இந்தியா மட்டுமில்லாமல் உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக பார்க்கப்படும் விராட் கோலி, 96 டெஸ்ட், 254 ஒருநாள் மற்றும் 93 டி20 போட்டிகளில் பங்கேற்று 26000 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். நட்சத்திர கிரிக்கெட் வீரரான விராட் கோலி தன்னுடைய 35வது பிறந்தநாளை கொண்டாடும் வேளையில், அவர் படைத்த சில முறியடிக்கவே முடியாத சாதனைகள் குறித்து பார்ப்போம்.
ஒடிஐ மற்றும் டெஸ்ட் பேட்ஸ்மேனாக பார்க்கப்படும் விராட்கோலி, அதிரடிக்கு பெயர் போன டி20 கிரிக்கெட் வடிவத்தில் ஒரு நம்பமுடியாத ரெக்கார்டை வைத்துள்ளார். டி20 உலகக்கோப்பையில் 27 ஆட்டங்களில், 81.50 சராசரியுடன் 1,141 ரன்கள் குவித்திருக்கும் கிங் கோலி, டி20 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் 48 சதங்களை விரட்டியிருக்கும் விராட் கோலி, சச்சினின் அதிக ஒருநாள் சதங்கள் (49) என்ற உலகக்கோப்பை சாதனையை முறியடிக்கும் விளிம்பில் இருக்கிறார். சேஸ் மாஸ்டர்” என அழைக்கப்படும் விராட் கோலி, அணி கடினமான கட்டத்தில் அழுத்தமான சூழ்நிலையில் இருக்கும் போது சிறப்பாக விளையாடுவதில் பெயர் போனவர்.
இந்நிலையில் சேஸ் மாஸ்டரான கிங் கோலி, ஒருநாள் கிரிக்கெட்டில் சேஸிங் செய்யும் போது அதிக சதங்கள் அடித்தவர் என்ற சாதனையை படைத்துள்ளார். 48 ஒருநாள் சதங்களில் 26 சதங்களை சேஸ் செய்யும் அடித்துள்ளார் விராட் கோலி.
விராட் கோலி தற்போது அதிகமாக பந்துவீசுவதை நாம் பார்க்க முடியாது. தன்னுடைய முதல் கேப்டனான எம்எஸ் தோனி கேப்டன்சி பொறுப்பிலிருந்து சென்ற பிறகும், ஒரு கடினமான ஐபிஎல் தொடருக்கு பிறகும் பந்துவீசுவதை நிறுத்திவிட்ட விராட் கோலி, பந்துவீச்சில் யாருமே செய்யாத ஒரு சாதனையை படைத்துள்ளார்.
2011-ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டி20 சர்வதேச போட்டியில் கேப்டன் எம்எஸ் தோனி தலைமையில் பந்துவீசிய விராட் கோலி, கெவின் பீட்டர்சனை ஒயிடு பந்தில் விக்கெட் எடுத்து ஒரு பிரத்யேக சாதனையை படைத்துள்ளார். கெவின் பீட்டர்சனுக்கு எதிராக தனது முதல் பந்தை ஒயிடு பந்தாக விராட் கோலி வீச, அதை பிடித்து எம்எஸ் தோனி ஸ்டம்பிங் செய்ய கோலி விக்கெட்டை வீழ்த்தினார். இதன்மூலம் ஆடவர் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் 0 பந்திலேயே விக்கெட் வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை கோலி படைத்துள்ளார்.
ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 8000 ரன்கள், 9000 ரன்கள், 10000 ரன்கள் அடித்தவர் என்ற உலக சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். 259 இன்னிங்ஸில் 10ஆயிரம் ரன்களை கடந்த விராட் கோலி, தன்னுடைய ரோல் மாடலான சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார். இதைச் செய்ய அவருக்கு 10 வருடங்களும் 68 நாட்களும் தேவைப்பட்டன. அவர் 10,831 பந்துகளில் 10,000 ரன்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் மட்டுமில்லாமல் ஐபிஎல் தொடரிலும் தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்தியிருக்கும் கிங் கோலி, 2016-ம் ஆண்டு ஐபிஎல் சீசனீல் மட்டும் 973 ரன்களை குவித்து சாதனை படைத்துள்ளார்.
2016 ஐபிஎல் சீசனில் மட்டும் 16 இன்னிங்ஸ்களில் 81.08 சராசரி மற்றும் 152.03 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 973 ரன்கள் எடுத்தார் விராட் கோலி.