விராட் கோலி pt web
கிரிக்கெட்

“ஆடுபவர்களுக்குத்தான் என்ன நடக்கிறதென தெரியும்”- ஸ்ட்ரைக் ரேட் பற்றிய விமர்சனங்களுக்கு கோலி காட்டம்!

“ஸ்ட்ரைக் ரேட்டைப் பற்றி பேசுபவர்கள், சுழற்பந்து வீச்சிற்கு எதிராக நான் சிறப்பாக விளையாடவில்லை என பேசுகிறார்கள். எனது நோக்கம் அணியை வெல்லச்செய்வது தான். 15 ஆண்டுகளாக இதைச் செய்துள்ளேன்” - விராட் கோலி

Angeshwar G

ஆர்சிபி vs குஜராத் டைட்டன்ஸ்

அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்று ராயல்சேலஞ்சர்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்ததையடுத்து முதலில் குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங் செய்தது. சஹா 5 ரன்களிலும், கில் 16 ரன்களில் வெளியேற, தமிழ்நாட்டை சேர்ந்த சாய்சுதர்சன், ஷாரூக் கான் இணைந்து அதிரடியாக விளையாடி ரன்களை உயர்த்தினர். ஷாரூக்கான் 58 ரன்களில் வெளியேற, டேவிட் மில்லரும் தனது சார்புக்கு அதிரடி காட்டினார். இதனால், அந்த அணி 3 விக்கெட்கள் இழப்பிற்கு 200 ரன்கள் குவித்தது. சாய் சுதர்சன் 84 ரன்களிலும், டேவிட் மில்லர் 26 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

வெற்றி பெற 201 ரன்கள் தேவை என்ற இலக்குடன் களமிறங்கிய ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூரு தொடக்கம் முதல் அதிரடி காட்டியது. கேப்டன் டு பிளசி 24 ரன்களில் பெவிலியன் திரும்ப, விராட் கோலி, வில் ஜேக்ஸ் ஆகியோர் 360 டிகிரிக்கும் பந்தினை விளாசினர். இதன் மூலம் 16 ஓவர் முடிவில் இலக்கை எட்டி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் பெங்களூரு வெற்றிப்பெற்றது. வில் ஜேக்ஸ் 100 ரன்கள், கோலி 70 ரன்கள் விளாசினர்.

அதிரடி சதம் விளாசிய வில் ஜாக்ஸ்

14 ஆவது ஓவரின் முடிவில் விராட் கோலி 43 பந்துகளைச் சந்தித்து 69 ரன்களிலும், வில் ஜாக்ஸ் 29 பந்துகளைச் சந்தித்து 44 ரன்களையும் எடுத்திருந்தனர். ஆனால் 15 ஆவது ஓவரை வீசிய மோஹித் சர்மாவின் பந்துவீச்சை உண்டு இல்லை என்று ஆக்கினார் வில் ஜாக்ஸ். அந்த ஓவரில் மட்டும் 3 சிக்ஸர்கள் 2 பவுண்டரிகள் உட்பட 29 ரன்களை விளாசினார். அடுத்த ஓவரை ரஷித் கான் வீச, முதல் பந்தை எதிர்கொண்ட விராட் ஒரு ரன் எடுத்து ஸ்ட்ரைக்கை மீண்டும் ஜாக்ஸ் -இடம் கொடுத்தார். ரஷித் ஓவரிலும் சம்பவம் செய்தார் ஜாக்ஸ். அந்த ஓவரில் மட்டும் 4 சிக்ஸர்கள் ஒரு பவுண்டரி. போட்டியும் முடிந்தது. ஜாக்ஸும் சதமடித்தார். 44 ரன்களில் இருந்து 100 ரன்களை அடைந்தது இரண்டு ஓவருக்குள் நடந்தது. அதாவது 24 பந்துகளில் மட்டும் 83 பந்துகளைக் குவித்திருந்தார் ஜாக்ஸ்.

விராட் கூறியதென்ன?

விராட் போட்டிக்காக அதிரடியாக ஆடாமல், தனது ரன்னிற்காக நிதானமாக ஆடுகிறார் என்ற விமர்சனம் அவர் மீது எப்போதும் வைக்கப்படும் ஒன்று. நடப்பு ஐபிஎல் தொடரிலும் இந்த விமர்சனம் எழுந்தது. இதற்கு பதிலளிக்கும் வகையில் தனது கருத்தினை பதிவு செய்துள்ளார் விராட். நேற்று போட்டி முடிந்ததும் பேசிய விராட், “ஆரம்பத்தில் ஜாக்ஸ் பேட்டிங் செய்ய வந்தபோது அவர் நினைத்தபடி பந்தை அடிக்க முடியவில்லை என சற்று எரிச்சல் அடைந்தார். ஆனால், அவர் எவ்வளவு அதிரடியாக ஆடக்கூடியவர் என்பது எங்களுக்குத் தெரியும். அவர் மோஹித்திற்கு எதிராக ஆடிய ஆட்டம் எனது ரோலை அங்கு முற்றிலுமாக மாற்றியது. மறுமுனையில் இருந்து அவரது ஆட்டத்தை ரசித்துக் கொண்டிருந்தேன்.

19 ஆவது ஓவரில் ஆட்டத்தை வெல்வோம் என நினைத்திருந்தேன். ஆனால் 16 ஆவது ஓவரிலேயே போட்டியை வென்றது மிகச்சிறந்த முயற்சிக்கு சான்று. ஜாக்ஸின் இந்த சதம் T20I சதங்களில் மிகச்சிறந்த சதங்களில் ஒன்று என நினைக்கிறேன். சேஸிங்கில் எந்த இடத்திலும் ரன் ரேட் 10க்கு கீழே செல்ல நாங்கள் அனுமதிக்கவில்லை.

ஸ்ட்ரைக் ரேட்டைப் பற்றி பேசுபவர்கள், சுழற்பந்து வீச்சிற்கு எதிராக நான் சிறப்பாக விளையாடவில்லை என பேசுகிறார்கள். எனது நோக்கம் அணியை வெல்லச்செய்வது தான். 15 ஆண்டுகளாக இதைச் செய்துள்ளேன். களத்தில், அந்த சூழ்நிலையில் நீங்கள் இல்லாமல், கமெண்டரியில் இருந்துகொண்டு விளையாட்டைப் பற்றி பேசுவது எந்த அளவிற்கு சரி என்று எனக்குத் தெரியவில்லை.

மக்கள் தங்களது அனுமானங்களை தினம் தினம் பேசலாம், ஆனால் தினம் தினம் அதை செய்பவர்களுக்கு அங்கு என்ன நடக்கிறதென தெரியும். அது எனக்கு இப்போது muscle memory போல் உள்ளது” என தெரிவித்துள்ளார்.