வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள தென்னாப்பிரிக்கா அணி 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது.
முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணியும், பிராத்வெயிட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. விறுவிறுப்பாக நடைபெற்ற முதல் போட்டியில் இரு அணி வீரர்களும் வெற்றிக்காக போராடிய நிலையில் ஆட்டம் சமனில் முடிந்தது.
இந்நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியானது கயானாவில் உள்ள புரொவிடன்ஸ் ஸ்டேடியத்தில் நடைபெற்றது, இந்த போட்டியில் முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி ஷமர் ஜோசப்பின் 5 விக்கெட்டுகள் பந்துவீச்சால் 160 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது, அதற்குபிறகு ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி வியான் முல்டரின் 4 விக்கெட்டுகள் பந்துவீச்சால் 144 ரன்களுக்கு ஆல்அவுட்டானது.
இந்நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய தென்னாப்பிரிக்கா அணிக்கு தன்னுடைய அபாரமான பந்துவீச்சால் பதிலடி கொடுத்த மற்றொரு வெஸ்ட் இண்டீஸ் பவுலரான ஜெய்டன் சீல்ஸ் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி 246 ரன்களுக்கு சுட்டி அசத்தினார்.
தென்னாப்பிரிக்காவின் இரண்டாவது இன்னிங்ஸ் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெற 263 ரன்களே தேவைப்பட்டது. எப்படியும் இந்த ரன்களை வெஸ்ட் இண்டீஸ் எடுத்து தொடரை கைப்பற்றும் என நினைத்தவேளையில், டாப் ஆர்டர் வீரர்கள் யாரும் பெரிய ஆட்டத்தை ஆடவில்லை.
104 ரன்களுக்கே 6 விக்கெட்டுகள் இழந்த நிலையில், அங்கிருந்து வெஸ்ட் இண்டீஸ் அணியால் 222 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதிகப்பட்சமாக ரபாடா மற்றும் கேசவ் மகாராஜ் இருவரும் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 40 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, தென்னாப்பிரிக்காவிடம் 1-0 என தொடரை இழந்தது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-0 என வென்றதால் தென்னாப்பிரிக்கா அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. முதல் 4 இடங்களை இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இலங்கை அணிகள் நிரப்பியுள்ளன.