Ind vs Pak Match Twitter
கிரிக்கெட்

IND vs Pak | ரிசர்வ் டே போட்டியிலும் மழை வந்துவிட்டால் சிக்கல் யாருக்கு?

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய நேற்றைய போட்டி மழையால் தடைபட்டதால் ரிசர்வ் டே மூலம் இன்று நடத்தப்பட திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி போட்டி தொடங்கப்பட இருக்கிறது.

Rishan Vengai

2023 ஆசியக்கோப்பை தொடரானது ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல் நடந்துவருகிறது. தற்போது சூப்பர் 4 சுற்று போட்டிகள் நடந்துவரும் நிலையில், நேற்று நடைபெற்ற பெரிய என்கவுண்டர் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இவ்விரு அணிகளும் மோதிய கடந்த லீக் போட்டி மழையால் கைவிடப்பட்டதால், இந்த போட்டிக்கான எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக இருந்தது.

ரசிகர்களிடையே மட்டுமல்லாமல் இரண்டு அணி நிர்வாகத்திற்குமே இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முடிவு அவசியமானதாக இருந்தது. அதன் காரணமாகதான் அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் ரிசர்வ் டே முறையானது இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கும் வழங்கப்பட்டது. நடப்பு ஆசியக்கோப்பையில் ஒரு லீக் போட்டிக்கு ரிசர்வ் டே இருப்பது இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு மட்டுமே.

மழையால் ஆட்டம் பாதிப்பு!

இப்படியாக நேற்று நடந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் இந்தியாவை பேட்டிங் செய்ய அழைத்தார். பாகிஸ்தான் கேப்டனின் எதிர்ப்பார்ப்பு என்பது கடந்த போட்டியில் இந்தியாவை சுருட்டியதை போன்றே இந்த போட்டியில் சுருட்டிவிடலாம் என இருந்தது. ஆனால் கடந்த போட்டியில் பாகிஸ்தான் பவுலர்கள் கொடுத்த அடியை திரும்ப அவர்களுக்கே கொடுக்கும் வகையில், அற்புதமான பேட்டிங்கை வெளிப்படுத்தி விளையாடினர் இந்திய அணியின் தொடக்க வீரர்கள்.

Gill - Rohit

இந்திய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் அடுத்தடுத்து அரை சதங்களை பதிவு செய்து முதல் விக்கெட்டுக்கு 121 ரன்களை சேர்த்தனர். ரோகித் 56 ரன்னிலும், கில் 58 ரன்னிலும் வெளியேற அடுத்துவந்த கிங் கோலி மற்றும் கே எல் ராகுல் இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 24.1 ஒரு ஓவரில் இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கொலம்போ பிரேமதாசா மைதானத்தில் மழை குறுக்கிட்டது. கனமழை பெய்ததால் போட்டியை விரைவாக தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. போட்டிக்கான இன்ஸ்பெக்சனானது 7.30 PM, 8.00 PM, 8.30 PM என கடந்து கொண்டே சென்றது.

Ind vs Pak

மழை நின்று போட்டிக்கான கட் ஆஃப் நேரம் 10.30 மணியாக இருந்த நிலையில் 8.30 மணிக்கு போட்டி தொடங்கிவிடும், ஆட்டம் 20 ஓவர்களாக குறைக்கப்பட்டு பாகிஸ்தானுக்கு 20 ஓவரில் இலக்கு 181ஆக நிர்ணயிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் மழை மீண்டும் குறுக்கிட்டதால் போட்டி ரிசர்வ் டே நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ரிசர்வ் டே நாளிலும் போட்டி கைவிடப்பட்டால் என்னாகும்?

ரிசர்வ் டேவான இன்றைய நாளில் எப்போதும் போல போட்டி மதியம் 03.00 மணிக்கு போட்டி நடக்குமென சொல்லப்பட்டது. ஆனால் தற்போதுவரை (மாலை 3:45 வரை) தொடங்கப்படவில்லை. இதில் நேற்றைய நாளில் முடிந்த 24.1 ஓவரிலிருந்து இந்திய அணி பேட்டிங்கை தொடரும். 50 ஓவர்கள் கொண்ட போட்டியாக முழுமையாக இது நடைபெறும்.

Ind - Pak Match

ஒருவேளை இன்றைய போட்டியிலும் மழை குறுக்கிட்டால் முடிவுக்காக 20 ஓவர்கள் போட்டியாக நடத்தப்படும். இந்தியாவின் ரன்களை பொறுத்து பாகிஸ்தான் அணிக்கு இலக்கு நிர்ணயிக்கப்படும். மழையால் போட்டியே நடத்தப்படாத நிலைக்கு சென்றால் இரண்டு அணிகளுக்கும் ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்படும். இன்றைய போட்டியில் மீண்டும் மழைக்குறுக்கிட்டு போட்டி நடைபெற தாமதமானால் இந்தியாவுக்குத்தான் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. ஏனெனில் செப்டம்பர் 12ஆம் தேதியான நாளை இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான போட்டி இருக்கிறது.

வானிலையை பொறுத்தவரையில் AccuWeather-ன் படி கொலம்போவில் மாலை 5 மணியளவில் 80 சதவீதம் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. Weather.com-ன் வானிலை முன்னறிவிப்பைப் பார்த்தால், மதியம் 3 மணிக்குப் பிறகு மழைக்கான வாய்ப்புகள் 70 சதவீதமாக உள்ளது.