2024 ஐபிஎல் ஏலத்தில் ஆர்சிபி அணி விலைக்கு வாங்கிய முக்கிய வீரர்களில் ஒருவர் ஆல்ரவுண்டர் டாம் கரன். பிக்பாஸ் லீக் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் அவரை 1.5 கோடிக்கு ஐபிஎல் ஏலத்தில் எடுத்துள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. என்ன தான் ஆர்சிபி அணியின் வீரர்கள் தேர்வு மீது ரசிகர்களுக்கு விமர்சனங்கள் இருந்தாலும், வீரர்களின் தற்போதைய ஃபார்ம் மற்றும் சொந்த மண்ணில் தங்களுக்கு உதவுக்கூடிய வீரர்களை எடுத்ததில் ஆர்சிபி நிர்வாகம் மகிழ்ச்சியாகவே இருக்கிறது.
இந்நிலையில் தான் ஆர்சிபி அணியின் தற்போதைய வீரரும், பிக்பாஸ் லீக் தொடரில் சிட்னி சிக்சர்ஸ் அணிகாக விளையாடிவரும் ஆல்ரவுண்டருமான டாம் கரனுக்கு 4 பிபிஎல் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. அம்பயரை மிரட்டும் தோனியில் நடந்துகொண்டதற்காக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் 11ஆம் தேதி லான்செஸ்டனில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்கும், சிட்னி சிக்சர்ஸ் அணிக்கும் இடையிலான போட்டி தொடங்குவதற்கு முன்னதாக இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. போட்டிக்கு முன்பாக நடுவருடன் மோதலில் ஈடுபட்ட டாம் கரனுக்கு 4 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
டாம்கரன் விவகாரம் குறித்து கிரிக்கெட் ஆஸ்திரேலியா வெளியிட்டிருக்கும் தகவலின் படி, “போட்டிக்கு முன்னதாக ஒவ்வொரு பந்துவீச்சாளரும் செய்யும் ரன்னப் பயிற்சியை டாம் கரன் செய்துள்ளார். அப்போது களத்தை ஆய்வுசெய்வதற்காக போட்டியின் நான்காவது நடுவர் ஆடுகளத்தை மேற்பார்வையிட்டுள்ளார். அப்போது ரன்னப் செய்துகொண்டிருந்த டாம் கரன், ஆடுகளத்தின் ஒரு பகுதியில் அவருடைய ரன்னப்பை செய்துள்ளார். அவர் தொடர்ந்து செய்வதை பார்த்த களநடுவர் அவரிடம் ஆடுகளத்தில் ஓடாதீர்கள் என தெரிவித்துள்ளார். ஆனால் அதை ஏற்காத டாம் கரன் மீண்டும் ஆடுகளத்தில் ரன்னப் செய்துள்ளார். இதனால் அவருடைய ரன்னப்பை தடுக்க அம்பயர் அவரது வழியில் நின்று மறித்துள்ளார். அப்போதும் பயிற்சிய கைவிடாத டாம் கரன் அம்பயரை மோதுவது போல் வேகமாக ஓடிவந்துள்ளார். மோதலை தவிர்க்க அம்பயர் களத்தில் இருந்து விலகிவிட்டார்” என்று கூறப்பட்டுள்ளது.
ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்திருக்கும் சிட்னி சிக்சர்ஸ் அணி டாம்கரனுக்கு துணை நிற்பதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து அவர்கள் அளித்திருக்கும் செய்தியில், “வேண்டுமென்றே ஒரு போட்டி அதிகாரியை டாம் மிரட்டவில்லை என்று டாம் கரன் மற்றும் கிளப் அணி என இருதரப்பும் கூறுகின்றனர். இந்த விவகாரத்தில் சட்ட ஆலோசனையின் பேரில், 4 போட்டிகளுக்கான தடை உத்தரவிற்கு எதிராக மேல்முறையீடு செய்வதற்கான எங்கள் உரிமையைப் பயன்படுத்துவோம். இதுபோன்ற நேரத்தில் நாங்கள் டாம் கரனை ஆதரிப்போம். மேலும் அவர் களத்திற்கு விரைவில் திரும்புவதை உறுதிபடுத்துவோம்” என்று தெரிவித்துள்ளது.
4 பிக்பாஸ் லீக் போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்பட்டிருப்பது, “நடத்தை விதிகளின் பிரிவு 2.17-ன் கீழ், போட்டியின் போது நடுவர் அல்லது மருத்துவ பணியாளர்களை வார்த்தைகளால் அல்லது நடத்தைகளால் மிரட்டுவது அல்லது மிரட்ட முயற்சித்ததற்காக குற்றம் சாட்டப்பட்டால்” இத்தகைய தண்டனை வழங்கப்படுகிறது.