india womens  pt web
கிரிக்கெட்

அடுத்தடுத்து தோல்விகள்.. தேர்வில் தொடரும் சர்ச்சை.. பின்னோக்கி செல்கிறதா இந்திய மகளிர் அணி..?

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வங்கதேச சுற்றுப்பயணத்தில் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. அடுத்து ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளதால் இத்தோல்விகள் பேசு பொருளாகியுள்ளன.

Viyan

வங்கதேசத்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 40 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி. ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்தப் போட்டியில் 152 என்ற எளிய இலக்கை சேஸ் செய்ய முடியாமல் தோற்றிருக்கிறது இந்தியா. முன்பு நடந்த டி20 தொடரின் கடைசி போட்டியில் தோற்றிருந்த இந்திய அணி இப்போது அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் தோற்றிருக்கிறது.

இந்திய பெண்கள் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 தொடர் ஜூலை 9 ஆம் தேதி தொடங்கியது. முதலிரு போட்டிகளை வென்று தொடரைக் கைப்பற்றிய இந்தியா, கடைசி போட்டியில் தோல்வியடைந்தது.

இந்நிலையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஞாயிற்றுக்கிழமை மிர்பூரில் தொடங்கியது. போட்டியின் தொடக்கத்தில் சில நிமிடங்கள் மழை பெய்ததால், ஆட்டம் 44 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. முதலில் விளையாடிய வங்கதேச அணி 152 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அறிமுக ஆல்ரவுண்டர் அமஞ்சோத் கௌர் மிகச் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். மற்றொரு ஆல் ரவுண்டர் தேவிகா வைத்யா 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.

smiriti mandhana

எளிய இலக்கைத் துரத்திய இந்திய அணி சுலபத்தில் இதை சேஸ் செய்துவிடும் என்று எதிர்பார்க்கட்டது. ஆனால் வங்கதேச பௌலர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு இந்திய பேட்டர்களுக்கு தொடர் நெருக்கடிகளைக் கொடுத்தனர். நட்சத்திர வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா மூன்றாவது ஓவரிலேயே வெளியேறினார். மற்ற வீராங்கனைகள் ஓரளவு தாக்குப்பிடிப்பார்கள் என்று நினைத்திருக்க, இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

யஸ்திகா பாடியா, கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர், ஜெமிமா ராட்ரிக்ஸ் என எல்லோரும் சொற்ப ரன்களில் வெளியேறினர். அதிகபட்சமாக ஆல் ரவுண்டர் தீப்தி ஷர்மா மட்டுமே 20 ரன்கள் எடுத்தார். இறுதியில் 35.5 ஓவர்களில் 113 ரன்களுக்கு இந்திய மகளிர் அணி ஆல் அவுட் ஆனது. மருஃபா அக்தர் 4 விக்கெட்டுகளும், ரபெயா கான் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதில் சிறப்பென்னவெனில் வங்கதேச பௌலர் சொர்ஃப்னா அக்தர் காயம் காரணமாக இந்தப் போட்டியில் பேட்டிங் செய்யவில்லை, பௌலிங்கும் செய்யவில்லை. ஒரு பௌலர் குறைவாக இருந்துமே வங்கதேசம் இந்தியாவை சுருட்டியது.

சொல்லப்போனால் இந்தத் தொடரின் அத்தனை போட்டிகளுமே லோ ஸ்கோரிங் ஆட்டங்களாகவே அமைந்தது. 3 சர்வதேச டி20 போட்டிகளிலுமே முதலில் பேட்டிங் செய்த அணி 120 ரன்களைக் கூட எடுக்கவில்லை. வங்கதேச ஆடுகளங்கள் எப்போதும் ரன் அடிப்பதற்கு சவாலானவை. அப்படிப்பட்ட நிலையில், டி20, ஒருநாள் என அனைத்து போட்டிகளுமே மிர்பூர் மைதானத்திலேயே நடத்தப்படுகிறது. இது பேட்டர்களுக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கிறது. ஆனால், இதை மட்டுமே இந்தியாவின் தோல்விகளுக்குக் காரணமாக சொல்லிவிட முடியாது.

