிர்த்து விளையாடவிருக்கிறது.

கடந்த 10 ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவில் நடந்த 2 பார்டர் கவாஸ்கர் தொடர் மட்டுமில்லாமல், இந்தியாவில் நடந்த 2 பார்டர் கவாஸ்கர் தொடரையும் வென்றுள்ள இந்திய அணி, தொடர்ச்சியாக 4 முறை வென்று ஆதிக்கம் செலுத்தியுள்ளது. ஆஸ்திரேலியா கடைசியாக 2014-ம் ஆண்டுதான் பார்டர் கவாஸ்கர் தொடரை வென்றிருந்தது.

2018, 2021 என இரண்டு முறை ஆஸ்திரேலிய மண்ணில் தொடரை கைப்பற்றியிருக்கும் இந்தியா மூன்றாவது முறையும் ஹாட்ரிக் அடிக்கும் முனைப்பில் களம்காண உள்ளது. ஆனால் சொந்த மண்ணில் இன்னொரு டெஸ்ட் தொடரை இழக்க ஆஸ்திரேலியா அணி தயாராக இல்லை. இந்தமுறை தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஆஸ்திரேலியா வலுவான அணியை களமிறக்கியுள்ளது.

ஆலோசகரான சச்சின்

சொந்த மண்ணில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-3 என்று இந்திய அணி இழந்த நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு செல்ல ஆஸி உடனான பார்டர் கவாஸ்கர் தொடர் மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில்தான் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான W.V. ராமன், ஆஸி செல்லும் இந்திய அணிக்கு சச்சின் டெண்டுல்கரை ஆலோசகராக நியமிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ள பதிவில், “பார்டர் கவாஸ்கர் 2025 கிரிக்கெட் தொடருக்கான தயாரிப்பில் இந்திய அணியின் பேட்டிங் ஆலோசகராக சச்சின் டெண்டுல்கரை நியமித்தால் பயனடையலாம் என நினைக்கிறேன். போதுமான நேரம் இருக்கிறது. இப்போதெல்லாம் ஆலோசகர்களை நியமித்துக்கொள்வது சாதரணமாகிவிட்டது” என தெரிவித்துள்ளார்.

சாதனை நாயகன் சச்சின்

ராமனின் இந்த பதிவு விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், சச்சின் தனது கிரிக்கெட் வாழ்வில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தியுள்ளார். ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 39 டெஸ்ட் போட்டிகளில் 74 இன்னிங்ஸ்களில் ஆடி 3630 ரன்களை எடுத்துள்ளார். 55. 00 என்பதை சராசரியாக வைத்துள்ளார். இதில் 11 சதங்களும் 16 அரைசதங்களும் அடக்கம். இதில் ஆஸ்திரேலிய மண்ணில் மட்டும் 20 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். மொத்தமாக 38 இன்னிங்ஸ்களில் 1809 ரன்களைக் குவித்துள்ளார். சராசரி 53.20 ஆக உள்ளது. மொத்தமாக 6 சதங்களையும், 7 அரைசதங்களையும் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் டெஸ்ட் போட்டி வரும் 22 ஆம் தேதி தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.