Ind-Pak Twitter
கிரிக்கெட்

இந்தியா-பாகிஸ்தான் போட்டி மழையால் நிறுத்தம்! ரிசர்வ் டே மூலம் நாளை மீண்டும் தொடங்கும்!

இந்தியா பாகிஸ்தான் மோதிய போட்டி மழையால் நிறுத்தப்பட்ட நிலையில் நாளை மீண்டும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Rishan Vengai

2023 ஆசியக்கோப்பை தொடரானது ஆகஸ்ட் 30ஆம் தேதி முதல் நடந்துவருகிறது. தற்போது சூப்பர் 4 சுற்று போட்டிகள் நடந்துவரும் நிலையில், இன்றைய பெரிய போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரண்டு அணிகளும் எதிர்வரும் 2023 ஒருநாள் உலகக்கோப்பையை வெல்லக்கூடிய அணிகளாக பார்க்கப்படும் நிலையில், இரண்டு அணிகளின் மோதலானது அதிகப்படியான எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது.

Ind-Pak

கடந்த லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி தங்களுடைய அபாரமான ஃபாஸ்ட் பவுலிங் அட்டாக்கால் இந்திய டாப் ஆர்டர் வீரர்களை திக்குமுக்காட வைத்தது. இந்நிலையில் இன்று நடைபெறும் இரண்டாவது மோதலில் இந்திய அணி பாகிஸ்தானை எப்படி எதிர்கொண்டு விளையாடபோகிறது என்ற எதிர்ப்பார்ப்பில் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது.

மழையால் ஆட்டம் பாதிப்பு!

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் சுப்மன் கில் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கடந்த போட்டியில் சொதப்பியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானின் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு அழுத்தத்தை கொடுக்கும் வகையில் ஓவருக்கு ஒரு பவுண்டரியை விரட்டிக்கொண்டே இருந்தனர். சுப்மன் கில் ஒருபுறம் கிளாசிக் பவுண்டரிகளை விரட்ட, கேப்டன் ரோகித் சர்மாவோ சிக்சர்களாக பறக்கவிட்டு வானவேடிக்கை காட்டிக்கொண்டிருந்தார். ரோகித் சர்மா 6 பவுண்டரிகள், 4 சிக்சர்களுடன் 58 ரன்களும், கில் 10 பவுண்டரிகளுடன் 58 ரன்களும் சேர்ந்திருந்த போது தங்களது விக்கெட்டுகளை இழந்தனர்.

Gill - Rohit

பின்னர் கைக்கோர்த்த விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 24.1 ஓவரில் இந்தியா 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்திருந்த போது மழையால் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மழை வெளுத்து வாங்கியதால், போட்டி தொடங்குமா என்ற எதிர்ப்பார்ப்போடு ரசிகர்கள் காத்திருந்தனர்.

ரிசர்வ் டே மூலம் நாளை நடைபெறும்!

மழை நிற்குமா என போட்டி நடுவர்கள் எதிர்ப்பார்த்திருந்த போது மழை நின்றது. போட்டி குறைந்த ஓவர்கள் கொண்டதாக நடத்தப்படுவதற்கு அனைத்து ஏற்பாடுகள் நடந்தன. ஆனால் நின்ற மழை மீண்டும் வந்ததால் ஆடுகளம் திரும்பவும் கவர் செய்யப்பட்டது. பின்னர் அதிகப்படியான மழையின் காரணமாக போன்று இன்று முழுமையாக நிறுத்தப்பட்டு நாளை நடக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

Ind vs Pak

இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதிய இந்த போட்டிக்கு ஆட்டம் தொடங்கவதற்கு முன்பாகவே ரிசர்வ் டே அறிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் இன்று மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று 24.1 ஓவரில் நிறுத்தப்பட்ட ஆட்டம் நாளை அதே ஓவரில் இருந்து நடத்தப்படும். 50 ஓவர் கொண்ட போட்டியாக நாளை முழுமையாக நடைபெறும். எப்போதும் போல போட்டியானது நாளை மதியம் 3 மணிக்கு தொடங்கப்படும்.