இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் நியூசிலாந்து அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
முதல் டெஸ்ட் போட்டியானது பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்றுவரும் நிலையில், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 46 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல்அவுட்டானது. அதற்குபிறகு விளையாடிய நியூசிலாந்து அணியில் ரச்சின் ரவீந்திராவின் அதிரடியான சதத்தால் 402 ரன்களை குவித்தது நியூசிலாந்து அணி.
அதனைத்தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணியில், சர்பராஸ் கான் 150 ரன்கள், ரிஷப் பண்ட் 99 ரன்கள், கோலி 70 ரன்கள் மற்றும் ரோகித் சர்மா 52 ரன்கள் என அடிக்க 462 ரன்களை குவித்தது இந்தியா.
இதன்மூலம் முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற நியூசிலாந்துக்கு 107 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நாளை கடைசி நாள் ஆட்டம் என்பதால் எந்த அணிக்கு வெற்றி செல்லும் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. ஆனால் ஒருநாள் முழுவதும் ஆட்டம் உள்ளது, 10 விக்கெட்டுகள் கையில் உள்ளது, 107 ரன்கள் மட்டுமே இலக்கு என்றால் இந்தியாவை விட நியூசிலாந்து அணி வெல்லவே அதிகமான வாய்ப்புகள் இருக்கிறது.
ஒருவேளை இந்தியா வெல்லவேண்டுமானால் புதிய பந்தில் இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் 3-4 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும். அப்படி வீழ்த்தும் பட்சத்தில் 5வது நாள் ஆட்டத்தில் அஸ்வின் மற்றும் ஜடேஜா இருவரின் சுழற்பந்துவீச்சுக்கு எதிராக ரன்களை அடிப்பது கடினமாகிவிடும். ஒருவேளை இவை அனைத்தும் சாத்தியப்பட்டால் நியூசிலாந்து அணியின் கைகளிலிருந்து வெற்றியை இந்தியாவால் தட்டிப்பறிக்க முடியும்.
இந்தியா இதற்குமுன் இவ்வளவு குறைவான ஸ்கோரை டிஃபண்ட் செய்து வெற்றிபெற்றிருக்கிறதா என்று கேட்டால், 2004-ம் ஆண்டு பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 107 ரன்களை டிஃபண்ட் செய்து 13 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிபெற்றுள்ளது.
2004-ம் ஆண்டு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களில் இந்தியா 104 மற்றும் 205 ரன்கள் அடித்திருந்த நிலையில், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 203 ரன்கள் எடுத்திருந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா வெற்றிபெற 107 ரன்கள் தேவைப்பட்டது.
பரபரப்பான அந்தப் போட்டியில் ஹர்பஜன் சிங் தன்னுடைய சுழற்பந்துவீச்சால் 5 விக்கெட்டுகளையும், முரளி கார்த்திக் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இந்தியாவை 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெறச்செய்தனர்.
அந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா அணியில் ஜஸ்டின் லாங்கர், மேத்யூ ஹெய்டன், ரிக்கி பாண்டிங், மார்டின், மைக்கேல் கிளார்க், ஆடம் கில்கிறிஸ்ட் முதலிய சாம்பியன் பிளேயர்கள் இடம்பெற்றிருந்தனர். அந்த அணிக்கு எதிராகவே இந்திய அணி 107 ரன்களை வெற்றிகரமாக டிஃபண்ட் செய்து வெற்றிபெற்றிருந்தது.
இத்தகைய சூழலில் நாளை நியூசிலாந்து அணியை வீழ்த்தி 20 ஆண்டுகளுக்கு பிறகு வரலாறு படைக்குமா இந்தியா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
* 85 ரன்கள் - ஆஸ்திரேலியா - vs இங்கிலாந்து - 1822
* 99 ரன்கள் - வெஸ்ட் இண்டீஸ் - vs ஜிம்பாப்வே - 2000 ( 35 ரன்னில் வெற்றி)
* 107 ரன்கள் - இந்தியா - vs ஆஸ்திரேலியா - 2004 ( 13 ரன்னில் வெற்றி)
* 111 ரன்கள் - இங்கிலாந்து - vs ஆஸ்திரேலியா - 1887 ( 13 ரன்னில் வெற்றி)
* 111 ரன்கள் - இங்கிலாந்து - vs ஆஸ்திரேலியா - 1896 ( 66 ரன்னில் வெற்றி)