india team, du plessis twitter
கிரிக்கெட்

“இந்தியாவின் தோல்வி காதலியின் பிரிவை போன்றது” - உலகக்கோப்பை குறித்து பாஃப் டு பிளெசிஸ்!

“இந்திய அணியின் தோல்வி, காதலியை பிரிந்துசெல்வது போன்றது” என தென்னாப்பிரிக்க வீரர் பாஃப் டு பிளெசிஸ் தெரிவித்துள்ளார்.

Prakash J

உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் மீண்டும் கோப்பையை இழந்தது தற்போதுவரை விமர்சனமாகவே இருக்கிறது. இதுகுறித்து பல்வேறு விமர்சனங்கள் வந்தபடியே உள்ளன. இந்த நிலையில், இந்திய அணியின் தோல்வியை காதலியின் பிரிவோடு ஒப்பிட்டுள்ளார், தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் பாஃப் டு பிளெசிஸ்.

india team

இதுகுறித்து அவர், "இது ஒரு பெரிய சவால். 2015 உலகக்கோப்பையில் இதுபோன்ற தருணங்களை நாங்கள் கடந்து சென்றோம். அப்போது ஒரு கிரிக்கெட் வீரராக இந்த அனுபவத்தை நான் பெரிதும் சந்தித்தது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. அதுபோல் இப்போதும் அவர்களின் (இந்திய வீரர்கள்) மனவேதனை தீர்வதற்கு இன்னும் சிறிது காலம் எடுக்கும். மேலும், அது காதலியைப் பிரிந்துசெல்வது போன்றது. நீங்கள் அதை உடனடியாக கடந்துசெல்ல முடியாது.

இந்த உலகக்கோப்பையில் இந்திய அணி விளையாடிய விதம் ஆச்சர்யமாக இருந்தது. அவர்களுடைய வெற்றியும் திறமையும் நம்பமுடியாததாக இருந்தது. அதேவழியில், இதயம் உடைந்துபோகும் அளவுக்கு இந்த தோல்வியையும் உணருவார்கள். எனினும், அவர்கள் உலகக்கோப்பையை வெல்வதற்கு சிறிது நேரம் எடுக்கும். அதற்கான காலம் அனைத்தையும் தீர்வு செய்யும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: ஹரியானா | “அம்மாவே என்னை 4 லட்சத்துக்கு வித்துட்டாங்க”- காப்பாற்றக்கோரி போலீசில் தஞ்சமடைந்த இளம்பெண்

முன்னதாக, 2024 டி20 உலகக்கோப்பையில் தான் மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்ப முடியும் என நம்பிக்கை அளித்துள்ளார் அவர். டு பிளெசிஸ் 2021இல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றார். 2021ஆம் ஆண்டு ராவல்பிண்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்குப் பிறகு டு பிளெசிஸ் எந்த ஒரு சர்வதேசப் போட்டியிலும் விளையாடவில்லை. தென்னாப்பிரிக்காவுக்கான வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் டு பிளெசிஸ் கடைசியாக கடந்த 2020 டிசம்பரில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் விளையாடினார்.

டு பிளெசிஸ்

டு பிளெசிஸ் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் இருந்து அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெறவில்லை. கடந்த 2014 மற்றும் 2016 டி20 உலகக்கோப்பைகளில் தென்னாப்பிரிக்கா அணிக்கு டு பிளெசிஸ் கேப்டனாக இருந்தார். ஆனால் கடைசி இரண்டு டி20 உலகக்கோப்பைகளுக்கு அவரது பெயர் பரிசீலிக்கப்படவில்லை. 39 வயதான டு பிளெசிஸ், சமீபகாலமாக உள்நாட்டு அளவில் நடைபெறும் டி20 போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் 2023 ஏலத்தில் டு பிளெசிஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியால் வாங்கப்பட்டார். ஐபிஎல் 2023இல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக 14 போட்டிகளில் விளையாடிய டு பிளெசிஸ் 730 ரன்கள் எடுத்தார். அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் சுப்மன் கில்லுக்கு அடுத்தபடியாக டு பிளெசிஸ் இரண்டாவது இடத்தில் இருந்தார்.

இதையும் படிக்க: மஹுவா மொய்த்ராவின் எம்.பி பதவி பறிப்பு? என்ன நடந்தது? மம்தா சொல்வதென்ன?