Minnu Mani File Image
கிரிக்கெட்

இந்திய அணிக்காக விளையாடப் போகும் கேரள பழங்குடிப் பெண் - யார் இந்த மின்னு மணி?

‘’சில சமயங்களில் நாம் பொறுமையாக காத்திருக்க வேண்டும். நமக்கு வெற்றி கிடைக்கும் வரை பயிற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும்” என்கிறார் மின்னு மணி.

Justindurai S

ஊரில் உள்ள மற்ற பெண்களைப் போல் வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடக்காமல், சிறுமியாக இருக்கும் போதே வெளியே வந்து கிரிக்கெட் விளையாடிய போது மின்னு மணிக்கு ஒன்று புரிந்தது. தான் எந்தளவிற்கு கிரிக்கெட்டை நேசிக்கிறோம் என்பதை அன்று அவர் தெரிந்து கொண்டார். இவரது வீட்டின் அருகாமையில் ஆண்கள் மட்டுமே கிரிக்கெட் விளையாடி வந்தார்கள். வேறு பெண்கள் விளையாட வராததால், இவரும் அவர்களுடன் விளையாட ஆரம்பித்தார். இப்படி ஆண்களோடு மின்னு விளையாடுவது அவரது குடும்பத்திற்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

கிரிக்கெட் ஆண்கள் விளையாடுவது; அது பெண்கள் விளையாடும் விளையாட்டு அல்ல என்பதே அவர்களின் எண்ணமாக இருந்தது. இன்றும் கூட பலரும் இப்படித்தான் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் மின்னு இதைப் பற்றியெல்லாம் கவலைப்படவிலை. அவர் தொடர்ந்து கிரிக்கெட் விளையாடிக் கொண்டே இருந்தார். முதன் முதல் இவரது திறமையை அவர் படிக்கும் பள்ளி அங்கீகரிக்க தொடங்கியது.

Minnu Mani

அன்று கிரிக்கெட் ஆடத் தொடங்கிய மின்னு, பள்ளி அளவிலான போட்டியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மாவட்ட அணி, மாநில அணி என முன்னேறத் தொடங்கினார். கேரள அணிக்காக பல ஆண்டுகள் விளையாடி வரும் மின்னு, இந்த ஆண்டு முதல் முறையாக நடக்கவுள்ள பெண்கள் ப்ரீமியர் லீக்கில் ஆடத் தேர்வானார். அடுத்த மூன்று மாதங்களிலேயே, வங்காளதேசத்திற்கு எதிராக நடைபெறவுள்ள டி20 தொடரில் இந்திய அனிக்கு தேர்வாகியுள்ளார் மின்னு.

“கேரள கிரிக்கெட் சங்கத்தின் கீழுள்ள கிரிக்கெட் அகாடமியில் தான் பல வருடங்களாக பயிற்சி செய்து வருகிறேன். என்னுடைய பேட்டிங் மற்றும் பவுலிங் சிறப்பாக இருப்பதற்கு இங்கு பெற்ற பயிற்சியே காரணம்” எனக் கூறும் மின்னு, தன்னுடைய அணி வீர்ர்களுடம் இணைவதற்காக பேருந்தில் மும்பை சென்று கொண்டிருக்கிறார்.

Minnu Mani

வயநாட்டில் உள்ள பழங்குடி சாதிகளில் ஒன்றான குரிச்சியா இனத்தைச் சேர்ந்தவர் மின்னு. சிறுமியாக இருக்கும் போதே கிரிக்கெட் பயிற்சி பெறுவதற்காக அருகிலுள்ள மைதானத்திற்கு செல்லத் தொடங்கினார். இதற்கே அவர் தினமும் ஒன்றரை மணி நேரம் பயணம் செய்ய வேண்டும். அந்த வயதில் இவருக்கு துணையாக கிரிக்கெட் விளையாட பெண்கள் யாருமே இல்லை. இதனால் இவரது வீட்டின் அருகாமையில் இருந்த சிறுவர்களுடன் விளையாடத் தொடங்கினார்.

