தீப்தி ஷர்மா Cricinfo
கிரிக்கெட்

GG-RCB இரண்டு அணிகளையும் கதறவிட்ட தீப்தி.. குஜராத் வெற்றியால் RCB-க்கு திறந்த எலிமினேட்டர் கதவு!

வென்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் டெல்லி உடன்மோதிய RCB அணி 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி சோகமுகத்தோடு வெளியேறியது. இந்நிலையில் தற்போது உ.பி அணியை வீழ்த்தியிருக்கும் GG அணி RCB அணிக்கான எலிமினேட்டர் வாய்ப்பை பிரகாசமாக்கியுள்ளது.

Rishan Vengai

மகளிருக்கான 2024 ஐபிஎல் தொடரானது பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்தாண்டு முதல் தொடங்கி நடைபெற்றுவரும் மகளிர் ஐபிஎல் தொடரின் முதல் சீசனில் மும்பை அணி கோப்பை கைப்பற்றிய நிலையில், இரண்டாவது சீசன் கடந்த பிப்ரவரி 23ம் தேதிமுதல் நடைபெற்றுவருகிறது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடல்ஸ், உ.பி. வாரியர்ஸ் மற்றும் குஜராத் ஜியண்ட்ஸ்” முதலிய 5 அணிகளுக்கு இடையே பரபரப்பாக நடைபெற்ற லீக் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. 20 லீக் போட்டிகளில் 18 போட்டிகள் முடிவுற்ற நிலையில் ”டெல்லி கேபிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ்” அணிகள் அடுத்தச்சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளன.

kaur

இந்நிலையில் அடுத்தசுற்றுக்கு செல்வதற்கான 3வது அணி எது என்பதில், 3வது மற்றும் 4வது இடத்தில் இருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் உபி வாரியர்ஸ் அணிகளுக்கிடையே போட்டி ஏற்பட்டது. RCB மற்றும் UP வாரியர்ஸ் இரண்டு அணிகளும் சம புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியில் இருந்த நிலையில், கடைசி 2 போட்டிகளில் வெற்றிபெற்றே ஆகவேண்டிய இடத்தில் டெல்லி அணிக்கு எதிராக விளையாடி ஆர்சிபி அணி 1 ரன் வித்தியாசத்தில் தோற்று சோகமுகத்தோடு வெளியேறியது.

ஆர்சிபி அணி டெல்லி அணிக்கு எதிராக தோற்ற நிலையில், உபி அணிக்கான வாய்ப்பு பிரகசாமாக மாறியது. எலிமினேட்டர் சுற்றுக்கு செல்லும் தங்களுடைய தக்கவைக்கும் முயற்சியில் நேற்றைய போட்டியில் குஜராத் ஜியண்ட்ஸ் அணியை எதிர்கொண்டு விளையாடியது உபி வாரியர்ஸ் அணி.

பைனலுக்கு செல்லும் ரூட் என்ன?

8 லீக் போட்டிகளில் விளையாடும் 5 அணிகளில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதிபெறும். அதில் எந்த அணி அதிகபுள்ளிகளுடன் பாய்ண்ட்ஸ் டேபிளில் முதலிடம் பிடிக்கிறதோ, அந்த அணி யாருடனும் மோதாமல் நேரடியாக இறுதிப்போட்டிக்கு செல்லும்.

2வது மற்றும் 3வது இடங்கள் பிடிக்கும் அணிகள் ஒரு எலிமினேட்டர் சுற்றில் மட்டும் மோதி, வெற்றிபெறும் அணி இறுதிப்போட்டிக்கும் தோல்விபெறும் அணி தொடரை விட்டே வெளியேறும். பின்னர் எலிமினேட்டரில் வெற்றிபெற்ற அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய அணியோடு கோப்பைக்காக மோதும்.

2024 WPL Auction

ஐபிஎல் தொடரை போல அல்லாமல் மகளிர் பிரீமியர் லீக்கில் ஒரேயொரு எலிமினேட்டர் மற்று பைனல் போட்டி மட்டும் நடைபெறும்.

