India ICC Final Loss ICC
கிரிக்கெட்

2000 to 2024: 11 ICC பைனல்களில் தோற்ற இந்தியா! இத்தனை கோப்பை தவறவிட என்ன காரணம்? எங்கே சொதப்புகிறது?

2024 யு19 உலகக்கோப்பை தொடரில் லீக் போட்டியில் ஒன்றில் கூட தோற்காத இந்திய அணி, இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக தோல்வியுற்று கோப்பையை கோட்டைவிட்டது.

Rishan Vengai

உலக கிரிக்கெட் வரலாற்றில் பலம் வாய்ந்த அணிகள் என்றால் வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா அணிகளைத் தொடர்ந்து மூன்றாவது அணியாக இந்திய அணியே இருந்துவந்தது. ரிக்கி பாண்டிங் வருகைக்கு பிறகு இரண்டாவது இடத்திலிருந்த ஆஸ்திரேலியா அணி கோப்பைகளாக வாரிக்குவித்து உலகத்தின் நம்பர் 1 அணியாக வலம் வந்தது.

அதனைத்தொடர்ந்து 2007ம் ஆண்டு இந்திய அணியின் கேப்டனாக உருமாறிய மகேந்திர சிங் தோனி, 2007 டி20 உலகக்கோப்பை, 2011 ஒருநாள் உலகக்கோப்பை மற்றும் 2013 சாம்பியன்ஸ் டிரோபி உலகக்கோப்பை என வென்று அசத்தினார். தோனியின் வருகைக்குபின் 3 ஐசிசி உலகக்கோப்பைகளை வென்ற இந்திய அணி, முதல் இடத்திலிருந்த ஆஸ்திரேலியாவை பின்னுக்கு தள்ளி உலகத்தின் நம்பர் 1 அணியாக மாறி ஆதிக்கம் செலுத்தியது.||

தோனி சென்ற பிறகும் கூட அவரின் பாரம்பரியத்தை பின்பற்றிய முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலி, இந்திய அணியை உள்நாட்டில் மட்டுமல்லாமல் வெளிநாட்டிலும் தரமான அணியாக உருவாக்கி சாதிக்க முடியாத வெற்றிகளை தேடிக்கொடுத்து வரலாறு படைத்தார். கோலியை தொடர்ந்து கேப்டனான ரோகித் சர்மாவும் இந்திய அணியின் வெற்றிப்பயணத்தை மெருகூட்டும் வேலையில் இறங்கினார். ரோகித் தலைமையில் டி20, ஒருநாள் கிரிக்கெட், டெஸ்ட் கிரிக்கெட் என மூன்று வடிவத்தில் நம்பர் 1 அணியாக மாறிய இந்திய அணி சாதனை மேல் சாதனைகளாக குவித்து அசத்தியது.

Virat kohli

ஆனால் என்ன தான் நம்பர் 1 அணியாக திகழ்ந்த இந்திய அணியால் உலகக்கோப்பை என்ற மகுடத்தை மட்டும் சூடிக்கொள்ளவே முடியவில்லை. இறுதிப்போட்டிவரை செல்லும் இந்திய அணி ஏனோ இறுதிப்போட்டியில் மட்டும் தோல்வியுற்று இதயத்தை உடைத்து வெளியேறும். தரவரிசை பட்டியலில் நம்பர் 1 அணியாக இருந்து ஒரு ஐசிசி கோப்பையை கூட வெல்லாத அணியாக இந்திய அணி தொடர்ந்து சறுக்கல்களையே சந்தித்துவருகிறது.

ஆஸ்திரேலியா 14 ஐசிசி கோப்பைகள்! இந்தியாவிடம் 10 ஐசிசி கோப்பைகள்!

ஆஸ்திரேலியா அணியின் பலத்திற்கு அவர்களால் 14 ஐசிசி கோப்பைகளை வெல்ல முடியும் என்றால், இந்திய அணியில் இருக்கும் திறமையான வீரர்களை வைத்துக்கொண்டு இந்திய அணி குறைவாக 15 ஐசிசி கோப்பைகளாவது வென்றிருக்க வேண்டும். இந்த ஆதங்கம் ஒவ்வொரு இந்திய ரசிகனுக்கும் அதிகமாகவே இருக்கிறது.

யு19 உலகக்கோப்பைகளையும் சேர்த்து ஆஸ்திரேலியா 14 ஐசிசி கோப்பைகளை வைத்திருக்கிறது என்றால், இந்திய அணி 10 ஐசிசி கோப்பைகளை கைவசம் வைத்திருக்கிறது. இதில் வேடிக்கையான விசயம் என்னவென்றால் இந்திய அணி ஐசிசி இறுதிப்போட்டிகளில் தோல்வியுற்று கோட்டைவிட்ட கோப்பைகளின் எண்ணிக்கை மட்டும் 11. ஒருவேளை இந்த 11 இறுதிப்போட்டிகளிலும் வெற்றிபெற்றிருந்தால் இந்திய அணி 21 ஐசிசி கோப்பைகளோடு அதிக கோப்பைகளை வென்ற அணியாக வலம்வந்திருக்கும்.

ஆஸ்திரேலியா அணியிடம் இருக்கும் 14 ஐசிசி கோப்பைகள்:

6 - ஒருநாள் உலகக் கோப்பைகள்.

4 - U19 உலகக் கோப்பைகள்.

2 - சாம்பியன்ஸ் டிராபி.

1 - டி20 உலகக் கோப்பை.

1 - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்.

இந்திய அணியிடம் இருக்கும் 10 ஐசிசி கோப்பைகள்:

2 - ஒருநாள் உலகக் கோப்பைகள் (1983, 2011).

