suryakumar catch web
கிரிக்கெட்

“சூர்யகுமார் கேட்ச்சை இப்படி செக் பண்ணிருந்தா நாங்க வென்றிருப்போம்” - வீடியோ ஒன்றை பகிர்ந்த SA வீரர்

Rishan Vengai

ஒருபுறம் விராட் கோலியின் அரைசதம், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியாவின் அபார பந்துவீச்சு, சூர்யகுமார் யாதவ் பிடித்த கேட்ச் ஆகியவற்றால் 2024 டி20 உலகக்கோப்பையை இந்தியா மீண்டும் உச்சி முகர்ந்தது. இந்த மகிழ்ச்சியை, உலகம் முழுவதும் உள்ள இந்திய ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். இந்திய மக்களுக்கு உலகக்கோப்பையை வெல்வது எந்தளவு முக்கியம் என்பதற்கு மும்பையில் கடல்போல சூழ்ந்த ரசிகர்கள் சான்றாக அமைந்தனர்.

virat kohli - rohit sharma

மற்றொரு புறம் நாக் அவுட் போட்டிகளின் ‘சோக்கர்ஸ்’ என்று அழைக்கப்பட்ட தென்னாப்பிரிக்கா அணி, உலகக்கோப்பையை முதல்முறையாக உச்சிமுகரும் இடத்திலிருந்து தோல்வியை சந்தித்தது. காலம் காலமாக சோக்கர்ஸ் என்ற பெயரை சுமந்துவந்த தென்னாப்பிரிக்கா வீரர்களுக்கு, அந்த தோல்வி மிகப்பெரிய வலியாக அமைந்தது. 30 பந்துக்கு 30 ரன்கள் தேவை என்ற இடத்திலிருந்து தோற்றபிறகு ஒரு வாரம் உறங்கவில்லை என்ன தென்னாப்பிரிக்காவின் கேப்டன் எய்டன் மார்க்ரம் கூறியிருந்தார். அப்படி தென்னாப்பிரிக்கா வீரர்களின் தூக்கத்தை கெடுத்தவர்களில் சூர்யகுமாரும், அவர் பிடித்த கேட்ச்சும் முக்கியமானதாக அமையும்.

இந்த நிலையில், சூர்யகுமார் யாதவ் டி20 உலகக்கோப்பை பைனலில் பிடித்த வெற்றி கேட்ச்சை இந்தமுறையில் சரிபார்த்திருந்தால் அது நாட்அவுட் கொடுக்கப்பட்டிருக்கும் என தென்னாப்பிரிக்கா வீரர் ஷம்சி பகிர்ந்துள்ளார்.

இப்படி செக் பண்ணிருந்தா அது நாட்அவுட்..

சூர்யகுமார் யாதவ் ஒரு க்ளீன் கேட்ச்சை எடுத்திருந்தாலும், அவர் கேட்ச் பிடித்த போது எல்லைக்கோட்டை நிர்ணயிக்கும் குஸ்ஸன் தள்ளிப்போயிருந்ததாகவும், ஒருவேளை அது சரியான இடத்தில் இருந்திருந்தால் தென்னாப்பிரிக்கா வெற்றிபெற்றிருக்கும் என்றும் அப்போது பல முன்னாள் வீரர்களால் கூறப்பட்டது.

சூர்யகுமார் கேட்ச்

இந்நிலையில் அதேகருத்தை மையப்படுத்தும் வகையில் வீடியோஒன்றை தென்னாப்பிரிக்கா வீரர் ஷம்சி பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், பேட்ஸ்மேன் பந்தை தூக்கி சிக்ஸ் லைனுக்கு அடிக்கிறார், அதை சிக்சர் லைனில் கேட்ச்பிடித்திவிட்டு ஃபீல்டர் அவுட் என கையைதூக்குகிறார். ஆனால் எதிரணி வீரர்கள் ஒரு கயிற்றை எடுத்துவந்து எல்லைக்கோட்டின் இரு பாய்ண்ட்டையும் பிடித்து நீங்கள் கோட்டிற்கு அந்தப்பக்கம் கால்வைத்துவிட்டீர்கள் இது அவுட்டில்லை என வாக்குவாதம் செய்கிறார்கள்.

இதை பகிர்ந்திருக்கும் ஷம்சி, “இப்படியான முறையில் சூர்யகுமார் யாதவின் கேட்ச் சரிபார்க்கப்பட்டிருந்தால் அது நாட் அவுட் கொடுக்கப்பட்டிருக்கும்” என பதிவிட்டுள்ளார்.

இது சர்ச்சைக்குரிய வகையில் பார்க்கப்பட்டதால் அதே பதிவில் “இது ஒரு நகைச்சுவை பதிவு” எனவும் பதிவிட்டுள்ளார். ஆனாலும் ரசிகர்கள் விமர்சித்துவருகின்றனர்.