wasim akram - rohit sharma Twitter
கிரிக்கெட்

"கோலி, வில்லியம்சனை விட ரோகித் ஒப்பற்றவர்!" - இந்திய கேப்டனை புகழ்ந்து தள்ளிய வாசிம் அக்ரம்!

நடப்பு உலகக்கோப்பையில் 500 ரன்களை கடந்திருக்கும் ரோகித் சர்மா, தொடர்ச்சியாக 2 உலகக்கோப்பைகளில் 500 ரன்கள் அடித்த ஒரே வீரர் என்ற உலக சாதனையை படைத்து அசத்தியுள்ளார்.

Rishan Vengai

நடப்பு உலகக்கோப்பையில் மட்டும் 58 பவுண்டரிகள், 24 சிக்சர்களை பறக்கவிட்டு ஆக்ரோசமான ஆட்டத்தை ஆடிவரும் இந்திய கேப்டன் ரோகித் சர்மா, ஒரு சதம் மற்றும் 3 அரைசதங்களுடன் 503 ரன்களை குவித்துள்ளார். 500 ரன்களை கடந்தவர்களில் 4வது வீரராக இருக்கும் ரோகித், கடந்த 2019 உலகக்கோப்பையில் 648 ரன்கள் அடித்திருந்ததையடுத்து தொடர்ச்சியாக 2 முறை 500 உலகக்கோப்பை ரன்களை பதிவுசெய்த முதல் வீரராக மாறி அசத்தியுள்ளார்.

Rohit Sharma

இந்நிலையில், நெதர்லாந்துக்கு எதிரான கடைசி லீக் போட்டிக்கு பிறகு இந்திய கேப்டன் ரோகித் சர்மாவை புகழ்ந்து தள்ளியிருக்கும் வாசிம் அக்ரம், ரோகித்தை போன்ற ஒரு வீரரை தற்போதைய கிரிக்கெட் உலகில் பார்த்ததில்லை என புகழாரம் சூட்டினார். ஆட்டத்தையே மாற்றக்கூடிய ஒரு ஆட்டத்தை ஆடுவதாக கூறிய அக்ரம், நவீனகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களான விராட் கோலி, கேன் வில்லியம்சன், ஜோ ரூட் மற்றும் பாபர் அசாம் போன்ற வீரர்களை விட ரோகித் ஒப்பற்றவர் என கூறியுள்ளார்.

எந்த பந்துவீச்சாளருக்கு எதிராகவும் ஷாட் வைத்திருக்கிறார்! - வாசிம் அக்ரம்

ரோகித் ஷர்மாவின் கேம் சேஞ்ஜிங் அணுகுமுறை குறித்து நெதர்லாந்துக்கு எதிரான போட்டியின் போது பேசியிருக்கும் வாசிம் அக்ரம், “இந்திய அணி முதல் 10 ஓவர்களில் 91 ரன்கள் எடுத்தனர். அப்போதே ஆட்டத்தில் யாருக்கு வெற்றி என்பது தீர்மானிக்கப்பட்டுவிட்டது. ரோகித் சர்மா 54 பந்துகளில், 8 பவுண்டரிகள், 2 சிக்சர்களுடன் 61 ரன்கள் எடுத்தார். தற்போதைய கிரிக்கெட் உலகில் அவரைப் போன்ற ஒரு வீரர் இருப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. நாம் விளையாட்டின் சிறந்த வீரர்களாக கோலி, ஜோ ரூட், கேன் வில்லியம்சன் மற்றும் பாபர் அசாம் பற்றி மட்டுமே பேசுகிறோம். ஆனால் ரோகித் அவர்களில் இருந்து வித்தியாசமானவர்.

அவர் பேட்டிங்கை மிகவும் எளிதாக்குகிறார். எந்த சூழ்நிலையாக இருந்தாலும், எந்த பந்துவீச்சு தாக்குதலாக இருந்தாலும், அவர் தனது ஷாட்களை வசதியாக விளையாடுகிறார். அவர் ஆட்டத்தின் வேகத்தையே தனியொரு ஆளாக மாற்றிவிடுகிறார்” என்று ASports-ல் புகழ்ந்து கூறியுள்ளார்.

எதிரணியில் இருக்கும் 5 பவுலர்களையும் அட்டாக் செய்யும் ஒரே வீரர்!

வாசிம் அக்ரமை தொடர்ந்து ரோகித்தை புகழ்ந்து பேசிய முன்னாள் பாகிஸ்தான் வீரர் ஷோயப் மாலிக், “ ரோகித் எதிரணியில் இருக்கும் ஐந்து பந்துவீச்சாளர்களையும் அட்டாக் செய்யக்கூடிய வீரர். வாசிம் பாய் வரிசை படுத்திய அத்தனை வீரர்களும், எதிரணியில் இருக்கும் ஐந்து பந்துவீச்சாளர்களையும் அட்டாக் செய்யும் வீரர்கள் இல்லை. அவர்கள் 2-3 பந்துவீச்சாளர்களுக்கு எதிராக வேண்டுமானால் அதிரடி காட்டலாம். ஆனால் ரோகித் அப்படி அல்ல” என்று மாலிக் புகழ்ந்து கூறியுள்ளார்.