இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக ஒரு வரலாற்று வெற்றியை பெற்ற இங்கிலாந்து அணி தொடரை 1-0 என வெற்றிகரமாக தொடங்கியது.
ஆனால் அடுத்த இரண்டு போட்டிகளில் கம்பேக் கொடுத்த இந்திய அணி அபாரமான வெற்றியை பதிவுசெய்தது. இளம் வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால், சர்பராஸ் கான் மற்றும் துருவ் ஜுரேலின் அட்டகாசமான ஆட்டத்தால் இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்ற இந்தியா 2-1 என தொடரில் முன்னிலை வகித்துவருகிறது.
இந்நிலையில் தொடரின் 4வது டெஸ்ட் போட்டியானது முன்னாள் இந்திய கேப்டன் தோனி பிறந்த இடமான ராஞ்சியில் நடந்துவருகிறது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி ஜோ ரூட்டின் அசத்தலான சதத்தால் 353 ரன்கள் குவித்தது. அதன்பிறகு விளையாடிய இந்திய அணி இங்கிலாந்து ஸ்பின்னர் ஷோயப் பஷீரின் அற்புதமான பவுலிங்கால் 177 ரன்களுக்கு 7 விக்கெட்டை இழந்து தடுமாறியது. எப்படியும் இந்தியா இங்கிருந்து 200 ரன்களை எட்டுவதற்குள் ஆல் அவுட்டாகிவிடும் என்றே எல்லோராலும் எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் களத்திலிருந்த இளம் வீரர் துருவ் ஜுரேல் வேறு திட்டத்தை வைத்திருந்தார்.
8வது விக்கெட்டுக்கு களமிறங்கிய குல்தீப் யாதவுடன் ஒரு அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜுரேல், இந்தியாவை ஆரோக்கியமான ரன்களுக்கு எடுத்துச்சென்றார். ஒருபுறம் தன்னுடைய தடுப்பாட்ட திறமையை வெளிப்படுத்திய குல்தீப் யாதவ் 131 பந்துகளை சந்தித்து 28 ரன்கள் எடுக்க, மறுமுனையில் சிக்சர் பவுண்டரிகள் என வெளுத்துவாங்கிய ஜுரேல் இந்திய அணியை 300 ரன்களுக்கு அழைத்துச்சென்றார்.
எப்போது அடிக்க வேண்டும், எப்போது டெய்ல் எண்டர் பேட்டர்களுக்கு ஸ்டிரைக் கொடுக்க வேண்டும், எப்போது சிங்கிள் ஆடவேண்டும் என தனது அறிவுக்கு வேலைக்கொடுத்த ஜுரேல், இங்கிலாந்து அணியை மட்டுமல்ல இந்திய அணியையும் ஆச்சரியத்தில் தள்ளினார். ஒரு தரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜுரேல் 90 ரன்கள் எடுத்திருந்த போது டாம் ஹார்ட்லி பந்துவீச்சில் சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டு வெளியேறினார். ஆனால் அதற்குள் இந்திய அணிக்கு என்ன தேவையோ அதை தரமாக செய்துமுடித்துவிட்டு வெளியேறினார். ஒருவேளை அவரும் அவுட்டாகியிருந்தால் ஒரு கடினமான ஆடுகளத்தில் இங்கிலாந்து அணி தங்களுடைய கைகளை உயர்த்தியிருக்கும்.
ஜுரேலின் உதவியால் கடைசி 3 விக்கெட்டுகளுக்கு 130 ரன்கள் சேர்த்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 307 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. இங்கிலாந்து அணி 46 ரன்கள் முன்னிலை பெற்று விளையாடிவருகிறது.
தோனி பிறந்த மண்ணில் அவரை போன்ற திடமான மனநிலையுடன் ஒரு அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய துருவ் ஜுரேலை, தோனியுடன் ஒப்பிட்டு பாராட்டியுள்ளார் சுனில் கவாஸ்கர்.
போட்டி வர்ணனையின்போது பேசிய சுனில் கவாஸ்கர், “துருவ் ஜூரேலின் திடமான மனநிலையைப் பார்க்கும்போது, அவர்தான் அடுத்த எம்எஸ் தோனியாக இருக்கப்போகிறார் என்று நினைக்கிறேன். இன்று அவர் ஒரு சதத்தை தவறவிட்டிருக்கலாம், ஆனால் இந்த இளைஞன் அவருடைய ஸ்மார்ட்னஸ் மற்றும் திடமான மனநிலையை கொண்டு பல சதங்களை அடுத்தடுத்து அடிக்கப்போகிறார் என்பதில் சந்தேகமில்லை” என்று பாராட்டி கூறியுள்ளார்.
இரண்டாவது இன்னிங்ஸில் குல்தீப் யாதவ் மற்றும் அஸ்வினின் அபாரமான பந்துவீச்சால் 142 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து விளையாடிவருகிறது இங்கிலாந்து அணி.