இந்திய அணி pt web
கிரிக்கெட்

டி20 உலகக்கோப்பை| விராட் கோலி To அர்ஷ்தீப் சிங்.. இந்திய அணியில் யாருக்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கும்?

IPL ஒருபுறம் களைக்கட்டியுள்ள நிலையில், ஜூன் மாதத்தில் தொடங்க உள்ள உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்வதில் பிசிசிஐ மும்முரம் காட்டுகிறது. எந்ததெந்த வீரர்களுக்கு கட்டாய இடம், யாருக்கெல்லாம் வாய்ப்புள்ளது என பார்க்கலாம்...

PT WEB

இருபது ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் ஜூன் 2 ஆம் தேதி தொடங்கி ஜூன் 29 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, தென்னாப்ரிக்கா, பாகிஸ்தான், இலங்கை, மேற்கிந்திய தீவுகள் உள்ளிட்ட 20 அணிகள் பங்கேற்கின்றன.

2007 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணி, அடுத்தடுத்து நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், கோப்பை வெல்லும் கனவு கனவாகவே உள்ளது.

கடந்த சில மாதங்களாக டி20 தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்தியா, புள்ளிப் பட்டியலிலும் முதலிடத்தில் உள்ளது. இதனால், நடப்பாண்டு நடைபெறும் டி20 தொடரில் கோப்பையை வெல்ல வேண்டும் என்பதில் பிசிசிஐ திட்டவட்டமாக உள்ளது. எனவே, இந்தியாவுக்காக விளையாடும் வீரர்களை தேர்வு செய்வதில் தேர்வுக்குழு மும்முரம் காட்டி வருகிறது.

இந்திய அணிக்கு ரோகித்சர்மா கேப்டனாக செயல்படுவார் என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தெரிவித்திருந்தார். ஐ.பி.எல். தொடரில் சிறப்பாக விளையாடி வருவதால், டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் விராட் கோலி இடம் பிடிப்பார். பந்து வீச்சாளர்களில் பும்ரா, குல்தீப் யாதவுக்கும், ஆல்ரவுண்டரில் ஹர்திக் மற்றும் ஜடேஜாவுக்கும் நிச்சயம் அணியில் இடம் கிடைக்கும். அதேபோல் மிடில் ஆர்டரில் சூர்யகுமாருக்கு இடமுண்டு. இந்திய அணியின் முதன்மை பந்து வீச்சாளரான முகமது சிராஜ் ஐபிஎல் போட்டிகளில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்து வருவதால் அவருக்கு அணியில் இடம் கிடைப்பது சந்தேகம்.

விக்கெட் கீப்பர்கள் பட்டியலில் மிகுந்த போட்டி நிலவுகிறது. ரிஷப் பந்த் முதல் தர தேர்வாக இருக்கும் பட்சத்தில், கே. எல்.ராகுல், இஷான் கிஷன், ஜித்தேஷ் ஷர்மா, சஞ்சு சாம்சன் ஆகியோர் 2 ஆம் தர தேர்வில் உள்ளனர்.

ஐ.பி.எல். தொடரில் சிறப்பாக விளையாடி வரும் பேட்டர்கள் ஜெய்ஸ்வால், ரிங்கு சிங், ஷிவம் துபே மற்றும் பந்து வீச்சாளர்களில் அர்ஷ்தீப் சிங், ஹர்சல் பட்டேல், முகேஷ் குமார், நடராஜன், ஆல்ரவுண்டர் அக்ஷர் பட்டேல் ஆகியோரில் யார் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

மே மாத தொடக்கத்திற்குள் ஐசிசியிடம், இந்திய அணியின் உத்தேச பட்டியலை வழங்க வேண்டும் என்பதால், விரைவில் யார் யாரெல்லாம் அணியில் இடம் பெறுகிறார்கள் என்பது தெரியவரும்.