2023 IPL  PT
கிரிக்கெட்

Rewind 2023: இம்பேக்ட் பிளேயர் விதி to கண்ணீருடன் நடந்த CSK பைனல்! 5 தரமான IPL சம்பவங்கள்!

2023-ம் ஆண்டு முடிய இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், ஆண்டின் மொத்த நினைவுகள் மற்றும் நிகழ்வுகளை நினைவுகூறும் விதமாக 'REWIND 2023' என்ற தலைப்பில் சிறப்புக் கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது புதிய தலைமுறை. அதன்படி 2023 IPL குறித்து விவரிக்கிறது பதிவு.

Rishan Vengai

முதல்முறையாக அறிமுகமான ”இம்பேக்ட் பிளேயர்” விதிமுறை!

2023-ம் ஆண்டு ஐபிஎல் தொடரை மேலும் விறுவிறுப்பாகவும், சுவாரசியமாகவும் மாற்றுவதற்காக "IMPACT PLAYER" விதிமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தவிதிமுறையின் படி, போட்டியில் பங்குபெறும் 11 அணி வீரர்களை தவிர, கூடுதலாக ஐந்து வீரர்களை அணியின் கேப்டன் மாற்றுவீரர்களாக அறிவிக்கலாம். அவர்களுள் ஒருவர் ஆட்டத்தின் தன்மையைப் பொறுத்து போட்டியின் எந்த இடத்திலும் பவுலராகவோ, பேட்ஸ்மேனாகவோ களமிறங்குவார். பவுலராய் களமிறங்குபவர் நான்கு ஓவர்களையும் வீசலாம். பேட்ஸ்மேனாய் களமிறங்குபவர் அவுட்டாகும்வரை/ஓவர் முடியும்வரை விளையாடலாம். இம்பேக்ட் வீரர்கள் இறங்கிய பின்பு, வெளியேறிய வீரர்கள் அதன்பின் ஆட்டத்தின் எந்தக் கட்டத்திலும் திரும்ப பங்குகொள்ளமுடியாது.

Impact Player Rule

இந்த புதிய விதிமுறையானது 2023 ஐபிஎல் தொடரை ஹிட்டடிக்க வைத்து, பல ரசிகர்களின் வரவேற்பையும் பெற்றது. டாஸ் வென்றால் போட்டியையே வென்றுவிடலாம் என்ற மனப்பான்மையை இந்த விதிமுறை மாற்றி, வெற்றியின் போக்கு எப்போது வேண்டுமானாலும் மாறலாம் என்ற விறுவிறுப்பை கூட்டியது.

3 நாள் நடந்த IPL பைனல்!

ஐபிஎல் வரலாற்றில் 2023 ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியானது மறக்கமுடியாத ஒரு ஐபிஎல் பைனலாக நடந்து முடிந்தது. 2023 ஐபிஎல் பைனலானது மே 29-ம் தேதி பிக்ஸ் செய்யப்பட்ட நிலையில், மழையின் பாதிப்பால் ரிசர்வ் டே நாளான மறுநாளுக்கு சென்றது. ஆனால் ரிசர்வ் டேவிலும் மழை குறுக்கிட்டதால் முடிவை எட்ட ரசிகர்கள் 31-ம் தேதி அதிகாலை 1.30 AM வரை காத்திருந்தனர்.

CSK Fans

CSK கேப்டன் எம்எஸ் தோனியின் கடைசி ஐபிஎல் தொடர் என கூறப்பட்ட நிலையில், அவரின் கடைசி பதிப்பை காண தோனியின் ரசிகர்கள் 3 நாட்களாக இறுதிப்போட்டியை காண கொட்டும் மழையிலும் காத்திருந்தனர். ஊருக்கு திரும்பாமல் அகமதாபாத்தின் தெருக்களிலும், ரயில்வே ஸ்டேசனிலும் படுத்து போட்டியை பார்க்க சென்றனர். ஆனால் கடைசி ஓவர் வரை வெற்றிபெறுவோமா இல்லையா என விறுவிறுப்பாக சென்ற போட்டியை சென்னை ரசிகர்கள் கண்ணீரோடு பார்த்தனர்.

dhoni lift jadeja

கடைசி 2 பந்துகளுக்கு 10 ரன்கள் தேவையென இருந்தபோது, அனைத்து ரசிகர்களின் கண்களும் தோனியின் மீதே இருந்தன. ஒருவேளை தோற்றுவிடுவோமா என்ற நிலையில் தோனி தலையை குணிந்து அமர்ந்திருக்க ஆல்ரவுண்டர் ரவிந்திர ஜடேஜா 6, 4 என இரண்டு பெரிய ஹிட்களை அடித்து சென்னை அணியை 5-வது ஐபிஎல் கோப்பைக்கு அழைத்துச்சென்றார். போட்டி முடிந்த பிறகு ஜடேஜாவை தன் தோளில் தூக்கி கொண்டாடினார் மகேந்திர சிங் தோனி.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பிய ஹர்திக் பாண்டியா!

