கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டி web
கிரிக்கெட்

கடைசி நாள்.. இறுதி 3 நிமிடம்.. வெற்றிக்கு 1விக். தேவை.. பேட்ஸ்மேனை சூழ்ந்த 11வீரர்கள்! த்ரில் போட்டி

Rishan Vengai

பொதுவாக இங்கிலாந்து வீரர்கள் வேகப்பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் சிறந்து விளங்குவார்கள் என்பது எல்லோருமே அறிந்தவிசயம் தான், ஆனால் முன்னாள் இங்கிலாந்து கேப்டனான மைக்கேல் வாகனின் மகன் தொடக்க பேட்ஸ்மேனாக இருப்பது மட்டுமில்லாமல், சுழற்பந்துவீச்சிலும் அசத்திவருகிறார்.

Archie Vaughan - Michael Vaughan

நேற்று முடிவை எட்டிய கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய மைக்கேல் வாகன் மகனான 18 வயது ஆர்ச்சி வாகன், இரண்டாவது இன்னிங்ஸிலும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்காக போராடினார்.

Archie Vaughan

சர்ரே மற்றும் சோமர்செட் அணிகள் மோதிய பரபரப்பான போட்டியில், இறுதி நாளின் கடைசி 3 நிமிடத்தில் சோமர்செட் அணி வெற்றிபெற 1 விக்கெட் தேவையாக இருந்தபோது, ஃபீல்டிங் செய்த 11 வீரர்களும் ஒரே ஃபிரேமில் இடம்பெற்றிருந்தனர்.

11 விக்கெட்டுகள் வீழ்த்திய ஆர்ச்சி வாகன்..

2024 கவுண்டி சாம்பியன்ஷிப்பின் 59வது போட்டியில் சர்ரே மற்றும் சோமர்செட் அணிகள் மோதின. முதலில் விளையாடிய சோமர்செட் அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய 18 வயதேயான ஆர்ச்சி வாகன் 44 ரன்கள் மற்றும் டாம் பாண்டன் சதமடித்து அசத்த முதல் இன்னிங்ஸில் சோமர்செட் 317 ரன்களை எடுத்தது.

அதற்குபிறகு விளையாடிய சர்ரே அணிக்கு எதிராக ஆர்ச்சி வாகன் 6 விக்கெட்டுகளும், ஜாக் லீச் 4 விக்கெட்டுகளும் வீழ்த்த முதல் இன்னிங்ஸில் 321 ரன்கள் சேர்த்தது.

Archie Vaughan

4 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய சோமர்செட் அணியை, தன்னுடைய அபாரமான பந்துவீச்சுமூலம் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி 224 ரன்னில் சுருட்டினார் ஷாகிப் அல் ஹசன்.

சர்ரே அணி வெற்றிக்கு 221 ரன்கள் தேவை என்ற இலக்குடன் விளையாடியது. யார் வெற்றிக்கு செல்லப்போகிறார்கள் என்ற பரபரப்பான கட்டத்தில் சர்ரே அணியின் தொடக்க வீரரான கேப்டன் ரோரியை 15 ரன்னில் வெளியேற்றிய ஆர்ச்சி வாகன், அடுத்துவந்த ரியான் பட்டேலை 0 ரன்னில் அவுட்டாக்கி வெளியேற்றினார். ஆர்ச்சியின் அசத்தலான பந்துவீச்சால் 46 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது சர்ரே அணி.

ஆனால் அதற்குபிறகு விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் விளையாடிய சர்ரே அணி 95/3 என்ற நிலையில் வலுவான நிலையில் இருந்தது. கடைசி செஸ்ஸனுக்கு சென்ற போட்டியில் தரமான ஸ்பின் அட்டாக்கை வெளிப்படுத்திய ஆர்ச்சி வாகன் மற்றும் ஜாக் லீச் இருவரும் 101/8 என்ற நிலைக்கு சர்ரே அணியை எடுத்துவந்தனர். ஆனால் அங்கிருந்து விக்கெட்டை விட்டுக்கொடுக்காத சர்ரே அணி போட்டியை சமனில் முடிக்க தேவையான அனைத்தையும் செய்தது.

கடைசி 3 நிமிடம்.. வெற்றிக்கு 1 விக்கெட் தேவை..

போட்டியின் இறுதி நாளான 4வது நாள் முடிய 10 நிமிடங்களே இருந்தது, சர்ரே அணி 101/8 என்ற நிலையில் போட்டியை விட்டுக்கொடுக்காமல் விளையாடிக்கொண்டிருந்தது. அங்கிருந்து விக்கெட்டை எடுக்க 11 ஓவர்கள் கடந்தும் சோமர்செட் அணியால் முடியவில்லை.

கடைசி 3 நிமிடங்களுக்கு போட்டி சென்றது, இறுதி 2 விக்கெட்டுகளை யார் வீழ்த்தப்போகிறார்கள் அல்லது சர்ரே அணி போட்டியை சமனுக்கு அழைத்துச்செல்ல போகிறதா என்ற பரபரப்பான கட்டத்திற்கு போட்டி சென்றது.

ஜாக் லீச்

சர்ரே போட்டியை சமன்செய்ய இறுதி 3 நிமிடங்களை தாக்குபிடிக்க வேண்டும், சோமர்செட் வெற்றிபெற 2 விக்கெட் தேவை என்ற நிலையில், 78வது ஓவரை வீசிய ஜாக் லீச் 9வது விக்கெட்டை எடுத்துவந்து ஆட்டத்தின் சூட்டை அதிகரிக்க செய்தார். இறுதியாக களத்திற்கு வந்த வீரர் முதல் பந்தை நிதானமாக டிஃபண்ட் செய்ய, சோமர்செட் அணிக்கு மேலும் டென்சன் அதிகரித்தது.

இப்போது போட்டி முடிய சில நிமிடங்களே இருந்த நிலையில், கடைசி விக்கெட்டுக்காக பேட்ஸ்மேனை 11 வீரர்களும் சூழ்ந்துகொண்டனர். இறுதிபேட்ஸ்மேனுக்கு இரண்டாவது பந்தை வீசிய ஜாக் லீச், LBW விக்கெட்டாக மாற்றி சோமர்செட் அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றார். ஆர்ச்சி வாகன் மற்றும் ஜாக் லீச் இருவரும் தலா 5 விக்கெட்டுகள் வீழ்த்த, சோமர்செட் அணி 111 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவுசெய்தது. பரபரப்பான ஒரு முடிவை எட்டிய கவுண்டி போட்டியை டெஸ்ட் கிரிக்கெட் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.