விராட் கோலி Gurinder Osan
கிரிக்கெட்

கடினமான ஆடுகளத்தில் அசத்தலான சதம்... சாதனை சதத்தால் இந்தியாவை வெற்றி பெற வைத்த விராட் கோலி..!

பெரிய ஸ்கோர் எடுக்கவேண்டிய போட்டியில் மிகவும் மெதுவாக ஆடி ரன்ரேட்டை குறைக்கின்றனர் என்றார்கள். கோலி மீதோ எல்லையற்ற விமர்சனங்கள். சதமடிப்பதற்காக மெதுவாக ஆடுகிறார், சொந்த சாதனைகளுக்காக ஆடுகிறார் என்றெல்லாம் விமர்சனம் செய்யத் தொடங்கினார்கள்.

Viyan
போட்டி 37: இந்தியா vs தென்னாப்பிரிக்கா
முடிவு: 243 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி
இந்தியா: 326/5
தென்னாப்பிரிக்கா: 83 ஆல் அவுட் (27.1 ஓவர்கள்)
ஆட்ட நாயகன்: விராட் கோலி - 121 பந்துகளில் 101 நாட் அவுட் (10 ஃபோர்கள்)

கோலி - ஷ்ரேயாஸ் ஐயர் இருவரும் பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது பல விமர்சனங்கள் எழுந்தன. பெரிய ஸ்கோர் எடுக்கவேண்டிய போட்டியில் மிகவும் மெதுவாக ஆடி ரன்ரேட்டை குறைக்கின்றனர் என்றார்கள். கோலி மீதோ எல்லையற்ற விமர்சனங்கள். சதமடிப்பதற்காக மெதுவாக ஆடுகிறார், சொந்த சாதனைகளுக்காக ஆடுகிறார் என்றெல்லாம் விமர்சனம் செய்யத் தொடங்கினார்கள். ஏனெனில் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. 10 ஓவர்களிலேயே சுமார் 90 ரன்கள் விளாசியிருந்தது இந்திய அணி. ஆனால் அதைவைத்து அது பேட்டிங் பிட்ச் என்று நினைத்துவிட முடியுமா?

Shreyas Iyer | Virat Kohli

மிடில் ஓவர்களில் தென்னாப்பிரிக்க ஸ்பின்னர்கள் பந்துவீசிய விதம், தென்னாப்பிரிக்க இன்னிங்ஸில் இந்தியா விளையாடிய விதம் ஆகியவற்றை பார்த்த பிறகு தான் அது எப்படிப்பட்ட ஆடுகளம் என்று அனைவரும் புரிந்துகொண்டனர். இப்படியொரு ஆடுகளத்தில் கோலி இந்த அணுகுமுறையை கையாளாமல் இருந்திருந்தால் தென்னாப்பிரிக்க விக்கெட்டுகள் சரிந்தது போல் இந்திய விக்கெட்டுகளும் சரிந்திருக்கும்.

அதேசமயம் கோலியின் ரோல் இந்தப் போட்டியில் என்ன, அது அணிக்கு எப்படி முக்கியமாகிறது என்பதையும் நாம் புரிந்துகொள்வது அவசியம். அதிக ஓவர்கள் நிலைத்து நின்று ஆடவேண்டும் என்பதுதான் கோலிக்கு கொடுக்கப்பட்ட வேலை. அவர் ஒரு எண்டில் விக்கெட் விழாமல் தாங்கி நிற்கும்போது மற்ற பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ஆடி ரன்ரேட்டைப் பார்த்துக்கொள்ளவேண்டும். அந்த வகையில் தன் வேலையை கோலி சிறப்பாகவே செய்தார். அவர் நீடித்து நின்றதால் தான் கடைசி கட்டத்தில் ஷ்ரேயாஸ், சூர்யா, ஜடேஜா ஆகியோரால் அதிரடி காட்ட முடிந்தது. அதனால் தான் 280 ரன்களே கடினமாக இருந்திருக்கும் இந்த மைதானத்தில் இந்திய அணியால் 326 ரன்கள் குவிக்கப்பட்டது.