இந்திய ஆண்கள் அணியின் தேர்வு எந்த அளவுக்கு விவாதங்களை எழுப்புமோ, அதைவிடப் பன்மடங்கு விவாதங்களை எழுப்பக்கூடியது இந்திய பெண்கள் அணியின் தேர்வு. கடந்த சில ஆண்டுகளாகவே ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு தொடருக்குமான இந்திய பெண்கள் அணி அறிவிக்கப்படும்போது பல சர்ச்சைகள் எழும். முந்தைய தொடரில் ஆடிய வீரர்கள் திடீரென அணியிலிருந்து நீக்கப்படுவார்கள். திடீரென ஒருவர் அணியில் சேர்க்கப்படுவார்கள். சம்பந்தமே இல்லாமல் ஒருவருக்கு அறிமுகம் கிடைக்கும். அதுவொரு புரியாத புதிராகவே இருக்கும். பல்வேறு வீராங்கனைகள் பல முறை நேரடியாகவே இதுகுறித்து கேள்வி எழுப்பியிருக்கின்றனர். ஆனால் எதற்கும் விளக்கம் தரப்படாது. எதுவும் மாறாது.

richa ghosh

இந்த வங்கதேச தொடருக்கான அணி அறிவிக்கப்பட்டபோதும் அப்படி பல விவாதங்கள் எழுந்தன. இந்தியாவின் சிறந்த இளம் ஃபினிஷரும் விக்கெட் கீப்பருமான ரிச்சா கோஷ் இந்த அணியில் இடம்பெறவில்லை. அவருக்குப் பதில் டி20 அணியில் கூட யஸ்திகா பாடியா இடம்பெற்றார். WPL தொடரில் சிறப்பாகப் பந்துவீசிய ஷிகா பாண்டே, வளர்ந்துவரும் வீராங்கனைக்கான ஐசிசி விருது வென்ற ரேணுகா தாகூர் ஆகியோருக்கும் இந்த அணியில் இடம் கிடைக்கவில்லை. இவ்வளவு நாள் டொமஸ்டிக் போட்டிகளைக் கண்டுகொள்ளாதவர்கள் திடீரென்று அதன் அடிப்படையில் பிரியா பூனியாவுக்கு வாய்ப்பு கொடுத்தனர். ஆனால் அவர் WPL தொடரில் ஆடியிருக்கவில்லை. டி20 தொடரில் மிண்ணு மனி, அனுஷா பரெட்டி, ராஷி கனோஜியா ஆகியோர் இந்திய அணிக்கு அறிமுகம் ஆகினர். முதல் ஒருநாள் போட்டியில் அமஞ்சோத் கௌர், அனுஷா பரெட்டி ஆகியோர் தங்கள் முதல் வாய்ப்பைப் பெற்றனர்.

இத்தனை குழப்பங்களுக்கு மத்தியில் இந்த வங்கதேசத் தொடர் நடந்துகொண்டிருக்கும்போதே ஆசிய போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. வங்கதேச தொடரில் இடம்பெற்றிருந்த யஸ்திகா இந்த அணியில் இல்லை. ரிச்சா மீண்டும் திரும்பிவிட்டார். இதுவரை சர்வதேச போட்டிகளில் விளையாடிடாத திதாஸ் சாது, கனிஹா அஹுஜா ஆகியோர் இந்த அணியில் இடம்பெற்றிருக்கிறார்கள்.

இந்த அணி அறிவிப்புக்குப் பிறகு விமர்சகர்கள், ரசிகர்கள் என அனைவரும் வழக்கம்போல் இந்திய பெண்கள் அணியின் தேர்வுக்குழுவை விமர்சிக்கத் தொடங்கிவிட்டார்கள். WPL தொடரின் வெற்றியைப் பயன்படுத்திக்கொள்ளாமல் இந்திய பெண்கள் அணியைப் பின்னால் இழுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று வருந்துகிறார்கள். எப்போதும் போல் எந்த விளக்கமும் கொடுக்காமல் மௌனம் காத்துக்கொண்டிருக்கிறது கிரிக்கெட் வாரியம்!