Cricket World Cup 2023 Cricket World Cup
கிரிக்கெட்

Cricket World Cup| மைதானத்தில் தீ... 1996 தடைபட்ட இலங்கையின் 3 போட்டிகள்!

Viyan

2023 ஒருநாள் உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 5ம் தேதி இந்தியாவில் தொடங்குகிறது. 13வது உலகக் கோப்பைத் தொடரான இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இதுவரை நடந்த உலகக் கோப்பைகளின் சிறந்த தருணங்களை சற்று அசைபோடுவோம்.

1996 உலகக் கோப்பை முதல் முறையாக மூன்று அணிகளால் (இந்தியா, பாகிஸ்தான், இலங்கை) நடத்தப்பட்டது. இந்தத் தொடரில் பங்கேற்ற 12 அணிகள் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. லீக் சுற்றின் முடிவில் இரு பிரிவிலும் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் காலிறுதிக்குத் தகுதி பெறும். அந்தக் காலிறுதியில் வெற்றி பெற்ற 4 அணிகளும் ஒரே குரூப்பில் இருந்தவை என்றால் நம்ப முடிகிறதா! அப்படி நம்ப முடியாத ஒரு விஷயம் அந்தத் தொடரில் நடந்தது.

ஏ பிரிவில் இடம்பெற்றிருந்த அணிகள்: இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, கென்யா
பி பிரிவில் இடம்பெற்றிருந்த அணிகள்: பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, இங்கிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து

Sri lanka

ஏ பிரிவில் இடம்பெற்றிருந்த இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, கென்யா ஆகிய அணிகளை வீழ்த்தி காலிறுதிக்குத் தகுதி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் அணியோ இரு கத்துக்குட்டிகளையும் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. ஆஸ்திரேலியாவும் இந்தியாவைப் போல் 3 வெற்றிகளுடன் காலிறுதிக்குள் நுழைந்தது. இலங்கை அணியோ 5 போட்டிகளையும் வென்று புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்தது. அதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. இந்தியாவுக்கு எதிரான போட்டியைத் தவிர, இலங்கையின் மற்ற போட்டிகள் கொழும்பு மற்றும் கண்டி ஆகிய இடங்களில் நடப்பதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. அந்த சமயத்தில் இலங்கையில் பெரும் பாதுகாப்பு அச்சம் ஏற்பட்டிருந்தது. அதன் காரணமாக ஆஸ்திரேலியாவும், வெஸ்ட் இண்டீஸும் அங்கு சென்று விளையாட மறுத்தன. அதனால் வாக் ஓவர் முறையில் அந்தப் போட்டிகளில் இலங்கை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

பி பிரிவிலோ தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய 4 அணிகள் முறையே முதல் நான்கு இடங்களைப் பிடித்து காலிறுதிக்குத் தகுதி பெற்றன. இலங்கையைப் போல் அல்லாமல் தென்னாப்பிரிக்க அணியோ 5 போட்டிகளையும் விளையாடி வென்றிருந்தது. அதுமட்டுமல்லாமல் அதீத பலம் கொண்டிருந்த நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் அணி தென்னாப்பிரிக்காவிடம் மட்டுமே தோற்றிருந்தது. இங்கிலாந்து, நியூசிலாந்து போன்ற அணிகளையெல்லாம் அசாதாரணமாக வென்றிருந்தது பாகிஸ்தான். அதனால் அந்த இரு அணிகளுக்கும் அரையிறுதி வாய்ப்பு அதிகம் இருப்பதாகவே கருதப்பட்டது. ஆனால் நடந்ததோ வேறு.

பி பிரிவில் இரண்டாம் இடம் பெற்றிருந்த பாகிஸ்தான், ஏ பிரிவில் மூன்றாவது இடம் பெற்றிருந்த இந்தியாவை காலிறுதியில் சந்திக்க நேர்ந்தது. பரம வைரிக்கு எதிரான போட்டியில் 39 ரன்களில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியது நடப்பு சாம்பியன். எதிர்பார்த்ததைப் போல் இலங்கை இங்கிலாந்தையும், ஆஸ்திரேலியா நியூசிலாந்தையும் வென்று அரையிறுதிக்கு முன்னேறியிருந்தன. 5 லீக் போட்டிகளையும் வென்று அசத்தியிருந்த தென்னாப்பிரிக்க அணி, இரண்டு போட்டிகளை மட்டுமே வென்றிருந்த வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் யாரும் எதிர்பாராத வகையில் தோற்றது. பிரயன் லாராவின் அசத்தல் சதத்தாலும், ரோஜர் ஹார்பரின் அற்புத பௌலிங்காலும் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி அசத்தியது வெஸ்ட் இண்டீஸ். அதன்மூலம் ஏ பிரிவில் இடம்பெற்றிருந்த நான்கு அணிகளே அரையிறுதிக்குத் தகுதிபெற்றன. இது யாருமே எதிர்பாராத ஒன்று!

குரூப் சுற்றில் இலங்கையின் இரண்டு போட்டிகள் பாதிக்கப்பட்டதுபோல், இன்னொரு போட்டியும் பாதிக்கப்பட்டது. அது இந்தியாவுக்கு எதிரான அரையிறுதி. கொல்கத்தாவில் நடந்த இந்தப் போட்டியில் முதலில் ஆடிய இலங்கை 251 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் கடுமையாக சொதப்பினார்கள். சச்சின் டெண்டுல்கர் மட்டும் தனி ஆளாகப் போராடிப் பார்த்தார். ஆனால் அவரும் அவுட்டாகிப் போக இந்திய அணியின் நம்பிக்கை மொத்தமாக உடைந்தது. 34.1 ஓவர்களில் இந்தியா 120 ரன்களுக்கு 8 விக்கெட்டுகள் என தடுமாறிக்கொண்டிருக்க, ஆத்திரமடைந்த இந்திய ரசிகர்கள் மைதானத்தில் தீ வைத்தனர். அதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டு இலங்கை அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இலங்கையில் தான் பிரச்சனை என்றால், இலங்கை ஆடிய போட்டிகளில் பலவும் பாதுகாப்பு பிரச்சனையால் தடைபட்டன.