ஆஸ்திரேலிய அணியை கவனித்தீர்களா? அவர்கள் ஏன் லாபுஷானை அணிக்குள் எடுத்து வந்தனர். விக்கெட் விழாமல் பார்த்துக்கொள்ளக்கூடிய, மற்ற பேட்ஸ்மேன்களுக்கு விக்கெட் சரிவு பற்றிய பயம் வராத அளவுக்கு நம்பிக்கை கொடுக்கக் கூடிய ஒரு வீரர் வேண்டும். அது அதிரடி பேட்ஸ்மேன்களுக்கு நம்பிக்கை கொடுக்கும். கோலி இந்திய அணிக்கு இப்போது செய்து வருவது அந்த வேலை தான். அவர் மற்ற பேட்ஸ்மேன்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் பொறுப்பையும் எடுத்துக்கொண்டிருக்கிறார். கே எல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், சுப்மன் கில் என ஒவ்வொரு வீரருடனும் மிகப் பெரிய பார்ட்னர்ஷிப்களை உருவாக்கி இந்தியாவின் வெற்றிகளுக்கு ஒவ்வொரு போட்டியிலும் காரணமாக இருந்திருக்கிறார். இது எந்த வகையிலுமே விமர்சனம் செய்ய முடியாத ஒரு இன்னிங்ஸ்.

இது ஒரு வெற்றிக்கான சதம் என்பதைத் தாண்டி, அவர் பிறந்த நாளில் வந்திருக்கிறது. அதை விட சிறப்பாக அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் சச்சினோடு அவரை சமன் செய்ய வைத்திருக்கிறது இந்த சதம். மெதுவான சதம் என்று நாம் நினைக்கலாம். ஆனால், இது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சதமாக மாறியிருக்கிறது.

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்கள்

விராட் கோலி: 49 - 289 போட்டிகள்
சச்சின் டெண்டுல்கர்: 49 - 452 போட்டிகள்
ரோஹித் ஷர்மா: 31 - 259 போட்டிகள்
ரிக்கி பான்டிங்: 30 - 375 போட்டிகள்
சனத் ஜெயசூரியா: 28 - 445 போட்டிகள்

ஆட்ட நாயகன் என்ன சொன்னார்?

"இது ஒரு மிகப் பெரிய போட்டி. இதுவரை இந்தத் தொடரில் நாங்கள் விளையாடிய அணிகளிலேயே மிகவும் கடினமான அணி. அதனால் சிறப்பாக விளையாடவேண்டும் என்ற வேட்கை அதிகமாகவே இருந்தது. என் பிறந்த நாளை ரசிகர்கள் இன்னும் சிறப்பாக்கிவிட்டனர். இது வெறும் சதம் என்பதைத் தாண்டிய உணர்வு எனக்கு ஏற்பட்டது. ஓப்பனர்கள் இப்படியொரு அதிரடி தொடக்கம் கொடுக்கும்போது, இது மிகச் சிறந்த பேட்டிங் பிட்ச் என்று எல்லோரும் நினைப்பார்கள். ஆனால் பழைய பந்தில் ஆடும்போது சூழ்நிலை முற்றிலும் மோசமாக இருக்கும். என்னை அதிக நேரம் களத்தில் இருக்கச் சொல்லி அணி நிர்வாகம் தகவல் அனுப்பியிருந்தது. அவர்கள் பார்வை எனக்கு மகிழ்ச்சியளிப்பதாக இருந்தது. 315 ரன்கள் அடித்திருந்தபோதே நாங்கள் தேவையான ஸ்கோருக்கு மேல் அடித்திருக்கிறோம் என்று தெரியும். நான் மீண்டும் கிரிக்கெட்டை அனுபவித்து விளையாடுகிறேன். அதுதான் மிகவும் முக்கியமான ஒன்று. அதனால் என்னால் அணிக்கு மீண்டும் முழுமையாகப் பங்களிக்க முடிகிறது. என்னை அப்படி அனுபவித்து விளையாட வைத்ததற்கு கடவுளுக்கு நன்றி. இந்த சதம் குறித்து சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இதையெல்லாம் என்னால் இப்போது யோசிக்கவே முடியவில்லை. என்னுடைய ஹீரோவின் சாதனையை சமன் செய்திருப்பது மிகப் பெரிய கௌரவும். அவர் ஒரு பெர்ஃபெக்ட்டான பேட்ஸ்மேன். அவர் சாதனையை சமன் செய்திருக்கும் இது மிகவும் எமோஷனலான தருணமாக இருக்கிறது. நான் என்னுடைய கடந்த காலத்தை அறிவேன். அவர் கிரிக்கெட் விளையாடியதை டிவியில் பார்த்து வளர்ந்தவர்ன் நான். அப்படிப்பட்ட ஒருவரிடமிருந்து பாராட்டுப் பெறுவது எனக்கு மிகப் பெரிய விஷயம்"
விராட் கோலி