5 - U19 உலகக் கோப்பைகள் (2000, 2008, 2012, 2018, 2022 ).

2 - சாம்பியன்ஸ் டிராபி (2002, 2013).

1 - டி20 உலகக் கோப்பை (2007).

2023 odi wc india loss

இந்திய அணி தவறவிட்ட 11 ஐசிசி கோப்பைகள்: (பைனல் தோல்வி)

2- ஒருநாள் உலகக்கோப்பை பைனல் (2003, 2023)

4 - U19 உலகக் கோப்பை பைனல் (2006, 2016, 2020, 2024).

2 - சாம்பியன்ஸ் டிரோபி பைனல் ( 2000, 2017)

1 - டி20 உலகக்கோப்பை பைனல் (2014)

2 - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் ( 2021, 2023)

இறுதிப்போட்டியில் இந்திய அணி தோற்பதற்கான காரணம் என்ன?

*பாசிட்டிவ் கிரிக்கெட்: லீக் போட்டிகள் முழுக்க அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி சிறப்பாக செயல்படும் இந்திய அணி, இறுதிப்போட்டி என வந்துவிட்டால் பாசிட்டிவாகவும், அதிரடியாகவும் விளையாடுவதில் சொதப்புகிறது. விக்கெட்டை இழந்துவிட கூடாது என பொறுமையாக ஆடும் இந்திய வீரர்கள், தேவைப்படும் ரன்ரேட் அதிகமாகும் போது சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட்டை பறிகொடுத்து விடுகின்றனர். மாறாக தொடக்கத்திலிருந்தே ஒரு வீரர் கூட பாசிட்டிவாக அதிரடியாக ஆடும் ஆட்டத்தை விளையாடுவதில்லை.

* எக்ஸ் ஃபேக்டர் வீரர்கள்: இந்திய அணியிடம் இருக்கும் இன்னொரு பெரிய பிரச்னை ஒரு அணி சக்சஸ்ஸிவாக இருக்கும் போது, முக்கியமான போட்டிகளில் மாற்றங்கள் தேவைப்பட்டாலும் அதை சமாளித்துவிடலாம் என்று இடத்திற்கு சென்றுவிடுகின்றனர். இறுதிப்போட்டியில் ஆடுகளம் மற்றும் கண்டிசனுக்கு தகுந்தார் போலான எக்ஸ் பேக்டர் வீரர்களை சரியாக பயன்படுத்துவதில் கோட்டைவிடுகின்றது இந்திய அணி. தைரியமாக ஒரு முடிவெடுப்பதில் கோட்டைவிடுகின்றது.

Ind vs Aus - U19

*பார்ட்னர்ஷிப்கள்: ஒரு அணி ஒரு போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்றால் அதற்கு முக்கியமானவை பார்ட்னர்ஷிப்கள் போடுவது தான். ஒரு போட்டியில் இரண்டு நல்ல பார்ட்னர்ஷிப்கள் வந்துவிட்டாலே ரன்கள் வந்துவிடும், அதற்கு பிறகு கிடைப்பதெல்லாம் போனஸ் ரன்கள் போன்றவை தான். ஆனால் ஒரு விக்கெட் விழுந்துவிட்டால், அடுத்த விக்கெட்டுக்காக ஒரு நல்ல பார்ட்னர்ஷிப்பை எடுத்துவருவதில் இந்திய வீரர்கள் தொடர்ந்து கோட்டைவிடுகின்றனர்.

*அழுத்தத்தை கையாள்வது: யு19, ஒருநாள் உலகக்கோப்பை என அனைத்துவடிவ ஐசிசி இறுதிப்போட்டியிலும் இந்தியா சொதப்பும் ஒரே இடம் அழுத்தத்தை கையாளுவது எப்படி என்ற இடத்தில் தான். நிலைத்து நின்று ஆடவேண்டும் என பொறுமையாக விளையாட நினைக்கும் வீரர்கள், எந்த பவுலர்களை அட்டாக் செய்யவேண்டும் என்பதில் கோட்டைவிடுகின்றனர். மாறாக அழுத்தம் அதிகமாக அதிகமாக ரன்கள் வரவில்லையே என்ற அழுத்தத்தில் தவறான ஷாட்களை விளையாடி விக்கெட்டுகளை பறிகொடுக்கின்றனர். மாறாக எந்த பந்துவீச்சாளரை அடிக்கவேண்டுமே அவர்களுக்கு எதிராக டிஃபன்சிவ் கிரிக்கெட் ஆடுவதும் ஒரு குறையாகவே அமைந்துவருகிறது.

Ind vs Aus - U19

நடந்து முடிந்த யு19 பைனலில் கூட சிறப்பாக வீசிய வேகப்பந்துவீச்சாளருக்கு எதிராக சிறப்பாக விளையாடிய முஷீர் கான், அடித்து ஆடவேண்டிய ஸ்பின்னருக்கு எதிராக முதல் பந்திலேயே விக்கெட்டை கொடுத்து வெளியேறினார். அவர் சென்ற அழுத்தமான இடத்தில் களமிறங்கிய கேப்டன் சாஹரன் பிரஸ்ஸரில் தவறான ஷாட் விளையாடி வெளியேறினார். 4 சதங்களை அடித்த இந்திய டாப் ஆர்டர்களிடமிருந்து ஒரு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் கூட வரவில்லை.

மேற்கண்ட பிரச்னைகளையும், கேட்ச்களை விடாமல் நல்ல ஃபீல்டிங்கையும் வெளிப்படுத்தினால் இந்திய அணி எதிர்வரும் டி20 உலகக்கோப்பையை வென்று கையில் ஏந்தும்!