Wasim Akram Twitter
கிரிக்கெட்

“தினமும் 8 கிலோ மட்டன் சாப்பிடுவாங்க போல”-பாக். வீரர்களின் மோசமான ஃபீல்டிங்கை சாடிய வாசிம் அக்ரம்!

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது பாகிஸ்தான் அணி.

Rishan Vengai

நடப்பு ஒருநாள் உலகக்கோப்பை தொடங்கும் போது அரையிறுதிக்கு செல்லக்கூடிய அணிகளில் ஒன்றாக பாகிஸ்தானின் பெயர் சொல்லப்பட்டது. ஆனால் தற்போது நடந்துமுடிந்திருக்கும் 5 போட்டிகளில் 3 போட்டிகளில் தோல்வியை சந்தித்திருக்கும் பாகிஸ்தான் அணி, தொடர்ந்து சொதப்பி வருகிறது.

பந்துவீச்சில் சிறப்பான ஃபார்மில் இருந்த நசீம் ஷா காயம் காரணமாக தொடரை நழுவவிட்டதால் பாகிஸ்தானின் பவுலிங் யூனிட் போதுமான அளவு ஜொலிக்காமல் இருந்துவருகிறது. அந்த அணியின் மற்றொரு பெரிய பலவீனமாக இருந்துவருவது, மோசமான கிரவுண்ட் பீல்டிங்தான். களத்தில் தொடர்ச்சியாக மோசமான ஃபீல்டிங் செய்துவரும் வீரர்கள், கைக்குவரும் கேட்ச்களை கோட்டைவிடுவது மட்டுமல்லாமல், பந்துகளை கூட கையில் வாங்காமல் ரன்களை அதிகமாக விட்டுக்கொடுத்து வருகின்றனர்.

Pakistan

நேற்று நடந்துமுடிந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 282 ரன்கள் அடித்திருந்த போதும் பாகிஸ்தான் அணியால் ஆப்கானிஸ்தானை கட்டுப்படுத்தமுடியவில்லை. அதற்கு பெரிய காரணமாக இருந்தது அந்த அணியின் மோசமான ஃபீல்டிங் மட்டுமே. கிரவுண்ட் பீல்டிங்கில் மட்டும் கிட்டத்தட்ட 60 ரன்களை விட்டுக்கொடுத்திருப்பார்கள் பாகிஸ்தான் வீரர்கள். அந்தளவு ஒரு மோசமான செயல்பாட்டை இதுவரை நாம் பாகிஸ்தான் அணியிடம் பார்த்ததேயில்லை.

Pak vs Afg

இந்நிலையில் உலகக்கோப்பையில் முதல்முறையாக பாகிஸ்தானை ஆப்கானிஸ்தான் அணி தோற்கடித்ததை அடுத்து, முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் ஜாம்பவான் வாசிம் அக்ரம் காட்டமாக விமர்சித்துள்ளார்.

8 கிலோ இறைச்சி சாப்பிட்டுவிட்டு வந்து விளையாடுறிங்களா? - அக்ரம் காட்டம்

பாகிஸ்தானின் மோசமான கிரவுண்ட் பீல்டிங் குறித்து வருத்தம் தெரிவித்த வாசிம் அகரம் பேசுகையில், “இன்று உண்மையிலேயே மிகவும் சங்கடமாக இருந்தது. சேப்பாக்கத்தில் வெறும் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே விட்டுக்கொடுத்து 280 ரன்கள் அடிப்பதெல்லாம் பெரிய விஷயம். இதற்கு உங்களால் ஆடுகளத்தின் ஈரத்தன்மையை கைக்காட்ட முடியாது, வீரர்களின் மோசமான ஃபீல்டிங் மட்டுமே இந்த தோல்விக்கு காரணம். ஃபீல்டிங் செய்யும்போது அவர்களின் ஃபிட்னஸை கவனியுங்கள், கடந்த இரண்டு வருடங்களாக இந்த வீரர்களுக்கு ஏன் உடற்தகுதி தேர்வு இல்லை என்று எனக்கு புரியவில்லை.

Wasim Akram

உலகக்கோப்பை தொடர் தொடங்கியதிலிருந்தே வீரர்களை ஃபிட்னஸ் தேர்வுக்கு அனுப்புங்கள் என கூக்குரலிட்டு வருகிறோம். நான் பெயர்களைக் குறிப்பிட்டால், அது நன்றாக இருக்காது. இவர்கள் ஃபீல்டிங் செய்வதை பார்த்தால் தினமும் 8 கிலோ மட்டன் சாப்பிடுகிறார்களோ என்று தோன்றுகிறது” என ஃபிட்னஸ் லெவல் மோசமாக இருப்பதை கடுமையாக விமர்சித்துள்ளார் வாசிம் அக்ரம்.

மேலும் ஃபிட்னஸ் மட்டுமே எங்களுடைய ஒரே பிரச்னையாக இருக்கிறது என பேசிய அவர், “நீங்கள் (பாகிஸ்தான் வீரர்கள்) உங்கள் நாட்டிற்காக விளையாடுகிறீர்கள், அதற்காக உங்களுக்கு பணமும் வழங்கப்படுகிறது. அதற்கு கொஞ்சமாவது பொறுப்பேற்கும் அளவு ஃபிட்னஸ் இருக்க வேண்டும் அல்லவா? மிஸ்பா பயிற்சியாளராக இருந்தபோது பாகிஸ்தான் வீரர்களுக்கு ஃபிட்னஸ் டெஸ்ட் வைக்கப்பட்டது. அது அப்போது வேலை செய்தது. ஆனால் தற்போது எங்களின் பலவீனமாக இருந்துவருவது மோசமான ஃபீல்டிங் மட்டுமே. அதை சரிசெய்ய வேண்டும் என்றால் அதற்கு உடற்தகுதியை சரிசெய்வதை பொறுத்து உள்ளது.

வீரர்களின் மோசமான ஃபிட்னஸ் பிரச்னையால் இனி அரையிறுதிக்கு தகுதிபெற வேண்டுமென்றால், மற்ற அணிகளின் வெற்றி தோல்விக்காக பாகிஸ்தான் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் அரையிறுதி செல்லவேண்டும் என்றால் ஏதாவது அதிசயம் தான் நிகழவேண்டும்” என வருத்தத்துடன் கூறியுள்ளார்.