aus vs wi X
கிரிக்கெட்

27 ஆண்டு தோல்விக்கு முற்றுப்புள்ளி! 1997-க்கு பிறகு ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியது WI!

1997-ம் ஆண்டுக்கு பிறகு ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து வரலாறு படைத்துள்ளது இளம் வீரர்கள் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி.

Rishan Vengai

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. உலகின் நம்பர் 1 டெஸ்ட் அணியாக இருக்கும் ஆஸ்திரேலியாவை எதிர்த்து, கிரேக் பிராத்வெய்ட் தலைமையிலான இளம் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது.

முதல் டெஸ்ட் போட்டியில் நம்பர் 1 அணிக்கு எதிராக சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய போதும், பேட்டிங்கில் சொதப்பிய இளம் வெஸ்ட் இண்டீஸ் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் தான் இரண்டாவது டெஸ்ட் போட்டியானது, பிங்க் பால் டெஸ்ட்டாகவும், பகல் இரவு ஆட்டமாகவும் ஆஸ்திரேலியாவின் கோட்டையாக கருதப்படும் கப்பா மைதானத்தில் நடைபெற்றது.

2வது டெஸ்ட்: 54 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா!

முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி கவெம் ஹோட்ஜ், ஜொசுவா சில்வா மற்றும் கெவின் சின்க்லைர் மூன்று பேரின் அபாரமான அரைசதத்தின் உதவியால் 311 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து தங்களுடைய முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலியா அணிக்கு தங்களுடைய சிறப்பான பந்துவீச்சு மூலம் அதிர்ச்சி கொடுத்தனர் வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர்கள்.

aus vs wi

ஒரு கட்டத்தில் 54 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை ஆஸ்திரேலியா இழக்க, இந்த டெஸ்ட் போட்டி விறுவிறுப்பான கட்டத்திற்கு சென்றது. ஆனால் ஒருபுறம் நிலைத்து நின்ற கவாஜா 75 ரன்கள் அடிக்க, லோயர் ஆர்டரில் களமிறங்கிய அலெக்ஸ் கேரி 65 ரன்கள், பாட் கம்மின்ஸ் 64 ரன்கள் என ஆஸ்திரேலியாவை 289 ரன்கள் என்ற நல்ல டோட்டலுக்கு எடுத்துச்சென்றனர்.

aus vs wi

பின்னர் தொடங்கப்பட்ட இரண்டாவது இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸ் பேட்டர்களுக்கு நல்ல ஸ்டார்ட் கிடைத்தாலும், அதை நீடிக்க விடாத ஆஸ்திரேலியா பவுலர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டை பறித்தனர். போராடிய இளம் வெஸ்ட் இண்டீஸ் அணி 193 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ஆஸ்திரேலியா அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற 216 ரன்கள் தேவைப்பட்டது.

7 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாற்றை எழுதிய ஷமர் ஜோசப்!

ஒரு டிரிக்கியான இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு, தொடக்கத்திலேயே கவாஜா மற்றும் லபுசனேவை விரைவாகவே வெளியேற்றிய வெஸ்ட் இண்டீஸ் அணி 42 ரன்களுக்கே 2 விக்கெட்டை கழற்றியது. ஆனால் மூன்றாவது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த ஸ்டீவ் ஸ்மித் மற்றும் கேம்ரான் க்ரீன் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

steve smith

71 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்ட இந்த ஜோடியை க்ரீனை 42 ரன்னில் போல்ட்டாக்கி வெளியேற்றி பிரித்துவைத்தார், அறிமுக வீரர் ஷமர் ஜோசப். க்ரீனை தான் வெளியேற்றினார் என்றால் கடந்த டெஸ்ட் போட்டியில் சதமடித்து ஆஸ்திரேலியாவை வெற்றிக்கு அழைத்துச்சென்ற டிராவிஸ் ஹெட்டை, கோல்டன் டக்கில் வெளியேற்றிய ஷமர் ஜோசப் ஆட்டத்தையே தலைகீழாக திருப்பிப்போட்டார்.