கடைசி வாய்ப்பை நழுவவிட்ட உபி அணி!

வெற்றிபெற்றே ஆகவேண்டிய போட்டியில் குஜராத் அணியை எதிர்கொண்ட உபி அணி, முதலில் பந்துவீசியது. முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணியில் உல்வர்ட் மற்றும் கேப்டன் மூனே இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். உல்வர்ட் 8 பவுண்டரிகள் 1 சிக்சர் என விளாசி 43 ரன்கள் அடிக்க, கடைசிவரை நிலைத்து நின்று விளையாடிய மூனே 10 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 74 ரன்கள் குவித்தது. இருவரின் அசத்தலான ஆட்டத்தால் 152 ரன்கள் சேர்த்தது குஜராத் ஜியண்ட்ஸ் அணி.

mooney

எலிமினேட்டர் சுற்றுக்கு தகுதிபெறும் வாய்ப்பை தக்கவைக்க வேண்டுமானால் 120 பந்துகளில் 153 ரன்களை அடிக்கவேண்டும் என்ற இலக்கோடு களமிறங்கியது உபி வாரியர்ஸ் அணி. ஆனால் பெரிய கனவோடு வந்த உபி அணியை 16 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அடிக்குமேல் அடிகொடுத்தது குஜராத் அணி. அலிஸா ஹீலி 4 ரன்னில் வெளியேற, கிரன் மற்றும் அத்தபத்து இருவரும் டக் அவுட்டில் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தனர். 35 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்த உபி அணி தடுமாறியது.

கடைசிநேரத்தில் கதிகலங்க வைத்த தீப்தி ஷர்மா!

அவ்வளவு தான் உபி அணி எளிதில் சுருண்டுவிடும் என்று நினைத்த நிலையில், 6வது விக்கெட்டுக்கு பூனம் உடன் கைக்கோர்த்த தீப்தி ஷர்மா மரணமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கடைசிவரை விக்கெட்டையே விட்டுக்கொடுக்காத இந்த கூட்டணி 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு மிரட்டியது.

gujarat

கடைசி ஒரு ஓவரில் 26 ரன்கள் தேவை என்ற இடத்தில் முதல் 4 பந்துக்கு 2 சிக்சர்களுடன் 16 ரன்களை விரட்டிய தீப்தி ஷர்மா மிரட்சியை ஏற்படுத்தினார். இறுதி 2 பந்துக்கு 10 ரன்கள் தேவை என போட்டி மாற GG மற்றும் RCB இரண்டு அணியையும் பயமுறுத்தினார் தீப்தி. 5வது பந்து சரியான தீப்தி பேட்டில் சரியாக பந்து மாட்டாததால் ஒரு ரன் மட்டுமே எடுக்க, 8 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றிபெற்றது. 60 பந்துகளில் 9 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் என விரட்டி 88 ரன்கள் குவித்து தீப்தி ஷர்மா ஒரு மறக்கமுடியாத ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

deepti sharma

6 லீக் போட்டிகளில் 1 போட்டியில் மட்டுமே வெற்றிபெற்று 5 போட்டிகளில் தோல்வியை சந்தித்திருந்த குஜராத் அணி ஆர்சிபிக்காவே வெற்றிபெற்றது போல் இருந்தது. ”அவன் அடிக்கும் போதுலாம் சும்மா இருந்துட்டு என்ன மட்டும் ஏன் டா அடிச்ச” என்ற வசனத்திற்கு ”அவனுக்கும் சேர்த்து தாண்டா உன்ன அடிச்சன்” என்பது போல் எல்லா அணியுடனும் தோல்வியை பெற்றுவிட்டு உபி அணிக்கு மட்டும் வில்லனாக மாறியுள்ளது குஜராத் அணி. எப்படியோ ஆர்சிபி அணிக்கு அடுத்துச்சுற்றுக்கு செல்வதற்கான பிரகாசமான வாய்ப்பு அமைந்துள்ளது.

இன்று நடைபெறும் முக்கியமான போட்டியில் மும்பையை எதிர்கொள்கிறது ஆர்சிபி அணி.