suryakumar yadav pt web
கிரிக்கெட்

"ரோஹித் குணாதீசியங்களை நானும் பின்பற்றுகிறேன்" - இந்திய டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ்

"ரோஹித் தன் வீரர்களை எப்படி அணுகுவார் என்பது எனக்கு நன்கு தெரியும். அவர்களிடம் அவர் என்ன எதிர்பார்க்கிறார் என்றும் தெரியும். அவருடைய வெற்றிகளைப் பார்க்கும்போது நானும் அதே பாதையைப் பின்பற்றத் தொடங்கிவிட்டேன்" சூர்யகுமார்

Viyan

வெற்றியும் தோல்வியும் சகஜம்தான்

இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் ஷர்மா எப்படி செயல்பட்டாரோ, அதையெல்லாம் கவனித்து தான் பின்பற்றுவதாகவும், அதோடு தன்னுடைய ஸ்பெஷல் குணாதீசியங்களையும் சேர்ந்து அணியை வழிநடத்துவதாகவும் கூறியிருக்கிறார் இந்திய அணியின் டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ்.

சூர்யா தலைமையிலான இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 தொடரில் விளையாடுகிறது. இந்தியாவின் முழுநேர டி20 கேப்டனாகப் பதவியேற்ற பின் சூர்யாவுக்கு இதுவொரு சவாலான தொடராக இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்தத் தொடருக்கு முன்பு பத்திரிகையாளர்களிடம் பேசிய சூர்யா, தன் கேப்டன்சி அணுகுமுறை பற்றிப் பேசினார்.

"விளையாட்டைப் பொறுத்தவரை வெற்றியும் தோல்வியும் சகஜம் தான். எல்லோருமே கடுமையாக உழைக்கிறார்கள். எல்லோருமே வெற்றி பெறவேண்டும் என்று தான் நினைக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை வாழ்க்கையில் பேலன்ஸ் தான் முக்கியம். ரோஹித் சிறப்பாக விளையாடுகிறாரோ இல்லையோ அவருடைய பண்புகள் எப்போதும் மாறியதில்லை. அந்த குணாதீசியம் எந்தவொரு விளையாட்டு வீரருக்கு அவசியம் என்று நான் சொல்வேன்.

ரோஹித் பாதையை பின்பற்ற தொடங்கிவிட்டேன்

ரோஹித் தன் வீரர்களை எப்படி அணுகுவார் என்பது எனக்கு நன்கு தெரியும். அவர்களிடம் அவர் என்ன எதிர்பார்க்கிறார் என்றும் தெரியும். அவருடைய வெற்றிகளைப் பார்க்கும்போது நானும் அதே பாதையைப் பின்பற்றத் தொடங்கிவிட்டேன். நான் களத்தில் இருக்கும்போது, அவருடைய உடல்மொழி எப்படி மாறும் என்பதை கவனித்திருக்கிறேன். நெருக்கடியான சூழ்நிலையில் அவர் எவ்வளவு நிதானமாக இருப்பார் என்று பார்த்திருக்கிறேன். களத்திலும், வெளியேவும் அவர் எப்படி வீரர்களை நடத்துகிறார், பௌலர்களிடம் எப்படிப் பேசுகிறார் என்ற அனைத்து விஷயங்களையும் கவனித்திருக்கிறேன்.

முக்கியமாக ஒரு தலைவர் உங்களை நல்ல சூழலில் வைக்க உங்களுடன் எவ்வளவு நேரம் செலவளிக்கிறார் என்பது முக்கியம். நான் அதைப் பின்பற்ற நினைக்கிறேன். நான் களத்தில் இல்லாதபோது வீரர்களுடன் நேரத்தை செலவிடுவேன். அவர்களோடு சாப்பிடுவது, பயணம் போவது என்று நேரத்தைக் கழிப்பேன்.

இதெல்லாம் களத்தில் பிரதிபலிக்கும் சின்ன சின்ன விஷயங்கள் தான். ஆனால் நீங்கள் உங்கள் டீம் மேட்களின் மரியாதையை சம்பாதிக்கவேண்டும் என்றால், களத்தில் நல்ல முடிவுகளைப் பெறவேண்டும் என்றால், இதெல்லாம் மிகவும் முக்கியம். அதில் நான் என்னுடைய ஸ்பெஷலையும் கொஞ்சம் சேர்த்திருக்கிறேன். நாங்கள் முன்னால் சென்றுகொண்டிருக்கிறோம்" என்று கூறினார் சூர்யகுமார் யாதவ்.

