தோனி, வெங்கடேஷ் ஐயர் twitter
கிரிக்கெட்

தோனி மட்டும் தனித்து தெரிவது ஏன்? வெங்கடேஷ் ஐயர் பகிர்ந்த ஃபீல்டிங் ரகசியம்!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வியக்கத்தக்க ஃபீல்டிங் குறித்து சக வீரரான வெங்கடேஷ் ஐயர் புகழ்ந்துள்ளார்.

Prakash J

மைதானத்தில் தோனி நிறுத்தும் ஃபீல்டிங் வியூகம் குறித்து மனம்திறந்து பேசியுள்ளார், வெங்கடேஷ் ஐயர். இதுகுறித்து அவர், “நான் பேட்டிங் செய்த ஒரு தருணத்தில், ஷாட் ஒன்று விளையாடி Third man-ல் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தேன். நான் திரும்பிப் பார்த்தபோது, என் பந்தை கேட்ச் பிடித்த வீரர் அந்த ஏரியாவில் தவறான இடத்தில் நின்று கொண்டிருந்தார். அதாவது, அவர் நிற்க வேண்டிய இடம் அதுவல்ல. அது தோனியின் வேலை என்று பின்தான் உணர்ந்தேன்.

வெங்கடேஷ் ஐயர்

இதுகுறித்து போட்டிக்குப் பிறகு, அவரிடம் (தோனியிடம்) சென்று ‘ஏன் அப்படி ஃபீல்டிங் செய்ய வைத்தீர்கள்’ என்று கேட்டேன். அதற்கு அவர், ’உன் பேட்டை தொடும் பந்து, எந்தத் திசையில் செல்கிறது என்பதைக் கணித்துவிட்டேன்’ என்றார். இதுவெல்லாம் நான் யோசித்து பார்க்காத ஒரு விஷயம். கிரிக்கெட் என்பதே கோணங்களை மிகச் சரியாகப் புரிந்துகொள்வதுதான். அதை அவர் மிக விரைவாக புரிந்துகொள்வதுதான் அவருடைய பலம் என்று நான் நினைக்கிறேன்.

இன்னொரு முறை கொல்கத்தாவில் விளையாடியபோது, நானும் மற்றொரு வீரரும் பேட்டிங் செய்துகொண்டிருந்தோம். அப்போது, ஒரு ஷாட்டில் தேர்ட்மேன், கவர் திசையிலும் ஆப்சைடிலும் இரண்டு ஃபீல்டர்கள் என இருந்தார்கள். அதுவரை எல்லாமே சரியாக இருந்தது. ஆனால் உடனே தோனி ஒரு ஃபீல்டரை அழைத்து மறுபக்கம் நிற்க வைத்தார். அப்போது, என்னுடன் விளையாடியவர் மிகச் சரியாக அவரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.

MS Dhoni

அப்போதுதான் நான் யோசித்தேன், இதை 3-4 பந்துகள் கழித்துக்கூட அவர் (தோனி) செய்திருக்க முடியும். ஆனால் எப்படி உடனே குறிப்பிட்ட அதே பந்தில் அந்த வேலையை அவர் செய்கிறார் என்று ஆச்சர்யப்பட்டுப் போனேன். இங்கு பல ஜாம்பவான் வீரர்கள் இருந்தாலும் தோனி போல இயல்பாக யாரும் இல்லாததுதான் அவரை தனித்து காட்டும் ஒரு விஷயமாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.