வனிந்து ஹசரங்கா ட்விட்டர்
கிரிக்கெட்

”ராஜதந்திரம் எல்லாம் வீணா போயிடுச்சே”-ஓய்வை அறிவித்த ஹசரங்காவை இழுத்த இலங்கை; ட்விஸ்ட் வைத்த ஐசிசி!

இலங்கை சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்கா டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு முடிவை திரும்பப் பெற்று கம்பேக் கொடுக்க காத்திருந்த நிலையில், தற்போது இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது

Prakash J

ஓய்வை அறிவித்து மீண்டும் அணியில் இடம்பிடித்த ஹசரங்கா

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை கிரிக்கெட் அணி, அங்கு மூன்றுவிதமான தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது. அந்த வகையில், முன்னதாக நடைபெற்ற டி20 தொடரை இலங்கை அணியும், ஒருநாள் தொடரை வங்கதேசமும் கைப்பற்றின. இந்த நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் மார்ச் 22ஆம் தேதி தொடங்க உள்ளது. இத்தொடருக்கான இலங்கை அணி சமீபத்தில் அறிவிக்கபட்டது. இதில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்த முன்னணி சுழற்பந்து வீச்சாளரான வனிந்து ஹசரங்கா தனது ஓய்வு முடிவைத் திரும்பப் பெற்று மீண்டும் இலங்கை டெஸ்ட் அணியில் இடம்பிடித்திருந்தார்.

ஆனால் இத்தொடரில், வனிந்து ஹசரங்கா பங்கேற்க முடியாது என ஐசிசி தடை விதித்துள்ளது. ஹசரங்கா டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு முடிவை திரும்பப் பெற்று கம்பேக் கொடுக்க காத்திருந்த நிலையில், தற்போது இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது இலங்கை அணிக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: குஜராத்: ராஜினாமா கடிதம் அனுப்பிய பாஜக எம்.எல்.ஏ.. பேட்டியில் சொன்ன வித்தியாசமான காரணம்!

ஒரு வருடத்தில் டிமெரிட் புள்ளிகளை அதிகம் பெற்ற ஹசரங்கா

இலங்கை வீரர் வனிந்து ஹசரங்கா, வங்கதேசத்திற்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியின்போது, தன்னுடைய ஓவரை வீசிமுடித்துவிட்டு நடுவரிடம் தொப்பியை பிடுங்கியதுடன், அவரை கேலியும் செய்ததாகக் கூறப்படுகிறது. இது வீரர்களின் நடத்தை விதியை மீறிய செயலாகும். விதிமுறையை மீறி நடுவரின் தீர்ப்பை மதிக்காமல் கேலி செய்ததற்காக அவருக்கு 3 டிமெரிட் புள்ளிகள் கொடுக்கப்படுவதாக ஐசிசி அறிவித்தது. இதேபோல், கடந்த பிப்ரவரி மாதம் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3வது டி20 போட்டியின்போது கள நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அவருக்கு போட்டிக் கட்டணத்தில் 50 சதவீதம் அபராதமும், 3 டிமெரிட் புள்ளிகளும் விதிக்கப்பட்டன. அதனால் 5 டிமெரிட் புள்ளிகளைப் பெற்ற அவர் வங்கதேசத்துக்கு எதிராக நடந்த டி20 தொடரின் முதல் 2 போட்டிகளில் தடையால் விளையாடவில்லை.

புள்ளிகளை அதிகம் பெற்றதால் டெஸ்டில் விளையாடத் தடை!

இந்தச் சூழ்நிலையில் தற்போது கொடுக்கப்பட்டுள்ள 3 டிமெரிட் புள்ளிகளையும் சேர்த்து கடந்த 24 மாதங்களுக்குள் ஹசரங்கா 8 டிமெரிட் புள்ளிகளைப் பெற்றுள்ளார். அதன் காரணமாக அவருக்கு 2 டெஸ்ட் அல்லது 4 ஒருநாள் அல்லது 4 டி20 போட்டிகளில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்படுவதாக ஐசிசி அறிவித்துள்ளது. அந்த வகையில், அவருக்கு எந்தப் போட்டி முதலில் வருகிறதோ, அதற்கு விளையாடத் தடை விதிக்கப்படும். அதன்படி பார்த்தால், முதலில் வங்காளதேசத்துக்கான இரு டெஸ்ட் நடக்க இருப்பதால் அவர் அதில் விளையாட முடியாது.

8 டிமெரிட் புள்ளி என்பது 4 டிமெரிட் (இடைநீக்க) புள்ளியாக எடுத்துக்கொள்ளப்படும். 4 டிமெரிட் புள்ளி என்பது 2 டெஸ்ட் அல்லது 4 ஒருநாள் அல்லது நான்கு 20 ஓவர் போட்டிக்கு தடை விதிப்பதற்கு சமமானது.

இதையும் படிக்க: அண்ணன் மகனுக்கு சீட்: பாஜக மீது அதிருப்தி.. ராஜினாமா செய்த அமைச்சர்.. யார் இந்த பசுபதி குமார் பராஸ்?

”ராஜதந்திரம் எல்லாம் வீணாக போய்விட்டதே”

டி20 தொடரை இலங்கை அணி வென்ற போது வங்கதேச வீரர்களை கலாய்த்தும் வகையில் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்கள். அதேபோல், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஒருநாள் தொடரை வங்கதேச அணி வென்ற போது அவர்களும் பதிலுக்கு ஹெல்மட்டை வைத்து கலாய்த்தார்கள். இப்படியே இருதரப்பும் ஒருவருக்கு ஒருவர் வம்பிழுத்தனர். ஆளுக்கு ஒரு தொடர் வென்றுவிட்ட நிலையில், டெஸ்ட் தொடரை கைப்பற்றுவதில் இரு அணிகளும் முனைப்பு காட்டி வருகிறது. அந்த வகையில் இலங்கை எப்படியாவது தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் ஓய்வை அறிவித்த ஹசரங்காவை உள்ளே இழுத்தது. ஆனால், அவர்கள் திட்டமிட்ட ராஜதந்திரம் தற்போது வீணாக போய்விட்டது. வங்கதேச தொடரில் அவரால் விளையாடவே முடியாது.