பதிரானா ட்விட்டர்
கிரிக்கெட்

WorldCup2023: தோனியால் பட்டை தீட்டப்பட்ட பதிரானா படைத்த மோசமான சாதனை!

Prakash J

இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடர், ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறது. ஐபிஎல் போட்டியையே மிஞ்சுகிற பேட்டர்கள் அதிரடி சாகசம் நிகழ்த்தி வருகின்றனர். அது ஒருபுறமிருக்க, மறுபுறம் அவர்களின் மட்டைக்குத் தீனி போடும் விதமாக பந்துவீச்சாளர்களும் மாறிவருவதுதான் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தென்னாப்பிரிக்கா

உலகக்கோப்பையில் அதிக ரன்கள் குவித்த தென்னாப்பிரிக்கா

உலகக்கோப்பை தொடரில் இன்று (அக். 7) இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு இடையே 4வது லீக் போட்டி நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்கா அணி, இலங்கையை வதம் செய்தது. அவ்வணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 428 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்தது. இதன்மூலம் உலகக்கோப்பை தொடரில் அதிகபட்ச ரன்களைக் குவித்த அணியாக இதுவரை வலம்வந்த ஆஸ்திரேலியாவைப் பின்னுக்குத் தள்ளியுள்ளது. அவ்வணி, கடந்த 2015 உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 417 ரன்கள் குவித்ததே இதுவரை சாதனையாக இருந்தது. அதை, தென்னாப்பிரிக்கா அணி இன்று முறியடித்துள்ளது.

இதையும் படிக்க: WC2023: அதிர்ஷ்டமில்ல.. ஆனால்? உலகக்கோப்பையிலும் ODIயிலும் சம்பவம் செய்யும் தென்னாப்பிரிக்கா அணி!

ஒரே போட்டியில் பல சாதனைகளைப் படைத்த தென்னாப்பிரிக்கா

மேலும், இன்றைய போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியைச் சேர்ந்த டிகாக் 84 பந்துகளில் 100 ரன்களும், ரஸ்ஸி வான் டர் டஸ்ஸன் 110 பந்துகளில் 108 ரன்களும், மார்க்ரம் 54 பந்துகளில் 106 ரன்களும் எடுத்தனர். இதில் மார்க்ரம் 49 பந்துகளில் சதமடித்ததன் மூலம் உலகக்கோப்பையில் குறைந்த பந்துகளில் சதமடித்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார். பின்னர் வந்த வீரர்களும் சிறப்பாக விளையாட தென்னாப்பிரிக்க அணி, 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 428 ரன்கள் குவித்தது. இதன்மூலம் நடப்பு உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்த அணியாகவும், உலகக்கோப்பையிலேயே அதிக ரன்கள் குவித்த அணியாகவும் புதிய சாதனை படைத்துள்ளது.

தென்னாப்பிரிக்கா

உலகக்கோப்பையில் மோசமான சாதனை படைத்த முதல் இலங்கை பந்துவீச்சாளர்!

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பதிரானா, இன்றைய போட்டியில் 10 ஓவர்கள் வீசி, 95 ரன்களை வாரி வழங்கியுள்ளார். மேலும், இந்தப் போட்டியில் ஒரே ஓவரில் மட்டும் 26 ரன்களையும் வழங்கியுள்ளார். இதன்மூலம் உலகக்கோப்பை வரலாற்றில் அதிக ரன்களை வழங்கிய இலங்கை வீரராக பதிரானா புதிய சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்பு, 1987இல் நடைபெற்ற உலகக்கோப்பையின்போது அஷாந்தா டி மெல் வழங்கிய 91 ரன்களே மோசமான சாதனையாக இருந்தது.

இதையும் படிக்க: 20 நிமிடங்களில் 5,000 ஏவுகணைகள்... இஸ்ரேலைச் சிதைத்த பாலஸ்தீன ஆயுதக்குழு! போர் பதற்றம் அதிகரிப்பு!

யார் இந்த பதிரானா?

இலங்கையின் ‘குட்டி மலிங்கா’ என்று அழைக்கப்படும் இவர், கடந்த ஆண்டு முதல் ஐபிஎல் சீசனில் சென்னை அணியில் இடம்பிடித்திருந்ததுடன், அணி கேப்டன் தோனியாலும் பட்டை தீட்டப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் சீசனில் இவருடைய பங்களிப்பு சிறப்பாக இருந்தது.

சமீபத்தில், ஆசியக்கோப்பை தொடரில் பங்கேற்றிருந்த இவர், வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்டில் குறைந்த வயதில் 4 விக்கெட்களை வீழ்த்திய இளம்பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.