Sarfaraz Khan - Sunil Gavaskar PT
கிரிக்கெட்

“100 சராசரி வைத்திருக்கிறார்; ரஞ்சி கோப்பையை தூக்கி எறியுங்கள்”- Sarfaraz இல்லாதது குறித்து கவாஸ்கர்

“கடந்த 3 ரஞ்சிக்கோப்பை சீசன்களில் 100 சராசரி வைத்திருக்கும் ஒரு வீரர் இந்திய அணியில் இடம்பிடிக்கவில்லை என்றால் ரஞ்சிக்கோப்பை நடத்துவதை நிறுத்திவிடுங்கள்” என்று இந்திய அணியின் தேர்வுக்குழுவை சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார் சுனில் கவாஸ்கர்.

Rishan Vengai

மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப் பயணம் செய்து விளையாடவிருக்கும் இந்திய அணி ஜூலை 12 தொடங்கி ஆகஸ்ட் 13ஆம் தேதி வரையில் 2 டெஸ்ட் போட்டி, 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் ஜூலை 12 மற்றும் ஜூலை 20ஆம் தேதிகளில் நடக்கிறது.

இந்நிலையில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. 16 பேர் கொண்ட டெஸ்ட் அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாகத் தொடர்கிறார். துணை கேப்டனாக மீண்டும் அஜிங்க்ய ரஹானே நியமிக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் போட்டிக்கான அணியில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய முகேஷ் குமார், ருதுராஜ் ஹெய்க்வாட் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் போன்ற வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். மேலும் விக்கெட் கீப்பர்களாக கே.எஸ்.பரத் மற்றும் இஷான் கிஷான் போன்ற வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.

இதில் ரஞ்சிக்கோப்பை போன்ற முதல் தர போட்டிகளில் சிறப்பாக விளையாடிவரும் வீரர்களுக்கு மீண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அதில் சர்ஃப்ராஸ் கான்-க்கு வாய்ப்பு வழங்கப்படாதது, தற்போது அதிகம் பேசுபொருளாக மாறியுள்ளது.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரிலும் தேர்வு செய்யப்படாத சர்ஃப்ராஸ் கான்!

கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் தொடரிலும் சர்ப்ராஸ் கானிற்கு இடம் கிடைக்காமல் போயிருந்தது. அதேநேரம் அதில் சூர்யகுமார் யாதவ் மற்றும் இஷான்கிஷான் இருவரும் தேர்வு செய்யப்பட்டனர். அப்போது முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் மற்றும் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இதுதொடர்பாக கேள்வி எழுப்பியிருந்தனர்.

சுனில் கவாஸ்கர்

சர்ப்ராஸ்கான் தேர்வு செய்யப்படாதது குறித்து பேசியிருந்த சுனில் கவாஸ்கர், “உருவத்தை பார்க்காதீர்கள். அவர் பேட் செய்யும் போது வெளியில் அமர்ந்து விளையாடவில்லை, களத்திற்கு வந்துதான் விளையாடினார். உங்களுக்கு ஒல்லியான வீரர்கள்தான் வேண்டுமென்றால், பேட்டையும் பந்தையும் தூக்கி வீசிவிட்டு ஃபேஷன் ஷோவுக்கு செல்லுங்கள்” என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.

அஸ்வின்

மேலும் அஸ்வின் பேசுகையில், “சர்ஃப்ராஸ் கான் தேர்வுக்குழு கதவை தட்டவில்லை, உடைத்திருக்கிறார்” என்று கூறினார். அதற்கு பிறகு பேசியிருந்த அப்போதைய தேர்வுக்குழு கமிட்டி தலைவர், “சர்ஃப்ராஸ் கானை நாங்கள் தொடர்ந்து பார்த்து தான் வருகிறோம். அவருக்கான நேரம் வரும் போது அவர் இந்திய அணியில் இடம்பிடிப்பார்” என்று கூறியிருந்தார். இந்நிலையில் மீண்டும் சர்ஃப்ராஸ் கான் அணிக்குள் எடுக்கப்படாதது ரசிகர்களிடையே மட்டுமில்லாமல் முன்னாள் வீரர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

100 சராசரியுடன் இருக்கும் ஒரு வீரர் வேறென்ன செய்யவேண்டும்?