2024 ஐபிஎல் தொடரின் வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாக ஒவ்வொரு அணியும் அவர்களுடைய அணி வீரர்களை மற்ற அணிகளோடு வர்த்தகம் செய்துகொள்ளலாம் என்ற அறிவிப்பை ஐபிஎல் நிர்வாகம் அறிவித்தது. மற்ற அணிகள் எல்லாம் வீரர்களை வாங்கிய நிலையில், மும்பை அணி ஒருபடி மேலாக சென்று குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அழைத்துவந்தது. ரூ.15 கோடிக்கு ஹர்திக் பாண்டியாவை டைட்டன்ஸ் அணியிடமிருந்து மும்பை இந்தியன்ஸ் அணி விலைக்கு வாங்கியதாக கூறப்படுகிறது. ஹர்திக் பாண்டியாவே செல்வதாக கூறியதால்தான் நாங்கள் அனுமதித்தோம் என டைட்டன்ஸ் நிர்வாகத்தின் தரப்பில் கூறப்பட்டது.

Hardik Pandya

ஹர்திக் பாண்டியாவின் வருகையால் ”சில நேரங்களில் அமைதியாக இருப்பதே சிறந்தது” என பும்ரா பதிவிட்ட ”சைலன்ஸ்” பதிவானது வைரலாக பரவியது. தொடர்ந்து ரோகித் சர்மாவின் கேப்டன் பதவி இருக்குமா இல்லையா என்ற குழப்பமும் ரசிகர்களிடையே ஏற்பட்டது.

கேப்டன்சிக்கு திரும்பிய விராட் கோலி!

2021 ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாதியில் விராட் கோலி தன்னுடைய ஆர்சிபி அணிக்கான கேப்டன் பதவியை விட்டு விலகினார். பின்னர் 2022 ஐபிஎல் தொடரில் முழுநேர கேப்டனாக பேஃப் டூ பிளசிஸ் செயல்பட்டார். விராட் கோலி அவருக்கு கீழ் ஒரு வீரராக மட்டும் செயல்பட்ட நிலையில், 2023 ஐபிஎல் தொடரில் டூ பிளெசி காயம் காரணமாக இம்பேக்ட் பிளேயராக விளையாடினார்.

RCB Kohli

அப்போது ஆர்சிபி அணிக்கு கேப்டன் தேவைப்பட்ட நிலையில், 3 போட்டிகளுக்கு விராட் கோலியே கேப்டனாக செயல்பட்டார். களத்தில் கேப்டனாக கோலியை பார்த்த ரசிகர்கள் அவரை கொண்டாடினர்.

MI அணியை UNfollow செய்த Rohit ரசிகர்கள்!

ஹர்திக் பாண்டியாவை 15 கோடி ரூபாய்க்கு விலைக்கு வாங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் ரோகித்தை கேப்டன் பதவியிலிருந்து நீக்கி பாண்டியாவை கேப்டனாக நியமித்தது. 5 கோப்பைகளை வென்று கொடுத்த கேப்டனை எப்படி இந்தவகையில் நீக்க முடியும் என ரோகித் சர்மாவின் ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர். அதிருப்தி விரக்தியாகி கோபமாக வெளிப்பட்டது.

rohit sharma, hardik pandya

பல ரோகித் சர்மாவின் ரசிகர்கள் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஜெர்சி மற்றும் தொப்பியை தீயிட்டு எரித்தனர். தொடர்ந்து X தளத்தில் #ShameonMI, #SackedRohit, #Bumrah, #Pandya, #RIPMumbaiIndians முதலிய ஹாஸ்டாக்குகளை ஒருவாரமாக டிரெண்டிங்கில் வைத்திருந்தனர். அதற்கும் ஒருபடி மேலாக சென்று கிட்டத்தட்ட 5 லட்சம் ரோகித் ரசிகர்கள் மும்பை இந்தியன்ஸ் அணியை சோஷியல் மீடியாவில் பின்தொடர்வதை UNfollow செய்தனர்.