தோனி web
கிரிக்கெட்

“தோனியின் வாழ்க்கையை ஒருநாள் வாழ விரும்புகிறேன்..” - யாரும் எதிர்ப்பார்க்காத பதிலை அளித்த NZ வீரர்!

Rishan Vengai

2020-ம் ஆண்டு அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து எம்.எஸ்.தோனி ஓய்வை அறிவித்திருந்தாலும், இன்னமும் தோனி மீதான ஈர்ப்பு ரசிகர்களிடையே குறையாமல் இருந்துவருகிறது. அதை 2023 மற்றும் 2024 ஐபிஎல் தொடர்களில் தோனி செல்லும் இடமெல்லாம் பின்தொடர்ந்த ரசிகர்களையும், சமூகவலைதளத்தில் டிரெண்ட் ஆகும் அவருடைய வீடியோக்களையும் பார்த்தே தெரிந்துகொள்ளலாம்.

தோனி

2007 டி20 உலகக்கோப்பை, 2011 ஒருநாள் உலகக்கோப்பை மற்றும் 2013 சாம்பியன்ஸ் டிராபி என மூன்று ஐசிசி கோப்பைகளை வென்ற தோனி, இன்னும் இந்திய ரசிகர்களின் மனதை ஆளும் மாயாஜாலம் புரிபவராகவே இருந்துவருகிறார். அவருடைய காம்னஸ் மற்றும் திடமான சிந்தனையையும், இந்தியாவில் அவருக்கு கிடைக்கும் வரவேற்பையும் பார்த்த உலக கிரிக்கெட் வீரர்கள் வாயடைத்து போனார்கள் என்றால் மிகையல்ல.

தோனி

அப்படி இந்தியாவில் தோனிக்கு கிடைக்கும் அதிகப்படியான பிரியத்தை கண்ட நியூசிலாந்து வீரர் டிம் சவுத்தீ, “ஒருநாள் தோனியின் வாழ்க்கையை வாழ்ந்து பார்க்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

தோனியின் வாழ்க்கையை வாழவேண்டும்!

2024 CEAT கிரிக்கெட் விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்ட ​​நியூசிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுத்தியிடம், “வேறொரு கிரிக்கெட் வீரரின் வாழ்க்கையை ஒருநாள் உங்களால் வாழமுடியும் என்றால், அது யாருடைய வாழ்க்கையாக இருக்கும்? எதனால் வாழ நினைக்கிறீர்கள்?” என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

அதற்கு பதிலளித்து பேசிய டிம் சவுத்தீ, “எம்.எஸ். தோனி" என்று சற்றும் யோசிக்காமல் பதிலளித்துள்ளார். “உலகில் மிகவும் விரும்பப்படும் கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான எம்.எஸ். தோனியின் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை அறிய ஆர்வமாக உள்ளது” என அவர் மேலும் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

தோனி

தோனி மீது ரசிகர்கள் வைத்திருக்கும் அன்பையும், அவரை ரசிகர்கள் பின்தொடர்வதையும் கண்ட பிசிசிஐ, 2025 ஐபிஎல் தொடரில் எம் எஸ் தோனியை அன்கேப்ட் வீரராக கொண்டுவரும் எண்ணத்தில் இருக்கிறது. ஒருவேளை அப்படி ஒரு விதிமுறை கொண்டுவரப்பட்டால் தோனி 2025 ஐபிஎல் தொடரிலும் விளையாடுவார் என நம்பப்படுகிறது. ஆனால் 2024 ஐபிஎல் தொடரில் தன்னுடைய கேப்டன் பதவியை ருதுராஜ் கெய்க்வாட்டிடம் ஒப்படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.