Australia's Cameron Green, celebrate the dismissal of England's Jonny Bairstow  Kirsty Wigglesworth
கிரிக்கெட்

ashes 2023 | ஆஷஸ் தொடரில் 'ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட்'... யார் சொல்வது சரி?!

இங்கிலாந்து ரசிகர்கள் ஆஸ்திரேலிய வீரர்களை வசைபாட, அது விதிக்கு உட்பட்ட டிஸ்மிசல் தான் என்று கிரிக்கெட் உலகம் கூறுகிறது. என்னதான் பிரச்சனை, யார் சொல்வது சரி?!

Viyan

கிரிக்கெட் உலகம் மீண்டும் 'ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட்' பஞ்சாயத்தை தொடங்கியிருக்கிறது. லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் ஜானி பேர்ஸ்டோவை ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி அவுட் ஆக்கிய விதம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இங்கிலாந்து ரசிகர்கள் ஆஸ்திரேலிய வீரர்களை வசைபாட, அது விதிக்கு உட்பட்ட டிஸ்மிசல் தான் என்று கிரிக்கெட் உலகம் கூறுகிறது. என்னதான் பிரச்சனை, யார் சொல்வது சரி?!

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஆஷஸ் டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடந்து வருகிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வென்றிருந்த நிலையில், இரண்டாவது போட்டி புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. 371 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. கடைசி நம்பிக்கையாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் - பேர்ஸ்டோ இணை களத்தில் இருந்தது. அப்போது 52வது ஓவரின் கடைசிப் பந்தில் தான் அந்த சம்பவம் நடந்தது.

கேமரூன் கிரீன் அந்த பந்தை பௌன்சராக வீச, குனிந்து அதிலிருந்து தப்பித்தார் பேர்ஸ்டோ. ஓவர் முடிந்துவிட்டதால் உடனடியாக கிரீஸிலிருந்து வெளியேறினார். பந்தைப் பிடித்த கேரி சற்றும் தாமதிக்காமல் ஸ்டம்ப்பை தகர்க்க, ஆஸ்திரேலிய வீரர்கள் அப்பீல் செய்தனர். நடுவர்கள் மூன்றாம் நடுவரிடம் கேட்க, ரீப்ளே பார்த்துவிட்டு அவுட் கொடுத்தார் மூன்றாம் நடுவர் மராய் எராஸ்மஸ். இங்கிலாந்து வீரர்களும் ரசிகர்களும் அதிர்ச்சியில் உறைந்துபோயினர்.

அடுத்த களமிறங்கிய ஸ்டுவர்ட் பிராட், "இனி பல காலத்துக்கு இதற்காகவே நீ நினைவில் இருப்பாய்" என்று கேரியை சாடினார். சமூக வலைதளத்தில் இங்கிலாந்து ரசிகர்கள் வசைபாடத் தொடங்கினார்கள். உணவு இடைவேளைக்கு இரு அணிகளும் பெவிலியன் திரும்பியது இன்னும் பெரிய டிராமா அரங்கேறியது. லார்ட்ஸின் பிரசித்திபெற்ற லாங் ரூமை ஆஸ்திரேலிய வீரர்கள் கடக்கும்போது, இங்கிலாந்து ரசிகர்கள் அவர்களை நேரடியாகவே விமர்சிக்க கவாஜா, வார்னர் போன்ற வீரர்கள் அவர்களோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பாதுகாவலர்கள் வந்து வீரர்களை பெவிலியனுக்கு அனுப்பிவைத்தனர்.

போட்டியில் இங்கிலாந்து தோற்றுவிட, 'ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட்' வாதம் விஸ்வரூபம் எடுத்தது. ஆஸ்திரேலிய வீரர்கள் உள்பட பலரும் விதியில் இருக்கும் முறையில் அவர் அவுட் ஆகும்போது, ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் எங்கே வந்தது என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர்.

விதிப்படி, ஒரு பந்து 'டெட்' ஆன பிறகே பேட்ஸ்மேன்கள் கிரீஸை விட்டு வெளியேறலாம். ஒரு பந்து டெட் பாலா என்பது நடுவரின் முடிவுக்குட்பட்டது. பொதுவாக ஒரு ஃபீல்டரிடம் பந்து சென்ற பின், அதை அவர் இன்னொரு ஃபீல்டருக்கு மாற்றும் பட்சத்தில் அந்தப் பந்து டெட் ஆகிவிட்டதாகக் கருதப்படும்.

