IND vs WI Twitter
கிரிக்கெட்

IND vs WI | பலமாகும் மேற்கிந்தியத் தீவுகள்; மூன்றாம் கோப்பைக்கு வாய்ப்புள்ளதா?

Viyan

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்திய அணிகளுக்கு எதிரான சர்வதேச டி20 தொடர் ஆகஸ்ட் மூன்றாம் தேதி டிரினிடாட்டில் உள்ள பிரயன் லாரா கிரிக்கெட் அகாடெமி மைதானத்தில் தொடங்கவுள்ளது. இதில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இளம் இந்திய அணி நிச்சயம் தன் வெற்றிப் பயணத்தைத் தொடர நினைக்கும்.

IND vs WI

இந்திய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. முதலில் நடந்த டெஸ்ட் தொடரை 1-0 என வென்றது இந்தியா. இரண்டாவது போட்டி மழையால் தடைபட்டு டிரா ஆனது. இல்லையேல் இந்தியா அந்தப் போட்டியை வென்றிருக்கும். அடுத்து நடந்த ஒருநாள் தொடரை 2-1 என வென்றது இந்தியா. கேப்டன் ரோகித் ஷர்மா, விராட் கோலி போன்ற சீனியர்கள் கடைசி 2 போட்டிகளிலும் விளையாடாத நிலையிலும் இளம் இந்திய அணி தொடரை வென்றது. இந்நிலையில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஆகஸ்ட் 3ம் தேதி தொடங்கி 13 வரை நடக்கிறது.

முதல் 3 போட்டிகள் கரீபிய தீவுகளில் நடக்கும் நிலையில், நான்காவது மற்றும் ஐந்தாவது டி20 போட்டிகள் அமெரிக்காவில் நடக்கின்றன. 2024 டி20 உலகக் கோப்பை தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் தான் நடக்கிறது. அதற்கு முன்னோட்டமாகத் தான் இரு போட்டிகள் அமெரிக்காவில் நடக்கின்றன.

வெஸ்ட் இண்டீஸ் vs இந்தியா சர்வதேச டி20 தொடர் அட்டவணை

முதல் டி20 போட்டி - ஆகஸ்ட் 3 - டிரினிடாட்

இரண்டாவது டி20 போட்டி - ஆகஸ்ட் 6 - கயானா

மூன்றாவது டி20 போட்டி - ஆகஸ்ட் 8 - கயானா

நான்காவது டி20 போட்டி - ஆகஸ்ட் 12 - ஃப்ளோரிடா

ஐந்தாவது டி20 போட்டி - ஆகஸ்ட் 13 - ஃப்ளோரிடா

டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களை ஓரளவு எளிதில் வென்றுவிட்டாலும் டி20 தொடர் இந்தியாவுக்கு அவ்வளவு எளிதாக இருக்கப்போவதில்லை. டி20 அரங்கில் வெஸ்ட் இண்டீஸ் நிச்சயம் முற்றிலும் வேறுபட்ட ஆட்டத்தைக் காட்டும். ஒருநாள் தொடரில் ஆடாத வெஸ்ட் இண்டீஸ் அணியின் சீனியர் வீரர் ஜேசன் ஹோல்டர், விக்கெட் கீப்பர் நிகோலஸ் பூரண் ஆகியோர் மீண்டும் இத்தொடரில் களம் காண்கிறார்கள். அதிலும் நிகோலஸ் பூரண் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் இப்போதுதான் வெறித்தனமான ஆட்டம் ஆடி வந்திருக்கிறார். அந்தத் தொடரில் தொடர் நாயகன் விருது வென்ற அவர், இறுதிப் போட்டியில் ஆட்டமிழக்காமல் வெறும் 56 பந்துகளில் 137 ரன்கள் குவித்தார். பந்துவீச்சிலும் ஒடியன் ஸ்மித், ஒஷேன் தாமஸ் போன்ற வீரர்கள் இந்தியாவுக்கு சவால் கொடுப்பார்கள்.

Tilak Varma

இந்திய அணியோ சீனியர்கள் இல்லாமல் முற்றிலும் இளம் அணியாகக் களம் காண்கிறது. மீண்டும் ஹர்திக் பாண்டியாவின் தலைமையில் களமிறங்கும் அணியில் இளம் வீரர்கள் யஷஷ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா ஆகியோரும் இடம்பெற்றிருக்கிறார்கள். மிடில் ஆர்டரில் இந்திய அணிக்கு ஒரு இடது கை பேட்ஸ்மேன் தேவை என்பதால் திலக் வர்மா நிச்சயம் இந்தத் தொடரில் அதிக வாய்ப்புகள் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பந்துவீச்சில் இடது கை வேகப்பந்துவீச்சாளர் ஆர்ஷ்தீப் சிங் மீண்டும் அணிக்குத் திரும்பியிருக்கிறார். ஒருநாள் போட்டிகளில் வாய்ப்புகள் பெறாத யுஸ்வேந்திர சஹால் நிச்சயம் இந்தத் தொடரில் வாய்ப்புக்காக காத்திருப்பார். குல்தீப் யாதவ் ஒருநாள் தொடரில் பட்டையைக் கிளப்பியிருக்கும் நிலையில் ஒருநாள் உலகக் கோப்பையில் அவர் இடம்பெறுவதற்கான வாய்ப்பு குறைந்துகொண்டே வருகிறது. அதனால் இந்த டி20 தொடரில் அவருக்குக் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்புமே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.

Hardik Pandya

இந்தியா டி20 ஸ்குவாட்

ஹர்திக் பாண்டியா (கேப்டன்), சூர்யகுமார் யாதவ் (துணைக் கேப்டன்), ரவி பிஷ்னாய், யுஸ்வேந்திர சஹால், சுப்மன் கில், யஷஷ்வி ஜெய்ஸ்வால், அவேஷ் கான், இஷன் கிஷன் (விக்கெட் கீப்பர்), முகேஷ் குமார், அக்‌ஷர் படேல், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஆர்ஷ்தீப் சிங், உம்ரன் மாலிக், திலக் வர்மா, குல்தீப் யாதவ்.

வெஸ்ட் இண்டீஸ் டி20 ஸ்குவாட்

ரோவ்மன் பவல் (கேப்டன்), கைல் மேயர்ஸ் (துணைக் கேப்டன்), ஜேசன் சார்லஸ் (விக்கெட் கீப்பர்), ராஸ்டன் சேஸ், ஷிம்ரன் ஹிட்மெயர், ஜேசன் ஹோல்டன், ஷாய் ஹோப் (விக்கெட் கீப்பர்), அகீல் ஹொசைன், அல்சாரி ஜோசஃப், பிராண்டன் கிங், ஒபெட் மெகாய், நிகோலஸ் பூரண் (விக்கெட் கீப்பர்), ரொமேரியோ ஷெபர்ட், ஒடியன் ஸ்மித், ஒஷேன் தாமஸ்.