ishan kishan PTI
கிரிக்கெட்

நான்கு பேர், இரண்டு இடங்கள்... இந்திய மிடில் ஆர்டரில் யாருக்கு இடம் தரவேண்டும்?

இரட்டைச் சதம் அடித்ததன் பிறகுகூட அவருக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அவர் எந்த இடத்தில் விளையாடுகிறார் என்பதையெல்லாம் விட அவர் அணியில் இடம்பெறவேண்டும்

Viyan

2023 ஐசிசி உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 5ம் தேதி இந்தியாவில் தொடங்குகிறது. இந்திய அணி தங்கள் முதல் போட்டியில் அக்டோபர் 8ம் தேதி ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது. இந்தத் தொடரில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இந்திய அணி கடந்த 15ம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்திய அணி அறிவிக்கப்பட்டதில் இருந்தே ஒவ்வொரு திசையிலிருந்தும் பல வகையான கருத்துகள் வரத் தொடங்கிவிட்டன. உலாவிக்கொண்டிருக்கும் பல கேள்விகளில் முதன்மையானது இந்திய பிளேயிங் லெவனில் மிடில் ஆர்டரில் யாருக்கு இடம் கிடைக்கவேண்டும் என்பது.

இந்திய பிளேயிங் லெவனில் உறுதியான வீரர்கள்

1. ரோஹித் ஷர்மா

2. சுப்மன் கில்

3. விராட் கோலி

4.

5.

6. ஹர்திக் பாண்டியா

7. ரவீந்திர ஜடேஜா

8.

9. குல்தீப் யாதவ்

10. ஜஸ்ப்ரித் பும்ரா

11.

இந்திய அணியின் பிளேயிங் லெவனைப் பொறுத்தவரை 7 இடங்களுக்கு எந்த பிரச்சனையும் குழப்பமும் இல்லை. இந்திய பௌலர்கள் அவ்வளவாக பேட்டிங் செய்யமாட்டார்கள் என்பதால் நம்பர் 8 ஸ்லாட் ஷர்துல் தாக்கூருக்குத்தான். நம்பர் 11ல் கூட முகமது சிராஜ் அல்லது முகமது ஷமி இருவரில் ஒருவர் விளையாடுவார்கள். பெரும்பாலும் சிராஜ் விளையாடுவதற்கே வாய்ப்பு அதிகம். பிரச்சனை அந்த 4 மற்றும் 5 இடங்களுக்குத்தான்.

கடந்த சில மாதங்கள் வரை கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர் இருவரும் தான் அந்த ஸ்லாட்டுக்குப் பொறுத்தமாக இருப்பார்கள் என்று கருதப்பட்டது. ஆனால் அவர்கள் இருவரும் ஒரே சமயத்தில் காயமடைய இந்திய அணி பல வீரர்களை அந்த இடத்தில் பரிசோதித்துப் பார்த்தது. இப்போது ராகுல், ஷ்ரேயாஸ் போக இஷன் கிஷன், சூர்யகுமார் யாதவ் ஆகியோரும் உலகக் கோப்பைக்கான ஸ்குவாடில் இடம்பெற்றிருப்பதால் பல கேள்விகள் உருவெடுத்திருக்கின்றன.

தற்போது நடந்துவரும் ஆசிய கோப்பை தொடரில் ராகுல், ஷ்ரேயாஸ் இருவரும் சிறப்பாக செயல்பட்டு தங்கள் இடத்தை உறுதி செய்துவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தொடருக்கு முன்பு ராகுலின் ஃபிட்னஸ் மீண்டும் கேள்விக்குறியாக அவர் இந்தியா இதுவரை விளையாடிய இரு போட்டிகளிலும் விளையாடவில்லை. ராகுல் விளையாடாததால், இஷன் கிஷன் மிடில் ஆர்டரில் களமிறக்கப்பட்டார். பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய டாப் ஆர்டர் மொத்தமாக ஆட்டம் காண, இஷன் கிஷன் தன் அட்டகாச ஆட்டத்தில் அணியை மீட்டெடுத்தார். ஐந்தாவது வீரராகக் களமிறங்கிய அவர் 81 பந்துகளில் 82 ரன்கள் விளாசினார்.

