2008-ம் ஆண்டு U19 உலகக்கோப்பையை கேப்டனாக வென்றதற்கு பிறகான சில மாதங்களில் விராட் கோலி இந்திய சர்வதேச அறிமுகத்தை பெற்றார். இலங்கைக்கு எதிரான தொடரில் ஒருநாள் கிரிக்கெட்டில் சர்வதேச அறிமுகத்தை பெற்ற விராட்கோலி, தன்னுடைய முதல் போட்டியில் 12 ரன்கள் மட்டுமே எடுத்தார். மொத்தமாக அந்த தொடரில் 27 சராசரியுடன் 235 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
ஆனால் அதற்குபிறகு விராட்கோலியின் எழுச்சியானது சர்வதேச கிரிக்கெட்டில் அசுர வளர்ச்சியாக இருந்தது. வருடத்திற்கு வருடம் ரன்களை வாரிக்குவித்த விராட்கோலி, சதங்களை ஏதோ பொழுதுபோக்கிற்காக அடித்துக்கொண்டிருந்தார். கோலியின் அபாரமான திறமையை பார்த்த தோனி பல்வேறு இடையூறுகள் இருந்தபோதும், 2011 ஒருநாள் உலகக்கோப்பைக்கு விராட்கோலியை எடுத்துச்சென்றார். தோனி தலைமையில் இறுதிப்போட்டியில் சிறப்பாக செயல்பட்ட விராட் கோலி 2011 ஒருநாள் உலகக்கோப்பையையும், 2013 சாம்பியன்ஸ் டிராபியையும் வென்று மகுடம் சூடினார்.
அதற்குபிறகு கேப்டனாக இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டை உச்சத்திற்கு அழைத்துச்சென்ற கிங்கோலி, தற்போது 2024 டி20 உலகக்கோப்பையையும் வென்று 3 ஐசிசி கோப்பைகளை வென்ற இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
சச்சின் டெண்டுல்கரின் 49 ஒருநாள் சதங்கள் என்ற இமாலய சாதனையை யாராவது முறியடிப்பார்களா என்ற கேள்வி 10 வருடங்களுக்கு முன்பு கேட்கப்பட்டிருந்தால், முடியவே முடியாது என்ற குரல்கள் தான் அதிகமாக இருந்திருக்கும். ஆனால் தற்போது அந்த நம்பவே முடியாத உலக சாதனையை இந்தியாவின் மற்றொரு வீரரான விராட் கோலி முறியடித்து, ஒருநாள் கிரிக்கெட்டில் 50 சதங்கள் அடித்த முதல் மற்றும் ஒரே வீரராக உலக சாதனையை தன்வசம் வைத்திருக்கிறார்.
விராட் கோலி தனிப்பட்ட சாதனைகளை விட, இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் ஏற்படுத்திய புரட்சி என்பது டெஸ்ட் கிரிக்கெட்டை எப்படி ஆடவேண்டும் என உலக கிரிக்கெட்டுக்கே ஒரு முன்னுதாரணமாக மாறியது.
இந்திய கிரிக்கெட்டில் மட்டுமல்ல உலக கிரிக்கெட்டிலும் அப்படி ஒரு டெஸ்ட் கேப்டனை அதுவரை சரித்திரம் கண்டதில்லை, அப்படி ஒரு தரத்தை விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் ஏற்படுத்தினார். அவருடைய தலைமையில் தான் முதல்முறையாக இந்திய அணி ஆஸ்திரேலியா அணி அதன்சொந்த மண்ணில் வீழ்த்தி வீழ்த்தியது.
68 டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவை வழிநடத்திய விராட் கோலி, 40 போட்டிகளில் வெற்றியையும், 11 போட்டிகளில் சமன் மற்றும் 17 போட்டிகளில் மட்டுமே தோல்வியை சந்தித்திருந்தார்.
