ஷாகிப் - கோலி web
கிரிக்கெட்

ஓய்வுக்கு முன் கடைசி டெஸ்ட் போட்டி.. ஷாகிப் அல் ஹசனுக்கு நினைவு பரிசை வழங்கிய விராட் கோலி!

வங்கதேச அணிக்காக 18 வருடங்கள் விளையாடிய மூத்தவீரர் ஷாகிப் அல் ஹசன் இந்திய மண்ணில் தன்னுடைய கடைசி டெஸ்ட் போட்டியை விளையாடினார்.

Rishan Vengai

எப்போதும் ஆக்ரோசமாக காணப்படும் வங்கதேசம் மற்றும் இந்தியா இடையிலான போட்டிகளானது, இந்தமுறை இரு அணி வீரர்களும் ஒருவருக்கு ஒருவர் சிரித்த முகத்துடன் இருப்பதை களத்திலேயே அதிகமுறை பார்க்க முடிந்தது.

ஒரு ஆக்ரோசமான வாக்குவாதம் இல்ல, சண்டை இல்ல “இந்தியா-வங்கதேசம்” போட்டியா இது என சில ரசிகர்கள் சமூகவலைதளங்களில் பதிவிடும் வகையில் அமைந்த இந்த தொடரானது, வங்கதேச அணியின் மூத்தவீரரான ஷாகிப் அல் ஹசனின் கடைசி டெஸ்ட் தொடராக அமைந்தது.

shakib

சமீபத்தில் தன்னுடைய டெஸ்ட் மற்றும் டி20 ஓய்வை அறிவித்த ஷாகிப் அல் ஹசன், தன்னுடைய கடைசி டெஸ்ட் போட்டியை வங்கதேசத்தின் மிர்பூரில் உள்ள சொந்தமண்ணில் விளையாட விரும்புவதாகவும், அப்படி இல்லை என்றால் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி தான் என்னுடைய கடைசி போட்டியாக இருக்கும் என்று அறிவித்திருந்தார்.

ஷாகிப் அல் ஹசனுக்கு நினைவு பரிசு வழங்கிய கோலி..

வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர் அமைப்பினர் நடத்திய புரட்சி மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது, அப்போது ஒரு மாணவர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளியாக ஷாகிப் அல் ஹசன் பெயரும் இணைக்கப்பட்டுள்ளது. கலைக்கப்பட்ட முந்தைய ஆட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக ஷாகிப் அல் ஹசன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

shakib

தன்னுடைய கடைசி டெஸ்ட் போட்டியை சொந்த மண்ணில் விளையாட முடியாதது குறித்து வருத்தம் தெரிவித்த ஷாகிப் அல் ஹசன், சொந்த நாட்டை விட்டு வெளியேறுவது கொடுமையான ஒன்று என்றும் பிரச்னையின் வீரியம் குறித்து பேசியிருந்தார். ஆனால் வங்கதேச கிரிக்கெட் வாரியம் ஷாகிப்பிற்கு எந்தவிதமான பிரச்னையும் ஏற்படாது என்று கூறியுள்ளது.

இந்நிலையில் கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடிய ஷாகிப் அல் ஹசனுக்கு நினைவு பரிசாக தன்னுடைய பேட்டை விராட் கோலி பரிசளித்துள்ளார். விராட் கோலியின் இந்த செயல் ரசிகர்களிடையே பாராட்டை பெற்றுவருகிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலியை ஷாகிப் அல் ஹசன் போல்டாக்கியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

71 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கும் ஷாகிப் அல் ஹசன், 5 சதங்கள் மற்றும் 1 இரட்டை சதத்துடன் 4609 ரன்களும், 19 ஐந்து விக்கெட்டுகள், 2முறை 10 விக்கெட்டுகளுடன் 246 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.