தற்போது வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான டெஸ்ட் அணியில் சர்ப்ராஸ் கான் இடம்பெறாதது குறித்து பேசியிருக்கும் சுனில் கவாஸ்கர், “சர்ஃப்ராஸ் கான் கடந்த மூன்று ரஞ்சிக்கோப்பை சீசன்களிலும் 100 சராசரிக்கு மேல் ரன்களை எடுத்துள்ளார். இந்திய அணியில் இடம்பெறுவதற்கு ஒரு இளம் வீரருக்கு இந்த தகுதி போதாதா? மாறாக ஒரு வீரர் வேறு என்ன தான் செய்ய வேண்டும். ஒருவேளை அவர் லெவனில் இல்லாமல் போனாலும், நீங்கள் அவரை அணியிலாவது தேர்வு செய்திருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

மேலும் "அவருடைய ரன் குவிப்புகளும், தொடர்ந்து சிறப்பாக விளையாடிவரும் அவருடைய அபாரமான ஆட்டமும் இந்திய அணியால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்றாவது அவரை அழைத்து கூறுங்கள். இல்லையெனில், ரஞ்சி ட்ராபி விளையாடுவதை தூக்கி போடுங்கள். அதுவும் முடியவில்லை என்றால் ‘ரஞ்சிக்கோப்பை விளையாடுவதால் எந்தப் பயனும் இல்லை, மாறாக நீங்கள் ஐபிஎல்லில் சிறப்பாக விளையாடுங்கள், அதுவே இந்திய அணியின் சிவப்பு பந்து விளையாட்டிற்கு போதுமானது’ என்று கூறிவிடுங்கள்" என்று ஸ்போர்ட்ஸ் டுடேவிடம் கவாஸ்கர் காட்டமாக கூறியுள்ளார்.

டான் பிராட்மேனுக்கு அடுத்த இடத்தில் சர்ஃப்ராஸ் கான்!

எக்காலத்திற்கும் சிறந்த வீரராக கருதப்படும் ஆஸ்திரேலிய முன்னாள் ஜாம்பவான் வீரரான டான் பிராட்மேனின் டெஸ்ட் சராசரிக்கு அடுத்த இடத்தில் சர்ஃப்ராஸ் கான் இருக்கிறார். முதல்தர போட்டிகளில் அதிகப்படியான டெஸ்ட் சராசரி வைத்திருக்கும் வீரர்களில் 95.14 சராசரியுடன் டான் பிராட் மேன் முதலிடத்திலும், 79.65 சராசரியுடன் சர்ஃப்ராஸ் கான் 2-ஆம் இடத்திலும், 71.64 சராசரியுடன் மெர்சண்ட் 3-வது இடத்திலும் இருக்கின்றனர். சமகால கிரிக்கெட் விளையாடும் வீரர்களில் பஹிர் ஷா என்ற வீரர் மட்டும் தான் 63 சராசரியுடன் விளையாடி வருகிறார். அவரும் தரவரிசையில் 8ஆவது இடத்தில் இருக்கிறார்.

கடந்த 3 ரஞ்சிக்கோப்பை சீசன்களை பொறுத்தவரையில், கடந்த 2019-20ஆம் ஆண்டு ரஞ்சி சீசனில் 154.66 சராசரியுடன் 998 ரன்களையும், 2021-22 ரஞ்சி சீசனில் 122.75 சராசரியுடன் 982 ரன்களையும், 2022-2023 ரஞ்சி சீசனில் 92.66 சராசரியுடன் 556 ரன்களும் அடித்து அசத்தியுள்ளார் சர்ஃப்ராஸ் கான்.