தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் இந்திய அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. 26-ம் தேதி தொடங்கப்பட்ட முதல் டெஸ்ட் போட்டியில் டீன் எல்கரின் 185 ரன்கள், ரபாடாவின் 5 விக்கெட்டுகள் என்ற தரமான தாக்குதலால் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்து. இந்திய அணி தரப்பில் கேஎல் ராகுல், விராட் கோலி மற்றும் பும்ரா 3 வீரர்களை தவிர ஒரு வீரர் கூட பெரிதாக சோபிக்காததால் இந்தியா ஒரு பெரிய தோல்வியை தழுவியுள்ளது. இருப்பினும் ஒரு புதிய வரலாற்று சாதனையை படைத்து விராட் கோலி அசத்தியுள்ளார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 38, 76 ரன்களை பதிவுசெய்த விராட் கோலி 2023ஆம் வருடத்தில் ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டெஸ்ட் போட்டிகள் இரண்டையும் சேர்த்து 2000 ரன்களை கடந்தார். அதிகமுறை 2000 ரன்களை பதிவுசெய்த ஒரே வீரர் என்ற சாதனையை படைத்திருக்கும் விராட் கோலி இலங்கையின் குமார் சங்ககரா மற்றும் சச்சின் டெண்டுல்கர் என இரண்டு வீரர்களின் சாதனையை முறியடித்துள்ளார்.
ஒரு காலண்டர் ஆண்டில் 2000 ரன்களை பதிவுசெய்த வீரர்கள் பட்டியலில் 6முறை 2000 ரன்களை கடந்திருந்த குமார் சங்ககரா சாதனையை கோலி முறியடித்துள்ளார்.
இதற்கு முன்பு 2012 (2186 ரன்கள்), 2014 (2286 ரன்கள்), 2016 (2595 ரன்கள்), 2017 (2818 ரன்கள்), 2018 (2735 ரன்கள்), 2019 (2455 ரன்கள்) என 6 முறை 2000 ரன்களை குவித்திருந்த விராட் கோலி இந்தாண்டு 2006 ரன்களை கடந்து, 146 வருட கிரிக்கெட் வரலாற்றில் இந்த சாதனையை படைத்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
தென்னாப்பிரிக்க மண்ணில் சச்சின் 38 போட்டிகளில் 1724 ரன்கள் குவித்திருந்த நிலையில், 29 போட்டிகளில் விளையாடியிருக்கும் விராட் கோலி 1750 ரன்கள் குவித்து தென்னாப்பிரிக்க மண்ணில் அதிக ரன்களை குவித்த முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்து அசத்தியுள்ளார்.