harbajan and kohli pt
கிரிக்கெட்

ஃபைனலுக்கு இந்த அணிகள்தான் போகும்.. ஒரே போடாக போட்ட ஹர்பஜன்.. குஷியான RCB ரசிகர்கள்!

யுவபுருஷ்

இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் ஐபிஎல் போட்டிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. நடப்பு தொடரில் பல திருப்புமுனைகளோடு அணிகளுக்கான லீக் போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் நாளை முதல் ப்ளே ஆஃப் போட்டிகள் நடைபெறுகின்றன. புள்ளிப்பட்டியலில் 20 புள்ளிகளுடன் கொல்கத்தா அணி முதல் இடத்திலும், ஹைதராபாத், ராஜஸ்தான் அணிகள் தலா 17 புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றனர்.

இதில் நான்காவதாக இடம்பெறப்போவது யார் என்ற வாழ்வா சாவா போட்டியில் சிஎஸ்கே துவம்சம் செய்து முன்னேறியது பெங்களூரு அணி. முதன்முறையாக சிஎஸ்கேவின் தோல்வியை அந்த அணியின் ரசிகர்கள் கூட ஏற்றனர் என்றால் அது மிகையல்ல. ஆம், இத்தனை வருட போராட்டத்தில் பெங்களூரு அணி ஒரு கோப்பையைக்கூட அடிக்கவில்லையே என்ற ஆதங்கம் சிஎஸ்கேவை கொண்டாடுபவர்களுக்கே வந்துவிட்டது என்பதை மறுப்பதற்கில்லை.

கடைசி போட்டியாக முடிந்தாலும், “சிங்கம் களத்துல இறங்கி தன்னோட கர்ஜனைய Groundக்கு வெளிய வர காட்டிடுச்சு.. அது போதும் எங்களுக்கு” என்று சிலாகித்து வருகின்றனர் சென்னை அணியின் ரசிகர்கள்.

சென்னை அணியை தங்களது சொந்த மண்ணில் வைத்தே வீழ்த்திய பெங்களூரு அணி, நான்காவது அணியாக ப்ளே ஆஃபில் நுழைந்துள்ளது. இதே ஃபார்மில் தொடர்ந்து விளையாடி, இந்த முறையாவது பெங்களூரு அணி கோப்பையை கைப்பற்றிவிடாதா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வரும் சூழலில், அவர்களுக்கு ஏற்றபடி குட் நியூஸ் சொல்லியுள்ளார் ஹர்பஜன் சிங்.

பெங்களூரு அணியின் ஃபார்ம் காரணமாக, அந்த அணியும், கொல்கத்தா அணியும் ஃபைனலுக்குள் நுழைவார்கள் என்று கணித்துள்ளார் ஹர்பஜன். யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், ”பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகள்தான் இறுதிப்போட்டியில் விளையாடும் என்று நினைக்கிறேன். அப்படி நடந்தால் கோலியும், கம்பீரும் மீண்டும் நேருக்கு நேர் மோதுவார்கள். நடப்பு சீசனில் ஒவ்வொரு ரன்னுக்கும் கடுமையாக உழைத்துள்ள பெங்களூரு அணி, கோப்பையைக்கூட வெல்லலாம். இதே ஆற்றலுடன் பெங்களூரு வீரர்கள் விளையாடினால், அவர்களை வீழ்த்துவது எதிர் அணிக்கு மிகவும் சவாலான விஷயம்” என்று தெரிவித்துள்ளார் ஹர்பஜன்.

இதுவரை 9 முறை ப்ளே ஆஃபுக்குள் நுழைந்துள்ள பெங்களூரு அணி, இந்த முறையாவது வெற்றிக்கனியை எட்டுமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.