விராட் கோலி cricinfo
கிரிக்கெட்

குறைத்து மதிப்பிட்ட ஆஸ்திரேலியா.. 30வது டெஸ்ட் சதமடித்த கிங் கோலி! 534 ரன்கள் இலக்கு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீரர் விராட் கோலி 30வது டெஸ்ட் சதமடித்து அசத்தியுள்ளார்.

Rishan Vengai

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடுகிறது.

முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நேற்று தொடங்கிய நிலையில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 150 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல்அவுட்டானது. அதனைத்தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா அணியும் இந்தியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 104 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது. பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

ஜெய்ஸ்வால்

அதனைத்தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணியில், தொடக்க வீரர்களாக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கேஎல் ராகுல் இருவரும் விக்கெட்டையே விட்டுக்கொடுக்காமல் 201 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டனர். கேஎல் ராகுல் 77 ரன்கள் அடித்து வெளியேற, அபாரமாக விளையாடிய ஜெய்ஸ்வால் 161 ரன்கள் குவித்து அசத்தினார்.

அதற்குபிறகு களமிறங்கிய கிங் கோலி நிதானமாக விளையாடி சதமடித்த நிலையில், இந்திய அணி 487/6 ரன்கள் எடுத்திருந்த போது 533 ரன்கள் முன்னிலையுடன் டிக்ளர் செய்தது.

30வது டெஸ்ட் சதம்.. 81வது சர்வதேச சதம்!

சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக டெஸ்ட் தொடரை இழந்த பிறகு ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் இந்திய அணி மீது மிகப்பெரிய விமர்சனம் வைக்கப்பட்டது. ஆனால் அதை எல்லாவற்றையும் மீறி இந்தியாவை ஆஸ்திரேலியாவில் வெற்றிக்கு அழைத்துச்செல்லவேண்டிய பொறுப்பு விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவிற்கு இருந்தது.

விராட் கோலி

அந்த பொறுப்பை தனதாக்கி கொண்டுள்ள விராட் கோலி முக்கியமான நேரத்தில் சதமடித்து இந்தியாவை வலுவான ஒரு டோட்டலுக்கு அழைத்துச்சென்றுள்ளார்.

விராட் கோலி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 143 பந்துகளில் 8 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 100* ரன்களை குவித்த விராட் கோலி, தன்னுடைய 30வது டெஸ்ட் சதத்தையும், 81வது சர்வதேச சதத்தையும் எடுத்துவந்து அசத்தியுள்ளார்.

முதல் ஆசிய வீரர்..

ஆஸ்திரேலியா மண்ணில் 7வது சதத்தை அடித்திருக்கும் விராட் கோலி, ஆஸ்திரேலியாவில் அதிக டெஸ்ட் சதங்கள் அடித்த ஆசிய வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.

சச்சின் ஆஸ்திரேலியாவில் 6 சதங்கள் அடித்திருந்த நிலையில், 7 சதங்கள் அடித்து விராட் கோலி அதனை முறியடித்துள்ளார்.

534 ரன்கள் என்ற மாபெரும் இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி, 3வது நாள் முடிவில் 12 ரன்னுக்கு 3 விக்கெட்டை இழந்துள்ளது. அபாரமாக பந்துவீசிய பும்ரா 2 விக்கெட்டுகள் மற்றும் சிராஜ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.