இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் பிராத்வெய்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி, 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது.
ஜூலை 3ம் தேதி முதல் ஜுலை 30ம் தேதிவரை நடைபெறும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியானது லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. அதில் கஸ் அட்கின்ஸன்னின் அபாரமான பந்துவீச்சால் வெஸ்ட் இண்டீஸ் அணியை இன்னிங்ஸ் மற்றும் 114 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி 1-0 என தொடரில் முன்னிலை பெற்றது. அபாரமாக பந்துவீசிய அட்கின்ஸன் முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகள், இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் என அறிமுக டெஸ்ட் போட்டியில் 12 விக்கெட்டுகள் வீழ்த்தி எல்லோரையும் வியக்க வைத்தார்.
இந்நிலையில் இரண்டு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாட்டிங்ஹாம் மைதானத்தில் தொடங்கி நடைபெற்றுவருகிறது.
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பிராத்வெய்ட் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். முதலில் பேட்டிங் செய்ய வந்த இங்கிலாந்து அணிக்கு முதல் ஓவரின் 3வது பந்தில் ஜாக் கிராவ்லியை வெளியேற்றிய அல்சாரி ஜோசப் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு முதல் விக்கெட்டை எடுத்துவந்தார்.
ஆனால் அதற்குபிறகு பேட்டிங்கில் ருத்ரதாண்டவம் ஆடிய பென் டக்கெட் விக்கெட் விழுந்த தடமே தெரியாமல் “பாஸ்பால்” கிரிக்கெட் ஆடி துவம்சம் செய்ய, 4.2 ஓவரில் 50 ரன்களை சேர்த்தது இங்கிலாந்து அணி.
தொடர்ந்து அதிரடியாக ஆடிய டக்கெட் 32 பந்துகளில் அரைசதமடிக்க, அவருடன் கைக்கோர்த்த ஒல்லி போப் 6வது டெஸ்ட் சதமடித்து அசத்தினார். ஒல்லி போப் 121 ரன்கள், டக்கெட் 71 ரன்கள் மற்றும் பென் ஸ்டோக்ஸ் 69 ரன்கள் என அடிக்க அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இங்கிலாந்து 416 ரன்கள் குவித்தது.
இங்கிலாந்து அணியை தொடர்ந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் பிராத்வெய்ட் மற்றும் லூயிஸ் இருவரும் அசத்தலான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர்.
சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தாலும் 4வது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த கவேம் ஹாட்ஜ் மற்றும் அலிக் அத்தானாஸ் இருவரும் 150 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு வலுவான அடித்தளத்தை அமைத்தனர். அத்தானாஸ் 82 ரன்கள் மற்றும் கவேம் ஹாட்ஜ் 120 ரன்கள் அன அசத்த 350 ரன்களை எட்டியது வெஸ்ட் இண்டீஸ் அணி.
ஆனால் இறுதியாக வந்த கிறிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இழுத்துபிடிக்க, இறுதி விக்கெட்டுக்கு கைகோர்த்த ஜோஸ்வா மற்றும் ஷமர் ஜோசப் இருவரும் 71 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு மிரட்டிவிட்டனர். மிடில் ஆர்டரில் வந்து 10 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் என விளாசிய ஜோஸ்வா 82 ரன்கள் அசத்த, 11வது வீரராக வந்து 5 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என மிரட்டிய ஷமர் ஜோசப் வெஸ்ட் இண்டீஸ் அணியை 457 ரன்களுக்கு அழைத்துச்சென்றார்.
அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி 457 ரன்கள் குவித்து, 41 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.