Stuart Broad  Kirsty Wigglesworth
கிரிக்கெட்

Stuart Broad | ஓய்வு பெற்றார் ஆஷஸ் ஜாம்பவான்... 847 விக்கெட்டுகள், எண்ணற்ற நினைவுகள்!

40 ஆஷஸ் போட்டிகளில் 153 விக்கெட்டுகள் அள்ளியிருக்கும் பிராட், ஒரு ஆஷஸ் ஜாம்பவானாகவே உருவெடுத்திருக்கிறார்.

Viyan

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் டெஸ்ட் பௌலர் ஸ்டுவர்ட் பிராட் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருக்கிறார். ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியின் கடைசி விக்கெட்டை வீழ்த்தி கெத்தாக கிரிக்கெட் அரங்கிலிருந்து வெளியேறியிருக்கிறார் அவர்.

ஸ்டுவர்ட் பிராட் - இந்திய ரசிகர்கள் ஒவ்வொருவருக்கும் இந்தப் பெயரைக் கேட்டால் நினைவுக்கு வருவது 2007 டி20 உலகக் கோப்பை தான். இவரது பந்துவீச்சில் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் விளாசி சரித்திரம் படைத்தார் இந்திய ஆல் ரவுண்டர் யுவ்ராஜ் சிங். எந்த இங்கிலாந்தை வீரரையும் கூட மறந்துவிடுவோம். ஆனால் பிராடை மறக்க மாட்டோம். அவரது கிரிக்கெட் வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே அப்படியொரு பேரடி வாங்கியிருந்தார் பிராட்.

சொல்லப்போனால் அந்த சமயத்தில் அவர் சர்வதேச அரங்கில் ஒரு ஆண்டு தான் நிறைவு செய்திருந்தார். 2006 ஆகஸ்ட் 28 தான் தன் முதல் சர்வதேச போட்டியில் விளையாடினார் பிராட். முதலில் இங்கிலாந்து டி20 அணிக்கு அறிமுகம் ஆனவருக்கு அதே ஆண்டு ஒருநாள் அணியில் இடம் கிடைத்தது. 2007 டி20 உலகக் கோப்பை முடிந்துதான் அவருக்கு டெஸ்ட் அறிமுகமே கிடைத்தது. யுவ்ராஜ் சிங்குக்கு எதிராக அவர் வாங்கிய அடி அவரது கரியரை பெரிதாக பாதிக்கவில்லை. இங்கிலாந்து அணியின் நிர்வாகம் அவரை நம்பியது. அவரும் தனக்குக் கிடைத்த வாய்ப்பை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு தன் திறமையை நிரூபிக்கத் தொடங்கினார்.

Stuart Broad

முதல் டெஸ்ட் போட்டியில் ஒரு விக்கெட்டே எடுத்திருந்தாலும், அதற்கடுத்த தொடரில் ஓரளவு சிறப்பாக செயல்பட்டார். நியூசிலாந்தில் நடந்த 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 8 விக்கெட்டுகள் வீழ்த்தினார் அவர். அதன்பிறகு அந்த அணியின் ரெகுலர் பௌலராக உருவெடுத்தார். டெய்ல் எண்டில் அவரது பேட்டிங் சிறப்பாக இருக்கும், அணியில் தன் இடத்தை நிலைநிறுத்திக்கொள்ள அதுவும் பெரிதாக உதவியது. தன் முதல் 10 போட்டிகளில் 33.9 என்ற சராசரியில் 373 ரன்கள் எடுத்தார் அவர். அதுபோக 26 விக்கெட்டுகளும் வீழ்த்தினார். ஒரேயொரு போட்டியில் மட்டுமே விக்கெட் வீழ்த்தத் தவறியிருந்தார் பிராட். அதன்பிறகு அவர் டெஸ்ட் கரியர் முன்னோக்கியே பயணித்தது.

டெஸ்ட் கிரிக்கெட் போல் டி20 மற்றும் ஒருநாள் அரங்கில் பிராடால் மிகப் பெரிய தாக்கம் ஏற்படுத்த முடியவில்லை. 56 சர்வதேச டி20 போட்டிகளில் 65 விக்கெட்டுகள் வீழ்த்திய அவர் 2014ம் ஆண்டுக்குப் பிறகு சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடவில்லை. 121 ஒருநாள் போட்டிகளில் 178 விக்கெட்டுகள் எடுத்தவர், 2016ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்காக தன் கடைசி ஒருநாள் போட்டியில் விளையாடினார். அதன்பிறகு முழுக்க முழுக்க டெஸ்ட் போட்டியில் கவனம் செலுத்தத் தொடங்கினார். தொடர்ந்து மிகச் சிறப்பாக செயல்பட்ட அவர், இங்கிலாந்தின் மிகச் சிறந்த டெஸ்ட் பௌலர்களுள் ஒருவராகப் புகழப்பட்டார்.

Stuart Broad

கடைசி ஓரிரு ஆண்டுகளில் இங்கிலாந்து அணி பந்துவீச்சில் ரொடேஷன் பாலிசியைப் பயன்படுத்தத் தொடங்கியது. அதனால் சீனியர்கள் ஜேம்ஸ் ஆண்டர்சன், பிராட் இருவருக்கும் அவ்வப்போது போட்டிகளுக்கு இடையே ஓய்வளிக்கப்பட்டது. அப்படிப்பட்ட காலகட்டத்திலும் சிறப்பாகப் பந்துவீசினார் பிராட். சமீபத்தில் நடந்து முடிந்த ஆஷஸ் தொடரில் ஆண்டர்சன், ஆலி ராபின்சன் போன்ற வேகப்பந்துவீச்சாளர்கள் ரொடேட் செய்யப்பட்டாலும் பிராட் ஐந்து போட்டிகளிலுமே ஆடினார். அதிலும் சிறப்பாக செயல்பட்டு 22 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார் அவர். மிட்செல் ஸ்டார்க்குக்குப் பிறகு இந்தத் தொடரில் இரண்டாவது அதிகபட்ச விக்கெட்டுகள் வீழ்த்தியவர் அவர்தான்.

இந்தத் தொடரில் மட்டுமல்ல, ஒட்டுமொத்தமாகவே ஆஷஸ் அரங்கில் தன் பெயரை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் பிராட். ஆஷஸ் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் வார்னே, மெக்ராத் ஆகியோருக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் இருப்பது அவர்தான். இங்கிலாந்து பௌலர்களில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியிருப்பது இவரே! 40 ஆஷஸ் போட்டிகளில் 153 விக்கெட்டுகள் அள்ளியிருக்கும் பிராட், ஒரு ஆஷஸ் ஜாம்பவானாகவே உருவெடுத்திருக்கிறார்.

ஒட்டுமொத்தமாக டெஸ்ட் அரங்கில் 604 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியிருக்கிறார் ஸ்டுவர் பிராட். டெஸ்ட் அரங்கில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பௌலர்கள் வரிசையில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறார் அவர். வேகப்பந்துவீச்சாளர்களில் ஆண்டர்சனுக்குப் பிறகு அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியிருப்பது இவர்தான்.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள்:

முத்தையா முரளிதரன் - இலங்கை - 800 விக்கெட்டுகள்
ஷேன் வார்னே - ஆஸ்திரேலியா - 708 விக்கெட்டுகள்
ஜேம்ஸ் ஆண்டர்சன் - இங்கிலாந்து - 690 விக்கெட்டுகள்
அனில் கும்பிளே - இந்தியா - 619 விக்கெட்டுகள்
ஸ்டுவர்ட் பிராட் - இங்கிலாந்து - 604 விக்கெட்டுகள்