2015 மற்றும் 2019 என இரண்டு முறை ஒருநாள் உலகக்கோப்பை தொடர்களில் கால்பதித்திருக்கும் இந்திய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி, 11 போட்டிகளில் விளையாடி மொத்தமாக 31 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். 2015-ல் அற்புதமான பவுலிங் அட்டாக்கை இந்திய அணி வைத்திருந்தது. அரையிறுதிவரை இந்திய அணி எதிர்த்து விளையாடிய அத்தனை அணிகளையும் ஆல் அவுட் செய்திருந்தது. அதில் முகமது ஷமியின் பங்கு மிகவும் அதிகமானது. 7 போட்டிகளில் 4.18 எகானமியுடன் 17 விக்கெட்டுகளை சாய்த்திருந்த ஷமி, பாகிஸ்தானுக்கு எதிராக 4/35 என்ற அபாரமான ஸ்பெல்லை வீசியிருந்தார். 2019ஆம் ஆண்டிலும் ஷமி ஒரு சிறந்த பந்துவீச்சை பெற்றிருந்தார். விளையாடிய 4 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்த அவர், ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஒரு ஹாட்ரிக் ஸ்பெல்லையும் கண்டெடுத்தார்.
தற்போது ODI உலகக் கோப்பையில் 11 போட்டிகளில் 31 விக்கெட்டுகளை எடுத்திருக்கும் அவர், முன்னாள் இந்திய ஜாம்பவான் பந்துவீச்சாளர்களான ஜாகீர் கான் மற்றும் ஜவகல் ஸ்ரீநாத் இருவரின் சாதனைகளை முறியடிக்க உள்ளார். உலகக்கோப்பையில் 44 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கும் இருவரும்(ஜவஹல், ஜாகீர் கான்), அதிக உலகக்கோப்பை விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற வரிசையில் முதலிடத்தில் இருக்கின்றனர். இந்நிலையில் எதிர்வரும் 2023 உலகக்கோப்பையிலும் ஷமி தன்னுடைய திறனை வெளிப்படுத்தும் பட்சத்தில், உலகக்கோப்பையில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை முறியடிப்பார்.
ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் யுனிவர்சல் பாஸ் என அழைக்கப்படும் க்றிஸ் கெய்ல், 5 உலகக்கோப்பை (2003-2019) தொடர்களில் 34 போட்டிகளில் விளையாடி 49 சிக்சர்களை பறக்கவிட்டு முதலிடத்தில் இருக்கிறார். அடுத்த இடங்களில் 2007-2015 முதல் 22 போட்டிகளில் விளையாடி 37 சிக்சர்களுடன் ஏபிடி வில்லியர்ஸ் இரண்டாவது இடத்திலும், 31 சிக்சர்களுடன் ரிக்கி பாண்டிங் 3வது இடத்திலும் இருக்கின்றனர்.
இந்திய அணியை பொறுத்தவரையில் 1992 - 2011 முதல் விளையாடி 27 சிக்சர்களை அடித்திருக்கும் சச்சின் டெண்டுல்கர், உலகக்கோப்பையில் அதிக சிக்சர்கள் அடித்த இந்திய வீரர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார். அடுத்த இடத்தில் 25 சிக்சர்களுடன் சவுரவ் கங்குலி நீடிக்கிறார். இந்நிலையில் 2015-2019 என இரண்டு உலகக்கோப்பையில் விளையாடியிருக்கும் ரோகித் சர்மா 17 போட்டிகளில் விளையாடி 23 சிக்சர்களை விளாசியுள்ளார். தற்போது சிறப்பான ஃபார்மில் இருக்கும் ரோகித் சர்மா, நடக்கவிருக்கும் 2023 உலகக்கோப்பையில் சச்சின், கங்குலி இருவரையும் பின்னுக்கு தள்ளி அதிக சிக்சர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
2015 உலகக் கோப்பையில் வீசிய பந்தில் எல்லாம் விக்கெட்டுகளை அள்ளிய வேகப்பந்துவீச்சாளர் மிட்சல் ஸ்டார்க், ஆஸ்திரேலிய அணி கோப்பை வெல்வதற்கு முன்னின்று வழிநடத்தினார். 3.50 எகானமியுடன் 8 போட்டிகளில் 22 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர், அந்த உலகக்கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய பந்துவீச்சாளராக மாறினார். மேலும் தொடர் நாயகன் விருதையும் தட்டிச்சென்றார். அதேபோல 2019 உலகக் கோப்பையில் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான இங்கிலாந்தின் மேற்பரப்பை பயன்படுத்திக்கொண்ட அவர், 10 போட்டிகளில் 27 விக்கெட்டுகள் வீழ்த்தி அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய பவுலராகவும் மாறினார்.