இந்திய மிடில் ஆர்டரில் இடது கை பேட்ஸ்மேன்களே இல்லை என்று பலரும் விமர்சித்து வந்த நிலையில், இந்த இன்னிங்ஸில் இஷன் ஆடிய ஆட்டம் அவருக்கு பிளேயிங் லெவனில் இடம் தரப்படவேண்டும் என்ற வாதத்தை அதிகரிக்கச் செய்தது. சமீபத்தில் இதுபற்றிப் பேசிய கம்பீர் கூட இஷனுக்கு சாதகமாக தன் கருத்தை முன்வைத்திருக்கிறார். "இந்திய அணி இஷனுக்குப் பதிலாக ராகுலை தேர்வு செய்தால் அது மிகப் பெரிய தவறாக அமையும். இஷனுக்கு அதிக வாய்ப்புகள் கொடுக்கப்படுவதில்லை. வாய்ப்பு கிடைக்கும்போதும் அவர் நெருக்கடிக்குள்ளாகிறார். இரட்டைச் சதம் அடித்ததன் பிறகுகூட அவருக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அவர் எந்த இடத்தில் விளையாடுகிறார் என்பதையெல்லாம் விட அவர் அணியில் இடம்பெறவேண்டும். அவர் இந்த ஒருநாள் ஃபார்மட்டை நன்கு புரிந்திருக்கிறார்" என்று கூறியிருக்கிறார் கம்பீர்.

ராகுலை விட இஷன் தான் சரியான சாய்ஸ் என்று கம்பீர் சொல்லியிருக்க, சூர்யகுமார் யாதவ் நிச்சயம் பிளேயிங் லெவனில் இடம்பெறவேண்டும் என்று ஹர்பஜன் சிங் தன் கருத்தைத் தெரிவித்திருக்கிறார். "சூர்யா ஆடும்போது அது எதிரணி மீது பெரும் நெருக்கடியை ஏற்படுத்திவிடும். மிடில் ஆர்டரில் அவர் செய்யக்கூடியதை ரோஹித், கோலி ஆகியோரால் கூட செய்ய முடியாது. அவர் ஆட்டத்தை மாற்றிவிடக்கூடியவர். இருபதே பந்துகளில் 50-60 ரன்களை அவரால் எடுக்க முடியும். அப்படியொரு வீரரை வெளியே அமரவைத்து வீணடிக்கக்கூடாது" என்று கூறியிருக்கிறார் ஹர்பஜன்.

சொல்லப்போனால் சூர்யாவுக்கு பிளேயிங் லெவனில் ஆடுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவுதான். ராகுல், ஷ்ரேயாஸ் இருவரையும் இந்திய அணி பிராதனப்படுத்தும்பட்சத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்காது. ஆனால் இப்போது அவர்கள் இருவருமே தடுமாறுகிறார்கள். ஷ்ரெயாஸ் இன்னும் வேகப்பந்துவீச்சுக்கும், பௌன்சுக்கும் தடுமாறுகிறார். இருந்தாலும் இந்திய ஆடுகளங்களில் ஸ்பின்னுக்கு எதிராக அவர் சிறப்பாக ஆடுவார் என்பது அவருக்கு சாதகமான விஷயம். இருந்தாலும் இந்த ஆசிய கோப்பையில் அவர் தன் பழைய ஃபார்மை நிரூபிக்கத் தவறும் பட்சத்தில் சூர்யாவுக்கு வாய்ப்பு கிடைக்கலாம். இப்போது அந்த 2 இடங்களும் இழுபறியாகவே இருக்கிறது. இருக்கும் 4 வீரர்களில் அக்டோபர் 8ம் தேதி எந்த இருவர் களமிறங்கப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.