இந்திய அணியில் பும்ரா, முகமது ஷமி, சிராஜ் முதலிய வீரர்களை தவிர வேறு எந்த வேகப்பந்துவீச்சாளர்களும் நம்பிக்கை தரும் பவுலர்களாக இதுவரை இந்திய அணிக்கு கிடைக்கவில்லை. மூத்த வேகப் பந்துவீச்சாளராக இந்திய அணிக்கு நீண்டகாலமாக இருந்த இஷாந்த் சர்மா ஓய்வுபெற்றபிறகு அந்த இடம் காலியாகவே இருந்துவருகிறது. அவருக்கு அடுத்த இடத்தில் இருந்த புவனேஷ்குமார் காயத்தால் வெளியேறிய நிலையில், அவருக்கான வாய்ப்பும் மறுக்கப்பட்டுள்ளது.
ஆனால் எந்தவிதமான காயம் சார்ந்த பிரச்னைகளும் இல்லாத போதும் உமேஷ் யாதவிற்கான வாய்ப்பை தொடர்ந்து பிசிசிஐ நிராகரித்தே வருகிறது. ஒருபக்கம் பேட்ஸ்மேன்களில் எதற்காக புஜாரா, ரஹானே, விஹாரி, ரிதிமான் சாஹா போன்ற வீரர்களை டெஸ்ட் போட்டிகளில் ஒதுக்கிவிட்டது என்ற கேள்வியை நிறைய பேர் எழுப்பினாலும், பந்துவீச்சில் எதற்காக உமேஷ் யாதவை ஒதுக்கினீர்கள் என யாரும் கேட்கவில்லை.
இந்நிலையில் சிராஜ் இல்லாத நிலையில் ஆவேஷ் கான் எடுக்கப்பட்ட நிலையில், ஆவேஷ் கான் இல்லாத நிலையில் தற்போது ஆகாஷ் தீப் எடுக்கப்பட்டுள்ளார். இந்த சூழலில் ஒரு எமோசனலான இன்ஸ்டாகிராம் பதிவை பதிவிட்டுள்ளார் உமேஷ் யாதவ்.
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 3 போட்டிகளுக்காவது உமேஷ் யாதவ் எடுக்கப்படுவார் என்று நினைத்திருந்த நிலையில், பிசிசிஐ புதிய வீரரான ஆகாஷ் தீப்பை அறிமுக டெஸ்ட்டுக்கு தேர்ந்தெடுத்துள்ளது. அவர் சமீபத்தில் நடைபெற்ற இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக பந்துவீசியிருந்ததால் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கும் சூழலில் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கும் உமேஷ் யாதவ், “புத்தகங்களில் குவியும் தூசியால் கதைகள் முடிவதில்லை” என எமோசனலாக பதிவிட்டுள்ளார்.
உமேஷ் யாதவுக்கு ஆதரவாக பதிவிட்டு வரும் ரசிகர்கள் “மோசமான நிர்வாகம் என்றும், அவர் வாய்ப்புக்கு தகுதியானவர் என்றும்” பதிவிட்டுவருகிறார்கள்.