tim southee cricinfo
கிரிக்கெட்

122 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் யாரும் செய்யாத சாதனை.. வரலாறு படைத்த டிம் சவுத்தீ!

இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 9-வது வீரராக களமிறங்கி 65 ரன்கள் அடித்த டிம் சவுத்தீ வரலாற்று சாதனையை தன் பெயரில் எழுதினார்.

Rishan Vengai

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் நியூசிலாந்து அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

முதல் டெஸ்ட் போட்டியானது பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்றுவரும் நிலையில், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 46 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல்அவுட்டானது. அதற்குபிறகு விளையாடிய நியூசிலாந்து அணியில் ரச்சின் ரவீந்திராவின் அதிரடியான சதத்தால் 402 ரன்களை குவித்தது நியூசிலாந்து அணி.

tim southee

ஆனால் ரச்சின் ரவீந்திரா மட்டுமே 402 ரன்களை குவிக்க காரணமா என்றால் இல்லை, மறுமுனையில் 9வது வீரராக களத்திற்கு வந்த நியூசிலாந்தின் டிம் சவுத்தீ சிக்சர் பவுண்டரிகளாக பறக்கவிட்டு இந்திய அணியின் பவுலர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கினார்.

73 பந்துகளில் 5 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் என வானவேடிக்கை காட்டிய வேகப்பந்துவீச்சாளர் டிம் சவுத்தீ, 65 ரன்கள் குவித்து நியூசிலாந்து அணியை 356 ரன்கள் முன்னிலைக்கு அழைத்துச்சென்றார்.

122 வருடத்தில் யாரும் செய்யாத சாதனை..

இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 65 ரன்கள் குவித்ததன் மூலம் டிம் சவுத்தீ வரலாற்றில் தன்னுடைய பெயரை முத்திரை குத்தினார்.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் எதிரணியின் முந்தைய இன்னிங்ஸ் டோட்டலை விட அதிக ரன்கள் அடித்த 9-ம் நிலை அல்லது அதற்கும் குறைவான பேட்ஸ்மேன் என்ற இமாலய சாதனையை படைத்தார்.

அதாவது இந்தியா முதல் இன்னிங்ஸில் 46 ரன்கள் மட்டுமே அடித்த நிலையில், நியூசிலாந்து அணியின் 9வது வீரராக வந்து 65 ரன்கள் குவித்ததின் மூலம் இந்த வரலாற்று சாதனையை டிம் சவுத்தீ படைத்துள்ளார்.

இதற்கு முன்னர் 1902-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்காக விளையாடிய ரெஜி டஃப் இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்துக்கு எதிராக சதமடித்தபோது இந்த சாதனையை படைத்தார். அப்போது இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 61 ரன்களுக்கு ஆட்டமிழந்திருந்தது.