இந்த விஷயத்தில், அலெக்ஸ் கேரி பந்தை உடனடியாக ரிலீஸ் செய்தார். பிடித்தவுடன் கொஞ்சம் கூடத் தாமதிக்கவேயில்லை. அதனால் தான் ரீப்ளே பார்த்த மூன்றாம் நடுவர் கூட பந்து டெட் ஆகவில்லை என்று அவுட் கொடுத்திருக்கிறார். இதைத்தான் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் சொல்லிக்கொண்டிருக்கிறது.

பலரும் கேரியை விமர்சனம் செய்தாலும், இதைத் தவறு என்று நிச்சயம் சொல்லிடவே முடியாது. எத்தனையோ விக்கெட் கீப்பர்கள் ஸ்டம்புக்கு அருகில் நிற்கும்போது பந்தைப் பிடித்துவிட்டு, பேட்ஸ்மேன் கால் தூக்கும் வரை காத்திருந்து ஸ்டம்ப்பைத் தகர்த்திருக்கிறார்கள். கேரியோ பந்தை பிடித்தவுடன் ஒரு நொடி கூட தாமதிக்காமல் பந்தை ஸ்டம்ப் நோக்கி வீசிவிட்டார். எந்த வகையிலும் அந்த ஸ்டம்பிங்குகள் அளவுக்கு இது கேம் ஸ்பிரிட்டைக் கெடுத்துவிடாது!

இந்த விக்கெட் கிரிக்கெட் விதிக்கு உள்பட்டது என்பதைத் தாண்டி பலரும் பேர்ஸ்டோவின் கவனக்குறைவான போக்கையும் விமர்சிக்கின்றனர். பந்து டெட் ஆவதற்கு முன்பு அவர் கிரீஸிலிருந்து வெளியேறியதை பல முன்னாள் வீரர்களும் விமர்சகர்களும் சுட்டிக்காட்டியிருக்கின்றனர். இந்த இடத்தில் அஷ்வினின் ட்வீட் ஒன்றையும் கவனிக்கவேண்டியிருக்கிறது.

ஒரு விஷயத்தை நாம் தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும்.

எந்த ஒரு கீப்பரும் ஒரு டெஸ்ட் போட்டியில் அவ்வளவு தூரத்தில் இருந்து ஸ்டம்ப்பை தகர்க்க முயற்சி செய்யமாட்டார்கள். ஒருவேளை ஒரு பேட்ஸ்மேன் பந்தை சந்தித்தவுடன் தொடர்ச்சியாக வெளியே செல்வதைப் பார்த்திருந்தால் மட்டுமே இதை செய்ய நினைத்திருப்பார்கள்.

இங்கே வீரர்களின் புத்திசாலத்தனத்தை பாராட்டவேண்டுமோ ஒழிய, இதில் ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட்டை கொண்டுவரக்கூடாது' என்று கூறியிருக்கிறார் அவர்.

மிகவும் சரியான விஷயம். நிச்சயம் பேர்ஸ்டோ வெளியேறுவதை பலமுறை கவனிக்காமல் அவர் அதைச் செய்திருக்கப் போவதில்லை. இது பேர்ஸ்டோவின் தவறே ஒழிய நிச்சயம் கேரியின் தவறில்லை.

போட்டிக்குப் பிறகு 'மன்கட், அண்டர் ஆர்ம் பால்களையெல்லாம் இந்த ஆஷஸ் தொடரில் பார்க்கலாமா' என்று நக்கலாக ஒரு பத்திரிகையாளர் கேட்டதற்கு, 'விக்கெட்டின் தன்மைக்கு ஏற்ப அந்த முடிவு எடுக்கப்படும்' என்று கூறினார் ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ். மன்கட் ஆக இருந்தாலும் சரி, இப்படியான ஸ்டம்பிங்காக இருந்தாலும் சரி, பேட்ஸ்மேன்களின் தவறுகளுக்கு ஸ்பிரிட்டை மீண்டும் மீண்டும் எடுத்துவருவது சரியான போக்கே அல்ல. ஆனால், கிரிக்கெட் உலகம் அப்படி இருக்கப்போவதில்லை என்பதே உண்மை.

இந்த அவுட் பற்றிய உங்கள் பார்வையை கமெண்ட்டில் பதிவு செய்யுங்களேன்..!