Olympic Committee meeting Twitter
கிரிக்கெட்

“ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை இணைப்பதற்கு முக்கிய காரணம் விராட் கோலி தான்” - உலக மேடையில் புகழாரம்!

Rishan Vengai

ஆசிய விளையாட்டு போட்டிகளில் கிரிக்கெட் போட்டி சேர்க்கப்பட்டதை தொடர்ந்து, ஒலிம்பிக்கிலும் சேர்க்கப்பட வேண்டும் என்ற குரல் எழுந்தது. பல வருடங்களாக எழுப்பப்பட்ட இந்த குரலுக்கு உயிர் கொடுக்கும் விதமாக கிரிக்கெட் உள்ளிட்ட 5 விளையாட்டுகளை இணைப்பதற்கான பரிந்துரையை லாஸ் ஏஞ்சல்ஸ் விளையாட்டுக்குழு ஒலிம்பிக் கமிட்டிக்கு பரிந்துரை செய்தது. எதிர்வரும் 2028ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறும் நிலையில், அவ்விளையாட்டுக்குழு இந்த பரிந்துரையை வைத்தது.

olympic and cricket

இந்நிலையில், சமீபத்தில் கிரிக்கெட் உள்ளிட்ட மூன்று போட்டிகள் மீண்டும் இணைக்கப்படும் என்றும், புதிதாக இரண்டு போட்டிகளும் சேர்க்கப்படும் என்று செய்திகள் வெளியாகின. இவை இந்தியாவில் நடைபெறும் 141வது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டது.

அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்ட கிரிக்கெட்!

இன்று நடைபெற்ற சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கூட்டத்தில், லாஸ் ஏஞ்சல்ஸ் பரிந்துரைத்த விளையாட்டுகளின் மீது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது “பேஸ்பால், சாப்ட்பால், கிரிக்கெட், லாக்ரோஸ் முதலிய விளையாட்டுக்கள் மீண்டும் ஒலிம்பிக் விளையாட்டுகளுக்கு திரும்புவதாகவும், அதே நேரத்தில் கொடி கால்பந்து மற்றும் ஸ்குவாஷ் முதலிய விளையாட்டுக்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் முதல்முறையாக அறிமுகம் செய்யப்படுவதாகவும்” அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இணைக்கப்பட்ட 6 விளையாட்டுகளில்,

பேஸ்பால் மற்றும் சாப்ட்பால்: ஒலிம்பிக் போட்டிகளின் பல பதிப்புகளில் ஒரு பகுதியாக இருந்துள்ளன. மிக சமீபத்தில் டோக்கியோவில் நடைபெற்ற 2020 ஒலிம்பிக்கில் கூட இடம்பெற்றிருந்தன.

கிரிக்கெட்: கிரிக்கெட்டை பொறுத்தவரையில் 1900 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கான திட்டத்தில் முதன்முறையாக இடம்பெற்றிருந்தது.

லாக்ரோஸ்: செயின்ட் லூயிஸ் 1904 மற்றும் லண்டன் 1908 முதலிய ஒலிம்பிக் பதிப்புகளில் லாக்ரோஸ் இடம்பெற்றிருந்தது.

கொடி கால்பந்து மற்றும் ஸ்குவாஷ்: லாஸ் ஏஞ்சல்ஸ் 2028 ஒலிம்பிக்கில் புதிதாக அறிமுகமாகும் போட்டிகளாகும்.

கிரிக்கெட்டை ஒலிம்பிக்கில் இணைப்பதற்கு முக்கிய காரணம் விராட் கோலி! - LA ஸ்போர்ட்ஸ் இயக்குநர்

2028ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாட்டை சேர்க்கும் அறிவிப்பில், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (IOC) கிரிக்கெட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் விதமாக விராட் கோலியின் படத்தைப் பயன்படுத்தியது. அப்போது கிரிக்கெட் மீதான கலந்துரையாடலின் போது, அமைப்பாளர்கள் விராட் கோலியை உலக கிரிக்கெட்டின் ஒரு முகமாக ஏன் தேர்ந்தெடுத்தார்கள் என்பதை விளக்கினார்கள்.

அதில் பேசிய லாஸ் ஏஞ்சல்ஸ் விளையாட்டுக்குழு இயக்குநர் நிக்கோலோ காம்ப்ரியானி கோலியை பாராட்டி பேசினார். அவர் பேசுகையில், “ எனது நண்பரான விராட் கோலிக்கு சமூக ஊடகங்களில் 340 மில்லியன் பின்தொடர்பவர்கள் உள்ளனர். உலகில் அதிகம் பின்தொடர்பவர்களை வைத்திருக்கும் விளையாட்டு வீரர்களில் 3வது இடத்தைப் பிடித்துள்ளார் கோலி. அவரின் இந்த எண்ணிக்கை டைகர் வூட்ஸ், லெப்ரான், டாம் பிராடி ஆகியோரின் ஒருங்கிணைந்த எண்ணிக்கையை விட அதிகமாகும். கிரிக்கெட்டை லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் இணைப்பதற்கான முக்கிய காரணமாக விராட் கோலி இருக்கிறார். இது லாஸ் ஏஞ்சல்ஸ் 2028 ஒலிம்பிக்கின் மிகப்பெரிய வெற்றி” என்று புகழ்ந்து பேசினார்.

virat kohli

மேலும் மற்றொரு ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினர் பேசும் போது, “இந்தியாவில் கிரிக்கெட் மிகவும் பிரபலமானது. கிரிக்கெட்டில் பல சிறந்த நாடுகள் உள்ளன. அந்த காரணத்திற்காகவே, ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை கொண்டு வருவது நல்லது என்று நாங்கள் உணர்கிறோம். கிரிக்கெட் சங்கத்தின் மிக நெருக்கமான ஒத்துழைப்பை நாங்கள் எதிர்பார்க்கிறோம். மேலும் இந்த புதிய இணைப்பு மற்ற நாடுகளுக்கும், கண்டங்களுக்கும் கிரிக்கெட்டை கொண்டு செல்வதற்கு முன்னுதாரணமாக இருக்கும்” என்று கூறினார்.