களத்தில் சுதந்திரம் தெளிவு மிக முக்கியம்

மேலும், வீரர்களின் திறனை, அவர்களின் மனநிலையை அறிந்துகொள்வது மிகவும் முக்கியம் என்பதையும் கூறினார் அவர். "உங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்வது முக்கியம். அவர்கள் மனதில் என்ன ஓடுகிறது என்பதைப் புரிந்துகொண்டு அவர்களை அதற்கு ஏற்ப ஆறுதல் சொல்லவேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான திறமை இருக்கிறது. அனைவருமே அவரவர் திறனை வெளிக்காட்டவேண்டும் என்று விரும்புவார்கள். அவர்களுக்கு அந்த சுதந்திரம் கொடுப்பது அவசியம். அதைத்தான் நான் கொடுக்க முயற்சி செய்கிறேன்.

சூர்யகுமார் - சஞ்சு சாம்சன்

அவர்கள் மனதில் என்ன ஓடுகிறதோ, அதை நான் கவனமாக கவனிப்பேன். களத்துக்கு வெளியே நான் அவர்களோடு நேரம் செலவிட்டு அவர்களின் பலங்களை அறிந்துகொள்வேன். அந்தந்த சூழ்நிலைகளில், நெருக்கடியான சமயங்களில் யாரால் பங்களிக்கமுடியும் என்று அறிந்துகொள்வேன். அதைக் களத்தில் செயல்படுத்த முயற்சிப்பேன்.

இந்த ஃபார்மட்டைப் பொறுத்தவரை நீங்கள் விளையாட விளையாட நிறைய கற்றுக்கொள்வீர்கள். இது வேகமான ஆட்டம் வேறு. கண் மூடித் திறப்பதற்குள் ஆட்டம் உங்கள் கையை விட்டுப் போய்விடலாம். அதனால் களத்தில் இருக்கும்போது அந்த சுதந்திரமும் தெளிவும் மிகவும் முக்கியம்" என்றார் சூர்யா.

வேலையை எளிதாக்கும் வீரர்கள்

அதுமட்டுமல்லாமல் இந்த இளம் வீரர்கள் ஆடும் விதம் தனக்குப் புத்துணர்வாக இருப்பதாகவும், அவர்கள் மற்ற இடங்களில் எப்படி ஆடினார்களோ அப்படியே இங்கேயும் ஆடச்சொல்கிறோம் என்றும் கூறினார் அவர். "இந்த வீரர்கள் என் வேலையை எளிதாக்குகிறார்கள். கடந்த 2-3 சீசன்களைப் பார்த்தாலே உங்களுக்குத் தெரியும். அணியின் நலனை பிரதானப்படுத்தவேண்டும் என்பதை அவர்களின் நான் தெளிவாகக் கூறியிருக்கிறேன். நாங்கள் அவர்களின் முடிவுகளுக்கு நாங்கள் பக்கபலமாக இருப்போம் என்ற நம்பிக்கை கொடுத்திருக்கிறோம்.

வீரர்கள் ஒவ்வொருவருக்குமே அவர்கள் என்ன செய்யவேண்டும் என்பது நன்கு தெரியும். அவர்கள் தங்கள் மாநில அணிகளுக்கு, தங்கள் ஐபிஎல் அணிகளுக்கு என்ன மாதிரியான ஆட்டத்தை எவ்ளிப்படுத்துகிறார்களோ அதையே இங்கேயும் ஆடவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். ஜெர்சியின் நிறம் மாறும், எமோஷன்கள் சற்று அதிகமாகும். அவ்வளவு தான். மற்றபடி அவர்கள் என்ன மாதிரியான ஆட்டத்தை இதுவரை ஆடியிருக்கிறார்களோ அதையே இங்கேயும் வெளிப்படுத்தவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். அவர்கள் ஆடும் விதத்தைப் பார்க்கும்போது மிகவும் புத்துணர்வாக இருக்கிறது" என்றார் இந்திய டி20 கேப்டன்.

டெஸ்ட் கம்பேக் எப்போது?

அதுமட்டுமல்லாமல், சூர்யாவின் டெஸ்ட் கம்பேக் பற்றியும் கேட்கப்பட்டது. கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆன சூர்யா, அந்த ஒரு போட்டிக்குப் பிறகு வாய்ப்பு பெறவில்லை. எந்த ஸ்குவாடிலும் இடம்பெறுவதில்லை. இதுபற்றிப் பேசிய அவர், "சரியான நேரம் வரும்போது நான் நிச்சயம் டெஸ்ட் போட்டியில் கம்பேக் கொடுப்பேன். சிவப்புப் பந்தோ, வெள்ளைப் பந்தோ நான் டொமஸ்டிக் போட்டிகளில் தொடர்ந்து விளையாடிக்கொண்டிருக்கிறேன். எந்தப் போட்டியையும் நான் தவறவிடுவதில்லை. டெஸ்ட் போட்டியில் கம்பேக் நடக்கவேண்டும் என்று இருந்தால் அது நிச்சயம் நடக்கும்" என்று நம்பிக்கையோடு பேசினார்.