விராட் கோலியின் டெஸ்ட் கேப்டன்சி குறித்து பேசிய உலகக்கோப்பை வென்ற இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கன், “டெஸ்ட் கிரிக்கெட் விராட் கோலி போன்ற ஒரு கேப்டனை இழந்துவிட்டது. அவர் டெஸ்ட் கிரிக்கெட்டை அவ்வளவு நேசித்தார் மற்றும் அதை அடுத்த லெவலுக்கு எடுத்துசெல்ல அவ்வளவு ஆர்வமாக இருந்தார். கோலியை தொடர்ந்து தற்போது ஸ்டோக்ஸும் டெஸ்ட் கிரிக்கெட்டை சுவாரசியமான ஒன்றாக மாற்றும் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார்” என்று கூறியிருந்தார்.
இந்தியாவின் டெஸ்ட் கிரிக்கெட்டை புதிய பரிணாமத்திற்கு எடுத்துச்சென்ற விராட் கோலி, ஒரு பேட்ஸ்மேனாகவும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தினார். அவர் ஒரு டெஸ்ட் கேப்டனாக 7 இரட்டை சதங்களை அடித்தார், அவருக்கு அடுத்த இடத்தில் தலைசிறந்த டெஸ்ட் வீரராக பிரையன் லாரா 5 டெஸ்ட் இரட்டை சதங்களுடன் இரண்டாம் இடத்தில் நீடிக்கிறார்.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் குறைவான இன்னிங்ஸ்களில் 13,000 ரன்கள் அடித்த முதல்வீரராக விராட் கோலி சாதனை படைத்தார். 267 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை படைத்த விராட் கோலி, 321 இன்னிங்ஸ்களுடன் முதல் இடத்தில் இருந்த சச்சின் சாதனையை முறியடித்தார்.
ஒருநாள் கிரிக்கெட், டெஸ்ட் மற்றும் டி20 என அனைத்துவடிவ கிரிக்கெட்டையும் சேர்த்து அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் சச்சின் (34357 ரன்கள்), குமார் சங்ககரா (28016 ரன்கள்), ரிக்கி பாண்டிங் (27483 ரன்கள்) முதலிய வீரர்களுக்கு பிறகு 26942 ரன்களுடன் 4வது வீரராக விராட் கோலி நீடிக்கிறார். குமார் சங்ககரா மற்றும் ரிக்கி பாண்டிங் இருவரையும் பின்னுக்கு தள்ள இன்னும் 1074 ரன்கள் மட்டுமே கோலிக்கு மீதமுள்ளது.
2023-ம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பையில் விளையாடிய விராட் கோலி புதிய உலக சாதனையை படைத்தார். இதற்குமுன் ஒரு உலகக்கோப்பை தொடரில் சச்சின் குவித்த 673 ரன்களே அதிகபட்ச ரன்களாக இருந்தநிலையில், 765 ரன்களை குவித்த விராட் கோலி சச்சின் சாதனையை முறியடித்தார். அதுமட்டுமல்லாமல் ஒரு உலகக்கோப்பையில் 700 ரன்களை குவித்த முதல் வீரர் என்ற சாதனையையும் விராட் கோலி படைத்துள்ளார்.
ஒருநாள் போட்டிகளில் ஒரு எதிரணிக்கு எதிராக அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற தனிச் சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். 2008-2024 முதல் இலங்கை அணிக்கு எதிராக 10 ஒருநாள் சதங்களை பதிவுசெய்து விராட் கோலி இந்த சாதனையை படைத்துள்ளார். அடுத்த இடத்தில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 9 சதங்களுடன் விராட்கோலியும், 3வது இடத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 9 சதங்களுடன் சச்சின் டெண்டுல்கரும் நீடிக்கின்றனர்.
விராட் கோலி டி20 போட்டிகளில் அதிக அரைசதங்களை அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். கோலி டி20 போட்டிகளில் 39 அரைசதங்கள் அடித்து பாகிஸ்தானின் பாபர் ஆசாமுடன் சம நிலையில் உள்ளார்.
இந்திய அணிக்காக அதிக வெற்றிகளில் பங்கேற்ற வீரர் என்ற சாதனைப்பட்டியலில் 307 வெற்றிகளுடன் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் இருந்தார். அதை கடந்த வருடம் 2023 ஒருநாள் உலகக்கோப்பையின் இலங்கைக்கு எதிரான வெற்றியின் போது முறியடித்தார் விராட் கோலி.