shamar

ஆனால் அத்துடன் அவரின் பந்துவீச்சு நிற்கவில்லை. அடுத்தடுத்து மிட்செல் மார்ஸ் 10 ரன்கள், அலெக்ஸ் கேரி 2 ரன்கள் என விக்கெட் வேட்டை நடத்திய ஷமர் ஜோசப், 23 ரன்கள் எடுப்பதற்குள் ஆஸ்திரேலியாவின் 4 விக்கெட்டை தட்டிப்பறித்தார். அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்து 136/6 என ஆஸ்திரேலியா தடுமாற, ஒருபுறம் நிலைத்து நின்ற ஸ்டீவ் ஸ்மித் மிட்செல் ஸ்டார்க்குடன் ஒரு முக்கியமான பார்ட்னர்ஷிப்பை எடுத்துவந்தார்.

27 ஆண்டுகளுக்கு பிறகு வரலாறு எழுதிய வெஸ்ட் இண்டீஸ்!

8வது வீரராக களமிறங்கிய மிட்செல் ஸ்டார்க் அடுத்தடுத்து 4 பவுண்டரிகளை விரட்டி 21 ரன்கள் அடிக்க, மீண்டும் பந்துவீச வந்த ஷமர் ஸ்டார்க்கை வெளியேற்றி ஆஸ்திரேலியா மீது அழுத்தத்தை திருப்பிவிட்டார். பின்னர் களமிறங்கிய பாட் கம்மின்ஸை 2 ரன்னில் வெளியேற்றிய ஷமர், வெஸ்ட் இண்டீஸ் அணியை ஆட்டத்திற்குள் எடுத்துவந்தார். உடன் அல்சாரி ஜோசப் நாதன் லயனை 9 ரன்னில் வெளியேற்ற, வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெற 1 விக்கெட்டும் ஆஸ்திரேலியா வெற்றி 25 ரன்களும் தேவைப்பட்டன.

முக்கியமான தருணத்தில் சிக்சர், பவுண்டரி என விரட்டிய ஸ்டீவ் ஸ்மித் ஆஸ்திரேலியா ரசிகர்களுக்கு நம்பிக்கையளித்தார். எல்லோரின் பார்வையும் ஸ்டீவ் ஸ்மித் மீது இருந்த நிலையில், ஷமர் ஜோசப்பின் பார்வை மட்டும் ஹசல்வுட் மீது தான் இருந்தது. ஆஸ்திரேலியா வெற்றிபெற 10 ரன்கள் இருந்த போது 51வது ஓவரின் 4வது பந்தில் சிங்கிள் எடுத்த ஸ்மித், கடைசி 2 பந்துகளை ஹசல்வுட்டிற்கு விட்டுத்தந்தார். ஆனால் இரண்டு பந்தெல்லாம் எதற்கு என கெத்துக்காட்டிய ஷமர், 5வது பந்திலேயே ஹசல்வுட்டின் ஸ்டம்பை தகர்த்தெறிந்தார். பரபரப்பான டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் ஒரு வரலாற்று வெற்றியை பதிவுசெய்து அசத்தியது.

aus vs wi

1997ம் ஆண்டுக்கு பிறகு ஆஸ்திரேலியா மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணி பதிவுசெய்யும் முதல்வெற்றி இதுவாகும். அதேபோல இதுவரை பிங்க் பால் டெஸ்ட் போட்டியில் தோல்வியே சந்திக்காமல் 11-0 என ஆஸ்திரேலியா இருந்த நிலையில், அந்த தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது வெஸ்ட் இண்டீஸ் அணி. கப்பா மைதானத்தில் தங்களுடைய முதல் வெற்றியை பதிவுசெய்திருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி, 31 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலியா மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரை இழக்காமல் சமன்செய்துள்ளது.