விராட் கோலி ட்விட்டர்
கிரிக்கெட்

அணியோடு இணையாத விராட் கோலி.. வெளியான புது தகவல்!

மார்ச் 22-ஆம் தேதி தொடங்க இருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், விராட் கோலி இதுவரை அந்த அணியுடனும் இணையாதது கேள்வியை எழுப்பியுள்ளது.

Prakash J

இன்னும் சில தினங்களில் கோடை வெயிலைக் குளிர்விக்கக் காத்திருக்கிறது, இந்த ஆண்டுக்கான (17வது) ஐபிஎல் சீசன். இதில் வழக்கம்போல் 10 அணிகள் களம் காண உள்ளன. மார்ச் 22ஆம் தேதி தொடங்கும் முதல் போட்டியில், சென்னை அணியும் பெங்களூரு அணியும் மோத உள்ளன. இதற்காக வீரர்கள் அவ்வணி கூடாரத்தில் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், பெங்களூரு அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி குறித்து கடந்த சில நாட்களாக பல்வேறு கேள்விகளும் விமர்சனங்களும் எழுப்பப்பட்டு வருகின்றன. மார்ச் 22ஆம் தேதி, பெங்களூருவுக்கான முதல் போட்டி தொடங்க இருக்கும் நிலையில், அவ்வணியில் விராட் கோலி இதுவரை இணையாதது குறித்து நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

விராட் கோலி

ஆயினும், விராட் கோலி வரும் மார்ச் 19ஆம் தேதி அன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு பயிற்சி முகாமில் இணையலாம் என தகவல் வெளியாகி உள்ளது. அன்றுதான் அவ்வணியின் ‘அன்பாக்ஸ்’ நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இதனால், அந்த நிகழ்ச்சியில் கண்டிப்பாய் பங்கேற்க விராட் கோலி வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கு இரண்டாவது குழந்தை சமீபத்தில் பிறந்தது. இதன் காரணமாக, இங்கிலாந்து டெஸ்ட் தொடரில்கூட அவர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதுகூட அவர் இங்கிலாந்தில் குடும்பத்தினருடன் இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஐபிஎல்லுக்குப் பிறகு, டி20 உலகக் கோப்பை 2024 வர உள்ளது. இதில் கோலியின் தேர்வு குறித்து ஏற்கெனவே கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. டி20 உலகக் கோப்பை அணியில் இருந்து அவர் நீக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.