ஒருநாள் உலகக்கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலராக ஆஸ்திரேலியாவின் ஜாம்பவான் க்ளென் மெக்ராத் 39 போட்டிகளில் 71 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். அடுத்த இடங்களில் 40 போட்டிகளில் 68 விக்கெட்டுகளுடன் முரளிதரன், 29 போட்டிகளில் 56 விக்கெட்டுகளுடன் லசித் மலிங்கா, 38 போட்டிகளில் 55 விக்கெட்டுகளுடன் வாசிம் அக்ரம் முதலியோர் இருக்கின்றனர். இந்த வரிசையில் 18 போட்டிகளில் விளையாடி 49 விக்கெட்டுகளுடன் 5வது இடத்தில் மிட்சல் ஸ்டார்க் நீடிக்கிறார். ஒருவேளை நடக்கவிருக்கும் 2023 உலகக்கோப்பையில் ஸ்டார்க் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில், அவரால் ஒரு புதிய உலகசாதனையையே படைக்க முடியும். எப்படியிருப்பினும் அவர் நிச்சயம் வாசிம் அக்ரம் மற்றும் லசித் மலிங்கா சாதனையை முறியடிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
2019 உலகக்கோப்பை தொடரில் தன்னுடைய வாழ்நாள் ஃபார்மில் மிரட்டிய ரோகித் சர்மா, 9 போட்டிகளில் விளையாடி 5 சதங்கள் மற்றும் ஒரு அரை சதத்துடன் 648 ரன்கள் குவித்தார். மேலும் ஒரே உலகக்கோப்பை தொடரில் 5 சதங்கள் அடித்த ஒரே வீரர் என்ற உலக சாதனையையும் ரோகித் சர்மா படைத்திருந்தார். அந்த வரிசையில் 4 சதங்களுடன் இலங்கையின் குமார் சங்ககரா இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.
ODI உலகக் கோப்பைகளில் இந்தியாவுக்காக அதிக ரன்கள் எடுத்தவர்கள் வரிசையில், 17 போட்டிகளில் 978 ரன்களுடன் நான்காவது இடத்தில் இருக்கும் ரோகித் சர்மாவுக்கு சவுரவ் கங்குலியை பின்னுக்கு தள்ள 29 ரன்கள் மட்டுமே மீதம் இருக்கிறது. மேலும் உலகக்கோப்பை வரலாற்றில் அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் 6 சதங்களுடன் சச்சின் டெண்டுல்கருடன் சமநிலையில் இருக்கும் ரோகித் சர்மா, சச்சினை பின்னுக்கு தள்ளி உலகக்கோப்பையில் அதிக சதங்கள் அடித்த ஒரே ஒரு வீரர் என்ற புதிய சாதனையை படைப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஒயிட் பால் கிரிக்கெட்டில் சிறந்த ஆல் ரவுண்டராக இருக்கும் மேக்ஸ்வெல் தன்னுடைய ஹிட்டிங் திறனுக்காக பெயர் போனவர். பெரிய சிக்சர்களை கூட அசால்டாக அடிக்கும் திறமை கொண்ட அவர், உலகக்கோப்பையில் ரிக்கி பாண்டிங்கின் பிரத்யேக சாதனையை முறியடித்து முதல் ஆஸ்திரேலிய வீரராக மாற உள்ளார்.
ஒடிஐ உலகக்கோப்பையில் அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் வரிசையில் முதல் 3 இடங்களில் 31 சிக்சர்களுடன் ரிக்கி பாண்டிங்கும், 24 சிக்சர்களுடன் ஆரோன் பிஞ்ச்சும், 23 சிக்சர்களுடன் மேத்யூ ஹெய்டனும் இருக்கின்றனர். 2015-2019 என இரண்டு உலகக்கோப்பை தொடர்களில் விளையாடியிருக்கும் க்ளென் மேக்ஸ்வெல் 16 போட்டிகளில் விளையாடி 21 சிக்சர்களை பறக்கவிட்டுள்ளார். எதிர்வரும் 2023 உலகக்கோப்பையிலும் மேக்ஸ்வெல் தன்னுடைய ஹிட்டிங் திறமையை வெளிப்படுத்தும் பட்சத்தில் ரிக்கி பாண்டிங்கின் சாதனையை முறியடித்து, அதிக உலகக்கோப்பை சிக்சர்கள் அடித்த ஒரே ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை படைப்பார்.