ஆனால் அங்கு விளையாடும் போது இவருக்கு பேட்டிங், பவுலிங் என எதுவும் கிடைக்காது. மேட்ச் முழுவதும் வெறும் ஃபீல்டராகவே நிற்பார். பள்ளியில் விளையாடத் தொடங்கிய பிறகுதான் இவரது திறமை பலருக்கும் தெரிய ஆரம்பித்தது. மின்னுவின் கிரிக்கெட் திறமையை பார்த்து வியந்த அப்பள்ளியின் ஆசிரியர் எல்சம்மா, உடனடியாக அவரை வயநாடு கிரிகெட் சங்கத்தின் பயிற்சியாளர் ஷானவாஸிடம் அறிமுகப்படுத்தினார். இவர் மின்னுவின் கிரிக்கெட் ஆட்டத் திறமை குறித்து வயநாடு மாவட்ட அசோசியேஷனிடம் கூறவும், அதன் செயலாளர் நசீர் மச்சான் மற்ற விஷயங்களைக் கவனித்துக் கொண்டார்.

அதுவரை மாவட்ட அளவில் விளையாடி வந்த மின்னு, மாநில அளவிலான போட்டிகளில் பங்கெடுக்க ஆரம்பித்தார். அவரின் வளர்ச்சி அதோடு நின்றுவிடவில்லை. அங்கிருந்து தென் இந்திய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டார். இந்தப் போட்டிகள் அனைத்திலும் இவரது ஆல்-ரவுண்டர் திறமை வெளிப்பட்டது. அடுத்தது தான் அவரை உச்சானி கொம்பில் ஏற்றி வைத்தது. பெண்கள் ப்ரீமியர் லீக்கில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடத் தேர்வானார்.

Minnu Mani

பெண்கள் ப்ரீமியர் லீக்கில் மூன்று போட்டிகளில் விளையாடிய மின்னு, இரண்டு போட்டிகளில் பேட்டிங் செய்தார். மொத்தம் மூன்று ஓவர் மட்டுமே பவுலிங் செய்தார். அதிக போட்டிகளில் விளையாடதது குறித்து தனக்கு எந்த கவலையும் இல்லை எனக் கூறும் மின்னு, “பல அனுபவமிக்க வீரர்கள் அணியில் உள்ளனர். மூன்று போட்டிகளில் விளையாடியது எனக்கு சந்தோஷத்தையே கொடுத்தது. சிலர் ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு கிடைக்காமல் வெளியே அமர்ந்திருக்கிறார்கள்” என நம்பிக்கையோடு பேசுகிறார்.

Minnu Mani

பேட்டிங்கில் முன் வரிசை ஆட்டக்காரராக களமிறங்கும் மின்னு, பவுலிங்கில் ஆஃப் ஸ்பின் போடக் கூடியவர். மாவட்ட அணிக்கு தேர்வான பிறகும் கூட, பள்ளியிலும் கல்லூரியிலும் அவர் ஒருபோதும் பயிற்சி செய்வதை நிறுத்தியதில்லை. “என்னுடைய ஒன்பதாம் வகுப்பிலிருந்து கல்லூரி படிப்பு முடியும் வரை, கிரிக்கெட் அகாடமியில் தான் பயிற்சி பெற்றேன்” எனக் கூறுகிறார்.

தற்போது மின்னுவிற்கு 24 வயதாகிறது. அஞ்சல் வழியில் பிஏ (சமூகவியல்) படிப்பை முடித்துள்ளார். இளம் வயதாக இருந்தாலும் அவரது பேச்சில் முதிர்ச்சி வெளிப்படுகிறது. கேரளாவைச் சேர்ந்த பெண்கள் விளையாட்டுகளில் அதிகளவு இல்லாமல் இருப்பதற்கு காரணம், அவர்கள் எளிதில் தோல்வியைக் கண்டு துவண்டு விடுகிறார்கள் எனக் கூறுகிறார். இதுகுறித்து மின்னு கூறுகையில், “அவர்களுக்கு சில வாய்ப்புகள் கிடைக்கின்றன. அதில் சரியாக செயல்படவில்லை என்றால் மனமுடைந்து விளையாட்டை விட்டே ஒதுங்கி விடுகிறார்கள். சில சமயங்களில் நாம் பொறுமையாக காத்திருக்க வேண்டும். நமக்கு வெற்றி கிடைக்கும் வரை பயிற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும்” என்கிறார்.

உங்கள் சொந்த ஊரில் உள்ள இளம் பெண்களுக்கு கிரிக்கெட் பயிற்சி அளிப்பீர்களா என மின்னுவிடம் கேட்டபோது, “அதற்கு இது சரியான நேரம் இல்லை. பயிற்சி அளிப்பது சாதாரண விஷயமில்லை. அதற்கு நிறைய அனுபவம்  வேண்டும். அந்த அனுபவத்தைப் பெற நான் இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்” எனக் கூறுகிறார்.